வீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம் – ஜூலை 27
பாரதநாட்டு விடுதலைக்கு ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பாடுபட்ட பல்வேறு பெண்களும் உண்டு. அந்த வரிசையில் ஒளிவிடும் தாரகையாக விளங்கிய கல்பனா தத்தாவின் பிறந்தநாள் இன்று.
இன்று பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1913ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தவர் கல்பனா தத்தா . தனது பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு கல்பனா கல்கத்தா நகரில் அமைந்துள்ள பெதுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பீனாதாஸ், பிரிதிலதா வடேகர் ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் கல்பனாவும் இணைந்து கொண்டார்.
பபுகழ்பெற்ற புரட்சியாளர் சூர்யாசென் தலைமையிலான குழு ஓன்று ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. கல்பனா அதில் ஐக்கியமானார். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்டகாங் நகரில் உள்ள ஆங்கில ஆயுதக் கிடங்கை புரட்சியாளர்கள் தாக்கி அங்கே உள்ள ஆயுதங்களை கொள்ளை அடித்தார்கள். போராளிகளைக் கைது செய்ய ஆங்கில அரசு தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றில் தாக்குதல் நடத்த போராளிகள் முடிவு செய்தனர். அங்கே இடத்தை வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்பனாவை அரசு கைது செய்தது. பிணையில் விடுதலையான கல்பனா தலைமறைவானார்.
1933ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சூரியாசென் கைது செய்யப்பட்டார். ஆனால் அங்கே இருந்த கல்பனா தப்பியோடி விட்டார். 1933ஆம் வருடம் மே மாதம் கல்பனா கைது செய்யப்பட்டார். சிட்டகாங் சதி வழக்கு மறுபடி விசாரணைக்கு வந்தது. கல்பனாவை நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. ஆனால் 1939ஆம் ஆண்டு கல்பனா விடுதலை செய்யப்பட்டார்.
இயல்பாகவே அன்றய போராளிகள் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். விடுதலையான கல்பனாவும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1940ஆம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பையை கல்பனா முடித்தார். 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பூரண சந்திர ஜோஷியைத் திருமணம் செய்து கொண்டார். 1943ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்காள பஞ்சத்திலும், பின்னர் தேசப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நிவாரணப் பணிகளியில் கல்பனா செயலாற்றினார்.
கணவர் ஜோஷியோடு இணைந்து கல்பனா சிட்டகாங் ஆயுதக் கிடங்கை கொள்ளையடித்தது பற்றிய தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டார். கொல்கத்தா நகரில் இயங்கி வரும் புள்ளியியல் கல்லூரியில் பணியாற்றிய கல்பனா 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார்.
கால ஓட்டத்தில் கல்பனா தத்தா போன்ற தியாகிகள் நினைவு கொள்ளப்படாமல் போகலாம், ஆனாலும் அவர்களின் தியாகங்கள் வீணாகிவிடாது என்பதில் ஐயமில்லை