இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

ஆதித்யநாத் யோகி எதிர்கொள்ளும் சவால்கள்

ஒரு பூட்டு தயாரிக்கும்போதே அதற்கான சாவியும் சேர்ந்தே தயாராகிறது. அதுபோல எல்லாப் பிரச்சனைகளும் அதோடு சேர்ந்தே பல்வேறு புதிய வாய்ப்புகளும் உருவாகின்றன. சவால்களுக்கு நடுவே எப்படி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி எப்படி வாய்ப்புகளைக் கண்டடைகிறார் என்பது பலருக்கு ஒரு வாழ்வியல் பாடமாக இருக்கும்.

2,43,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். மக்கள் தொகை நெருக்கத்தில் இரண்டாவது மாநிலம். ஏறத்தாழ 22 கோடி மக்கள். எண்பது உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் பெரிய மாநிலம். உத்திரப்பிரதேசம் வழியேதான் டெல்லியைச் சென்றடைய முடியும் என்பது ஒரு பிரபலமான சொற்கோவை. இந்தியாவின் பிரதமர்கள் பலரும் உத்திரப்பிரதேசத்தில் இருந்து  தேர்வானவர்கள்தான்

குப்தர்களும், மௌரியர்களும் தங்கள் பொற்காலத்தில் அரசாண்ட நிலப்பரப்பு . ஆனால் 7 ஆம் நூற்றாண்டில்  இருந்தே கொடூரமான அன்னியர் படையெடுப்பில் மிகவும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வந்து போர்கள், முகலாயர் ஆட்சி என்று பல கொடூரங்களைச் சந்தித்த நிலப் பரப்பும் இஃதே!

தொடர் படையெடுப்புகளின் விளைவுகளான மதமாற்றம், எழுத்தறிவுக் குறைவு ( 68%) , வன்முறை, பெண்கள் முன்னேற்றமின்மை , சட்ட ஒழுங்கின்மை போன்ற அனைத்தும் தலை விரித்தாடும் மாநிலம். சுதந்திரம் கிடைத்த பின்,  அதன் பின்தங்கிய நிலைமை சற்றும் மாறவில்லை. 1950 தொடங்கி 2020 வரை உள்ள 70 ஆண்டுகளில் ஒவ்வொரு கட்சியின் ஆட்சிக்கால அளவைப் பார்ப்போம்.

1950-1989 வரை சரண்சிங் ஆண்ட 553 நாட்கள் தவிர்த்து 39 வருடம் தொடர்ச்சியாக காங்கிரஸ் (அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி ….இரண்டிற்கும் 1990 வரை வேறுபாடே கிடையாது) ஆண்டு வந்தது. புரதச் சத்து, சரியான உணவு உடை, கல்வி கிடைக்கத அநாதைக் குழந்தை போல் வளர்ந்தது உத்தரப் பிரதேசம். நல்ல பள்ளிகள், கல்வி, சாலைகள், சுகாதாரம், பொருளாதாரம் என்று அனைத்திலும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து அடுத்த 20 வருடங்களில் மாயாவதி, முலாயம் என்ற ஜாதி தலைவர்கள் கையில் சிக்கி சின்னா பின்னமானது. இன்றுவரை 5 வருடங்கள் தொடர்ச்சியாக இருந்த ஒரே முதல்வர் அகிலேஷ் யாதவ் (2012-17) மட்டுமே. யோகி தன்னுடைய ஆட்சிக்காலத்தை முறையாக முடிப்பதில் எந்த தடையும் இல்லை.

பத்து முறை குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப் பட்ட மாநிலம்.

கட்சிஆண்டுகள்சதவிகிதம்
காங்கிரஸ்,36.351.58%
குடியரசுத் தலைவர் ஆட்சி,04.606.57%
சமாஜ்வாடி ,10.214.51%
பா ஜ க‌09.112.96%
பஹுஜன் சமாஜ்07.010.01%
பாரதிய கிராந்தி தள்,01.502.15%
ஜனதா தள்01.602.20%

தொடர்ச்சியான திறமையற்ற, ஊழல் அரசுகள், மத்திய அரசின் குறுக்கீடு இவை மாநிலத்தின் வளர்ச்சியை ஆண்டாண்டுகளாக நாசம் செய்து விட்ட நிலையில் யோகி ஜி சந்திக்கும் சவால்கள் என்ன?

1. குறைவான படிப்பறிவு / நுட்பத் திறன் குறைவான தொழிலாளர்கள்

2. தொழில் வளர்ச்சி குறைவு

3. கட்டமைப்பு வசதியின்மை

4. சட்ட ஒழுங்கு

5. மதக் கலவரங்கள்

6. குறைவான‌அன்னிய முதலீடுகள்

7. ஆழ்ந்து பரப்பப் பட்டிருக்கும் ஜாதி உணர்வுகள்

8. சுகாதாரக் குறைவு

9. தில்லியைச் சார்ந்து இருக்கும்  NOIDA தொழில் வளர்ச்சி

10. ஏழ்மை

11. ராம ஜென்ம பூமி

மற்றும் இப்போதைய‌

12. கரோனா பரவலால், வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நுட்பத் திறன் குறைவான தொழிலாளர்கள்

ஒரு மாநிலம் முன்னேறவேண்டுமானால் அதற்கு அச்சாரமாக இருக்க வேண்டியது சீரான சட்டம் ஒழுங்கும், நல்ல கல்விமுறையும்தான். இன்று உ.பி யின் முக்கியமான முன்னேற்றம் சட்டம் ஒழுங்கில் காணப்படுகிறது. குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. அரசு கடுமையான நட‌வடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2019 வரை 9925 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். 81 பெரும் குற்றவாளிகள் சுடப்பட்டனர், 200 கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் மீட்கப் பட்டு உள்ளன. கற்பழிப்பு, திருட்டு, ஆள் கடத்தல் சம்பவங்கள் 15-25% குறைந்துள்ளன.

பல்வேறு குற்றவாளிகள் உயிருக்குப் பயந்து தங்கள் ஜாமீனை ரத்து செய்துவிட்டு சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று நினைக்கும் நிலைக்கு வந்துள்ளார். தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பூஜை செய்து ஆரத்தி காட்டும் எண்ணம் தனக்கு இல்லை என்று நேரடியாக ஒரு பேட்டியில் யோகி கூறினார். வழக்கம் போல மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று போராளிகள் கூக்குரல் இட, யோகி அதனைத் கண்டுகொள்ளவே இல்லை.

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியிலும், புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் பல்வேறு புதிய முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்றன. அதற்கான பலன் இன்னும் சிறிது காலத்தில் தெரியத் தொடங்கும்.

30 லட்சம் வீடுகள் கடந்த 3 வருடங்களில் கட்டி முடிக்கப் பட்டு தகுந்த நபர்களுக்கு வழங்கப் பட்டு உள்ளது

2,61,000 கழிவறைகள், பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்துள்ளது.

கடந்த 2 வருடங்களில் ஜப்பனிய என்சிபிலிட்டீஸ் மரணங்கள் 1975,1988,ஆண்டுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. 2017 இல் 650 ஆக இருந்த மரணங்கள் 2018 இல் 230 ஆகக் குறைந்து 2019 இல் 75 க்கும் குறைவான மரணங்கள் மட்டுமே நிகழ்ந்தன. அரசின் நடவடிக்கைள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.

பெரிய நகரங்களில் மெட்ரோ பணிகள் தொடங்கி முடியும் தருவாயில் உள்ளன,

பூர்வான்சல், கங்கா, பண்டல் கண்ட் எக்ஸ்பிரஸ் வழித் தடங்கள் முடியும் தருவாயில் உள்ளன.

இராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பிற்கு மத்திய அரசு காட்டிய முனைப்பு, வழக்கின் தீர்ர்பு இரண்டும் அவருக்கு மதக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் உதவும். சட்டமன்றத் தேர்தல், 2019 பாராளு மன்றத் தேர்தல் இரண்டிலும் பா ஜ தலைமையின் முழு ஒத்துழைப்புடன் செய்யப் பட்ட‌ ஜாதி ஒருங்கிணைப்பு , ஜாதிக் கலவரங்களை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜாதி கட்சிகளான சமாஜ் வாடி, பஹுஜன் சமாஜ் வாடி கட்சிகளின் தோல்வி இதை உறுதி செய்கிறது.

போதுமான வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் உத்திரப்பிரதேசத்தின் மக்கள் பல்வேறு வெளிமாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து அங்கே வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா தொற்று இன்று பல தலைவர்களுக்கு பல புதிய உண்மைகளைப் புலப்படுத்தி உள்ளது. வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலார்கள் பற்றிய முழுமையான தகவல்கள் அரசிடம் இல்லை. அதுபோக தொழிலாளர்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமை என்பது வழங்கப்படுவது இல்லை. ஒரு பேரிடர் நேரும்போது அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது என்பது இயல்பான ஒன்றுதான். 

இப்போது யோகிக்கு முன் உள்ள சவால்கள் என்ன ? இன்னும் எத்தனை காலத்திற்கு உடலுழைப்பை தரும் ஆட்களை அனுப்பும் மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருக்கப் போகிறது ? அங்கே உள்ள மக்களுக்கு அங்கேயே போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய திட்டங்களை செயல்படுத்தும் காலம் இது. 

இதற்கான முன்னெடுப்பாக மாநிலத்திற்கு திரும்பி இருக்கும் 25 லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் திறன்கள் மூலமாக பட்டியலிடப்பட்டு உள்ளனர். கட்டிடத் தொழிலாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள், கட்டிடப் பூச்சு செய்பவர்கள், வீடு உள்பூச்சு நேர்த்தி செய்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், எலக்ட்ரிக் வேலை பார்ப்பவர்கள், வீட்டு உபயோக சாதனங்களைப் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், காவலாளிகள் என்று வகைப்படுத்தப் பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு தேவைப்படும் தொழில் பயிற்சியை அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் பயிற்சிக்காலத்தில் அவர்களுக்கு உதவித்தொகையும் அளிக்கப்படும்.

கொரோனா தொற்றைத் தொடர்ந்து சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் உத்திரப்பிரதேசத்தில் தங்கள் நிறுவனங்களைத் தொடங்க அரசு எல்லா வித உதவிகளையும் அளிப்போம் என்று அறிவித்து உள்ளது. பல்வேறு தேவையற்ற சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.

10,000 கோடி ரூபாய் பெறுமான சாலை கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.  உ.பி அரசு  போர் / பாதுகாப்புக் கருவிகள் மற்றும் விமானக் கட்டுமானம் செய்யும் வெளி நாட்டு முதலீட்டாளர்களுடன் நேரடிப் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. அதற்கான பயன்கள் விரைவில் வர,  மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளது.

சரி! இனி செய்ய வேண்டியவை என்ன?

புதிதாக தொழில் நுட்ப மையங்கள் ,அவை சார்ந்த கல்லூரிகள் கொண்ட அமைப்பை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.

கடன் வசதித் திட்டங்களை சரியான முறையில் விளம்பரப் படுத்தி மக்களிடம் சேர்க்க வேண்டும். வங்கிகளின் ஒத்துழைப்பு , ஒருங்கிணைப்பை முதன்மைப் பணியாக கருதிச் செயல் படவேண்டும்.

சுயதொழில் செய்பவர்களுக்கான உதவிகள் காலதாமதம் இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். 

பாரத நாட்டின் மிகப் பெரும் மாநிலம் முழுமையாக வளர்ச்சி அடையாமல் நாட்டின் முன்னேற்றம் என்பது கனவாகத்தான் இருக்க முடியும். இந்த வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை யோகி முன்னெடுப்பார் என்று ஒரே இந்தியா தளம் நம்புகிறது. இந்த மகத்தான பணியில் அவர் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

(Visited 271 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close