இலக்கியம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

கலம் செய் கோவே கலம் செய் கோவே

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான், ஏன்னென்றால் நமது சிந்தனைப் போக்கில் இறப்பு என்பது முற்றுப்புள்ளி அல்ல, அது பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் ஒரு கால்புள்ளிதான். அதனால் தான் இன்றும் ” இது பெரிய சாவு, எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்ற பேச்சு இயல்பாக பேசப்படுகிறது. 

ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது 

தலைவன் இறந்து விடுகிறான். அநேகமாக போரில்தான் அவன் இறந்து போய் இருக்கவேண்டும். அவனுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கப் போகின்றது. அன்றைய பழக்கத்தில் அவனை மண்ணில் புதைக்க ஈமத்தாழி செய்யவேண்டும். அதற்காக குயவர்கள் கூடி உள்ளார்கள். அவனை வைக்கும் ஈமத்தாழியை பெரிதாக வனை என்று இரண்டு பேர் சொல்கிறார்கள். ஓன்று இறந்தவனின் மனைவி, மற்றது அவனால் ஆதரிக்கப்பட்ட புலவன் 

வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லி போல என் வாழ்க்கை அவனை மட்டுமே சுற்றி வந்துள்ளது. அவனில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், அதனால் என்னையும் உடன் வைத்துப் புதைக்கும் அளவுக்கு பெரியதாக ஒரு தாழியை செய்து கொடு என்று தலைவி கூறும் புறநானூற்றுப் பாடல்  ( 256 )ஓன்று. 

கலம் செய் கோவே! கலம் செய் கோவே! 

அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய 

சிறு வெண் பல்லி போலத் தன்னொடு 

சுரம் பல வந்த எமக்கும் அருளி, 

வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி 

அகலிதாக வனைமோ  

நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!

தலைவனின் பெருமையை புலவர் பாடத் தொடங்குகிறார். எப்படிப்பட்ட தலைவன் இவன் தெரியுமா ? நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்த படையின் தலைவன் இவன், புலவர்கள் பாடும் பொய்யே இல்லாத புகழ் பெற்றவன், புகழில் வானில் கதிர் வீசி ஒளிரும் ஆதித்யனுக்கு சமமானவன், செம்பியன் ( சோழ ) குலத்தில் பிறந்தவன். யானையின் மீது வலம் வரும் நெடுமாவளவன் இவன். இன்று இவன் அமரர் உலகம் சென்றுவிட்டான்,  

இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! உன்னால் செய்ய முடியுமா ? முடிந்தால் அத்தனை பெரிய தாழியை செய் என்று கூறும் புறநானூற்றுப் பாடல் (228) மற்றொன்று.  

கலம் செய் கோவே! கலம் செய் கோவே! 

இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை 

அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, 

நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!

அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? 

நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் 

புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, 

விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன 

சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் 

கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் 

தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,

 அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி 

வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் 

இரு நிலம் திகிரியா, பெரு மலை  

மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

https://youtu.be/dbt2Ub0GwI8

புகழுக்கு ஏற்ற அளவில் ஈமத் தாழி என்றால் நமக்கான தாலியின் அளவென்ன இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா ? 

(Visited 692 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close