ஆன்மிகம்

யான் சத்தியம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே ?

சாமி ’ராமர் பேசிய மெய்யும், கிருஷ்ணர் பேசிய பொய்யும் நமக்குத் தஞ்சம்’ என்பார்கள் பெரியோர்கள் என்று கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

கண்ணன் சின்னக் குழந்தையாகப் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எல்லா வீடுகளுக்கும் சென்று வெண்ணெய் திருடுவான். சாப்பிட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் இருக்கிறதா என்று பானையில் எட்டிப்பார்க்கும்போது மாட்டிக்கொள்வான். ”என்னடா செய்கிறாய்?” என்று கேட்டால் “மாமி எங்கள் வீட்டு மாடு நேற்று கன்றுக்குட்டி போட்டது அதைக் காணலை… இந்தப் பானைக்குள் இருக்கா என்று பார்த்தேன்” என்று பொய் சொல்லுவான்.

குழந்தை விளையாட்டுக்குப் பொய் சொல்லுகிறது என்று விட்டுவிடலாம் ஆனால் மஹாபாரத போரில் எவ்வளவு பொய்கள் அப்பப்பா ” என்று அந்தச் சின்னப் பெண் நிறுத்தினாள்.

“அப்படியா ? என்ன என்ன பொய்கள் கொஞ்சம் சொல்லுப் பார்க்கலாம்” என்றார் ராமானுஜர்.

அர்ஜுனனுடைய மகன் அபிமன்யு. அபிமன்யுவைச் சிந்து தேசத்து மன்னன் ஜயத்ரதன் வதம் செய்துவிட்டான். அர்ஜுனனுக்குக் கோபம் வந்தது. ஜயவரதனை மாலைக்குள் முடிக்கிறேன் என்று சபதம் செய்தான். ஆனால் ஜயத்ரதன் பாதுகாப்பான இடத்திலிருந்தான். அர்ஜுனன் நெருங்க முடியவில்லை. மாலைப் பொழுது நெருங்கிவிட்டது. அர்ஜுனனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சபதத்தை நிறைவேற்ற முடியலையே என்று கலங்கினான்.

கண்ணன் பார்த்தார், தன் சக்கரத்தை எடுத்துக் கழட்டிவிட்டார். அந்தச் சக்கரம் நேராகச் சூரியனைச் சென்று மறைத்தது. எங்கும் ஒரே இருள். மாலைப் பொழுது முடிந்து, இரவு வந்துவிட்டது. அர்ஜுனன் சபதத்தில் தோற்றுவிட்டான் என்று தைரியமாக ஜயத்ரதன் வெளியே வந்தான். உடனே அர்ஜுனன் அவனைக் கொன்றுவிட்டான். சக்கரம் பழையபடி கண்ணன் கைளில் வந்தது. சூரியன் திரும்ப வந்தது. இது ஏமாற்று வேலை தானே ? என்றாள் அந்தப் பெண்.

“ஆமாம் ஆமாம்” என்றார் ராமானுஜர் சிரித்துக்கொண்டு.

“இன்னொரு கதை கேளுங்கள்” என்று அந்தப் பெண் இன்னொரு கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

பாரதப் போர் நடக்கிறது. துரோணரை அடிப்பது பாண்டவர்களுக்குக் கடினமாக இருந்தது. துரோணர் எல்லோருக்கும் வில் வித்தை சொல்லிக்கொடுத்த ஆசிரியர். அவரை எப்படி வதம் செய்வது என்று குழம்பினார்கள். அவருடைய கவனம் சிதறினால் அடித்துவிடலாம். ஆனால் அவருடைய கவனம் முழுவதும் சண்டையிடுவதிலேயே இருந்தது.

கண்ணன் பீமனைக் கூப்பிட்டு “அஸ்வத்தாமா என்ற யானை கொல்லப்பட்டது” என்று சொல்லச் சொன்னார். அப்படிச் சொல்லும்போது ‘என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல்லு என்றார். பீமனும் ”அஸ்வத்தாமா (என்ற யானை) கொல்லப்பட்டது” என்று கூறினான். அது துரோணரின் காதில் விழுந்தது. உடனே அவர் தன்னுடைய மகன் அஸ்வதாமன் மடிந்துவிட்டான் என்று நினைத்து, தன் ஆயுதங்களைக் கீழே போட்டுக் கலங்கினார். இது தான் சரியான சமயம் என்று அவரை அடித்து வீழ்த்தினார்கள்.


”இதுவும் ஏமாற்று வேலை தானே ?” என்றாள் அந்தப் பெண்.

ராமானுஜர் “நிச்சயமாகப் பெண்ணே இதில் என்ன சந்தேகம்!” என்றார்.

மற்றொன்று சொல்கிறேன் அதையும் கேளுங்கள் ”போரில் ஆயுதங்கள் இல்லை என்றால் ஒருவனை அடிக்கக் கூடாது.

ராவணன் கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும்போது ராமர் என்ன செய்தார் ?” என்று அந்த பெண் கொஞ்சம் நிறுத்தினாள்.

“இன்று போய் நாளை வா என்று ராவணனை திருப்பி அனுப்பினார் ராமர்” என்றார் ராமானுஜர்.

“இது தான் வீரனுக்கு அழகு. இத்தனைக்கும் ராவணன் ராமருடைய மனைவி சீதையை அபகரித்துச் சென்றவன். ஆனால் ராமர் யுத்த விதிகளுக்குக் கட்டுப்பட்டார். ஆனால் இந்த கிருஷ்ணன் கர்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நடந்தபோது கர்ணனின் தேர் சக்கரம் ஒன்று பூமியில் அழுந்திவிட்டது. கர்ணன் கீழே இறங்கித் தேர் சக்கரத்தைத் தூக்க முயன்றான்.

உடனே யுத்த விதிகளுக்கு மாறாக அர்ஜுனனை வில்லால் அடிக்கச் சொன்னார் கண்ணன். உடனே கண்ணன் சொல்லிவிட்டான் என்று அர்ஜுனன் அடிக்கக் கர்ணன் மாண்டான். இது சரியா நீங்களே சொல்லுங்கள் என்றாள் அந்தப் பெண்.

”என்ன ஒரு போக்கிரித்தனம் இந்தக் கிருஷ்ணனுக்கு” என்றார் உடையவர்.

அந்தப் பெண் சிரித்துக்கொண்டு ”போக்கிரித்தனம் போரில் மட்டும் இல்லை, கோபியர்கள் குளிக்கும்போது துணிகளை எடுத்து வைத்துக்கொள்வது.. என்று பெரிய பட்டியல் இருக்கு! பரிக்ஷித் பிழைத்த கதையைக் கேளுங்கள்” என்றாள்

“இன்னொரு கதையா ? சொல்லுப் பெண்ணே!” என்றார் உடையவர்.

“அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அவனுடைய மனைவி உத்தரை. அபிமன்யு இறந்தபோது அவள் கர்ப்பமாக இருந்தாள். போர் முடிந்த பின் பாண்டவர்களின் மீது உள்ள விரோதத்தால் அஸ்வத்தாமா பிரமாஸ்திரத்தை ஏவினான். கண்ணன் அதைத் தடுத்தான் இருந்தாலும் அந்தப் பிரமாஸ்திரம் உத்திரையின் வயிற்றில் பட்டுக் கருவிலிருந்த குழந்தை கரிக்கட்டையாக வெளியே வந்து விழுந்தது.

அப்போது ஆகாசத்தில் ஒரு அசரீரி குரல் கேட்டது “யார் பிரம்மச்சரியத்துடன், நல்லொழுக்கம், சத்தியம் பேசுகிறானோ அவன் இந்தக் குழந்தையைத் தடவினால் பிழைத்துக்கொள்ளும்” என்றது. இதைக் கேட்ட எல்லோரும் அந்தக் குழந்தையைத் தடவ முன்வரவில்லை.

அப்போது கண்ணன் ”நான் பிரம்மசரியத்தை கடைபிடிப்பவன், நல்லொழுக்கம் மிக்கவன், நான் பேசுவது, செய்வது சத்தியம் என்பது உண்மையானால், இந்தக் குழந்தைப் பிழைக்கட்டும்” என்று கூறி தன் பாதத்தால் அந்தக் குழந்தையைத் தொட்டான். அந்தக் குழந்தை உடனே உயிர்பெற்றது.

”பெண்ணே! இது எப்படி சாத்தியம். நீ சொன்ன கதைகள் எல்லாம் இதற்கு நேர் விரோதமாக இருந்ததே!” என்றார் உடையவர்
அந்தப் பெண் சிரித்துக்கொண்டு “சாமி உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா ?” என்றாள்.

“கேளு பெண்ணே, விடை தெரிந்தால் சொல்லுகிறேன்” என்றார் ராமானுஜர்.

“இப்ப என்னைச் சில முரடர்கள் துரத்திக்கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நான் உங்களிடம் வந்து “சாமி என்ன காப்பாற்றுங்கள் என்று உங்கள் காலில் விழுந்து, உங்கள் ஆசிரமத்துக்குள் சென்று ஒளிந்துகொள்கிறேன். அந்த முரடர்கள் உங்களிடம் வந்து ”இந்தப் பக்கம் ஒரு பெண் பார்த்தீர்களா ?” என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ? என்றாள்.

”உன்னைக் காப்பாற்ற அவர்களிடம் ‘பெண்ணா ? நான் பார்க்கவே இல்லையே!” என்று பொய் சொல்லுவேன்.

“சாமி உங்களைப் போலத் தான் கண்ணனும். நான் உங்ககிட்ட ‘சாமி என்ன காப்பாற்றுங்கள்’ என்று சொன்னது மாதிரிப் பாண்டவர்கள் கண்ணனிடம் “கண்ணா நீ தான் எங்களைக் காக்க வேண்டும்’ என்று சரணடைந்தார்கள். தன்னை அண்டியிருக்கும் அடியார்களைக் காப்பது தானே பெருமாளின் தர்மம் ? அது தானே அவனின் வேலை? அதனால் பாண்டவர்களின் ராஜ்யத்தை அபகரித்து, திரெளபதியை மானபங்கம் செய்த தீயவர்களான கௌரவர்களை அழித்தான். அதனால் தான் கண்ணன் இத்தனையும் பொய்களையும் சொன்னான்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

ஆகா கீதையின் உட்பொருளை ஒரு சின்ன கதைமூலம் விளக்கிவிட்டாய் பெண்ணே!..ஆனால் உண்மை பேசுவது தானே தர்மம் ?” என்றார் ராமானுஜர்

”உங்களுக்குத் தெரியாதது இல்லை சாமி இருந்தாலும் சொல்கிறேன்” என்றாள் அந்த பெண்.

“சொல்லு பெண்ணே உன் வாயால் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்”

“உண்மை நம் மனதுக்குத் தெரிவது. அந்த உண்மையே மற்றவர்களுக்குத் தீமை ஏற்படுத்தினால் அது தர்மம் ஆகாது. ஆனால் ஒரு பொய் சொல்லுவதால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் அந்தப் பொய் தர்மம் ஆகும். இந்தத் தர்மமே சத்தியம். அந்தச் சத்தியமே பெருமாள்” என்றாள்

உடையவர் கண்களில் நீருடன் ஆழ்ந்து சிந்திக்க அந்தப் பெண் “சாமி என்ன யோசிக்கிறீர்கள்” என்றாள்

“பெண்ணே நாங்கள் திரு மெய்யம் ஊரில் பெருமாளைத் தரிசித்துவிட்டு வந்தோம். அந்தப் பெருமானுக்குச் சத்திய மூர்த்தி என்ற பெயர்” என்றார்.

“ஊர் பேரிலேயே மெய் இருக்கிறது பாருங்கள் சாமி மெய் என்றால் சத்தியம் என்று பொருள். சத்தியமே கண்ணன்!” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

அப்போது பக்கத்திலிருந்த சிஷ்யர் ”இதோ இங்கே இருக்கிறாரே கூரேசன் இவருக்குச் சத்தியம் கண்ணன் கிடையாது!” என்றார்
“கண்ணன் இல்லை என்றால் வேறு யார் ?” என்றாள் குழப்பத்துடன்.

எப்போது பக்கத்திலிருந்த இன்னொரு சிஷ்யன் “நாங்களும் ஒரு சின்னக் கதை கூறுகிறோம்” என்று சொல்ல ஆரம்பிக்க அந்தப் பெண் ஆர்வமாக கேட்கத் தொடங்கினாள்.

“ஒரு நாள் திருவரங்கத்தில் காவிரிக் கரையில் சில பண்டிதர்கள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் குறித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேச்சு விவாதமாக மாறியது. யார் ஜகத்குரு என்று சண்டை வந்தது. பிறகு ஒரு வழியாகக் கண்ணனே ஜகத்குரு என்ற முடிவுக்கு வந்தார்கள்.

அப்போது கூரேசன் நேராகக் காவிரி ஆற்றை நோக்கி ஓடினார். தண்ணீர் கழுத்து வரை வந்துவிட்டது. எங்களுக்கு எல்லாம் ஒரே பதட்டம்.

கூரேசன் நடு ஆற்றில் சத்தமாக “சத்யம் சத்யம் சத்யம் யதிராஜரே உலககுரு ஆவார் எல்லா உலகையும் உய்விக்கச் செய்ய வல்லவர் அவரே என்று” என்றார். அதனால் பெண்ணே எங்களுக்குச் கீதாசாரியன் கிடையாது, எதிராஜர் தான் என்றார்.

அந்தப் பெண் உடனே ராமானுஜர் காலில் விழுந்தாள்.

ராமானுஜர் அவளை எழுப்பியவுடன் “சாமி நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.
“பெண்ணே எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா ?” என்று அவளைத் தடுத்தார்.
“கேளுங்கள் சாமி !” என்றாள்.

போரில் கண்ணன் அடியார்களைக் காக்கப் பொய் சொன்னான் அது தர்மம் சரி, ஆனால் அடுத்த வீட்டு வெண்ணெய்யைத் திருடுவது எப்படி தர்மம் ஆகும் ? அதுவும் விதவிதமான பொய்கள் சொல்லி ! ” என்றார்.

“சாமி இந்த உலகம் கண்ணனுடைய சொத்து தானே ?”

“ஆமாம் அதில் என்ன சந்தேகம்”

“இந்த உலகமே அவனுடைய சொத்து என்றால் அதில் இருக்கும் வெண்ணெய்யும் அவனுடையது தானே ? அவன் வீட்டு வெண்ணெய்யை அவன் எடுத்துச் சாப்பிடுவது எப்படி திருட்டாகும் ?” என்றாள் அந்தப் பெண்.

ராமானுஜர் வியந்து “உன் அடையாளமே இந்தத் துடுக்கான பதில் தான் குழந்தாய்!” என்றார்.
”அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!” என்றாள். அந்தப் பெண்
ராமானுஜர் வியந்து பார்த்துக்கொண்டு இருந்தார் அடுத்த கதையை நோக்கி.

(Visited 222 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close