ஆன்மிகம்

ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே!

சாமி கண்ணன் பிறந்தவுடன் நான்கு கைகளுடன், சங்கு சக்கரத்துடன் காட்சி அளித்தான் என்று சொன்னேன் இல்லையா ?” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். ராமானுஜரும் சிஷ்யர்களும் ஆர்வமாக இருக்க அந்தப் பெண் தொடர்ந்தாள்.

கண்ணன் தன் அவதார ரகசியத்தைத் தேவகிக்கும் வசுதேவருக்கும் சொன்னான். பெருமாளே குழந்தையாகப் பிறந்திருக்கிறான் என்றால் யாருக்குத் தான் சந்தோஷமாக இருக்காது ? தேவகியும் வசுதேவரும் ஆனந்தப்பட்டார்கள். ஆனால் கம்சனை நினைத்துப் பயந்தார்கள். ஏற்கனவே ஆறு குழந்தைகளைக் கொன்றுவிட்டான், கண்ணனையும் அப்படிச் செய்துவிட்டால் ? பயம் இன்னும் அதிகமானது.

வசுதேவர் ”தெய்வத்துக்கு எல்லாம் தெய்வமே ! கம்சன் உன்னைக் கொல்வதற்கு வந்துவிடுவானோ என்று பயமாக இருக்கிறது. நீ உன்னுடைய சங்கு சக்கரம் எல்லாம் உடனே மறைத்துக்கொள். சாதாரண குழந்தை போன்ற உருவத்தை எடுத்துக்கொள் என்று நடுக்கத்துடன் வேண்டினார்.

கண்ணனும் சங்கு சக்கரத்தை மறைத்துக்கொண்டு சாதாரண குழந்தையின் உருவத்தை எடுத்துக்கொண்டான். கண்ணன் “வசுதேவரே என்னைக் கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே நந்தகோபனும், யசோதையும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண் யோக மாயை. என்னை யசோதையிடம் விட்டுவிட்டு அந்தப் பெண் குழந்தையை இங்கே எடுத்து வாருங்கள் என்றார்.

வசுதேவரும் கண்ணனைக் கூடையில் வைத்து எடுத்துச் சென்றார். பூட்டப்பட்ட கதவுகள் திறந்தது. காவலாளிகள் தூங்கினார்கள். மழை, இருட்டும் சூழ்ந்துகொண்டது. யார் கண்ணிலும் படாமல் வசுவேதவர் எடுத்துச் சென்றார். மழை கண்ணன் மீது படாமல் ஆதிசேஷன் குடையாகப் பின் வந்தார். யமுனை வழிவிட்டது.
வசுதேவர் கோகுலத்துக்குச் சென்றார். யசோதை மயக்கத்திலிருந்தாள்.

கண்ணனை அவள் பக்கம் படுக்க வைத்தார். அங்கே இருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைச்சாலைக்கு வந்தார். தேவகியிடம் பெண் குழந்தையை எடுத்தார். பெண் குழந்தை அழத் தொடங்க, உடனே காவலாளிகள் கம்சனிடம் சொன்னார்கள். கம்சன் பெண் குழந்தை என்று பாராமல் கொல்லத் துடித்தான். வாளால் வெட்டப் போனான்.

அப்போது அந்தக் குழந்தை அவனிடமிருந்து நழுவி ”ஏய் மடையனே! உன்னைக் கொல்ல வேறொரு இடத்தில் பிறந்திருக்கிறான்” என்று சொல்லி மறைந்தது. அதற்கு பிறகு கண்ணன் கம்சனை வதம் செய்த கதை எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

”பெண்ணே ஒரு சந்தேகம்!” என்றார் ராமானுஜர்.
“கேளுங்கள் சாமி!” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

ராமானுஜர் கேட்டார் “கண்ணன் தான் பரமாத்மா என்று தெரிந்து, தெய்வத்துக்குத் தெய்வமே ! என்று வசுதேவர் கூறுகிறார். ஆனால் உடனே கம்சனால் ஏதாவது ஆபத்து வருமோ என்று பயப்படுகிறார்! தெய்வத்துக்கு எப்படி ஆபத்து வரும் ? கண்ணன் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா ?” என்று கேட்க

“கண்ணன் தான் தெய்வம் என்றாலும் அவனுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று பதட்டம் வந்துவிட்டது வசுதேவருக்கு. கண்ணன் மீது அவருக்கு அவ்வளவு பரிவு, பாசம். பாசம் கண்ணை மறைத்துவிட்டது பெரியாழ்வார் மாதிரி!” என்றாள்.

ராமானுஜர் சிரித்துக்கொண்டு ”நன்றாகச் சொன்னாய் பிள்ளாய்! ஆண்டாள் ஆழி மழைக் கண்ணா என்றாள், வசுதேவரோ ஆழி மறை கண்ணா என்கிறார்” என்று சொல்ல அந்தப் பெண் ”சாமி, கண்ணனைத் தூக்கிக்கொண்டு வசுதேவர் யமுனையைக் கடக்கும்போது யமுனையின் நீர்த் துளிகள் கண்ணனின் பாதத்தை வருடியது. அதனால் தான் ஆண்டாள் “தூய பெருநீர் யமுனை’ என்கிறாள்” என்று அந்தப் பெண் சொல்ல ராமானுஜர் அந்தப் பெண்ணை வியந்து பார்த்தார்.

“சாமி திருமால் என்று தெரிந்தும் கம்சனால் ஆபத்து வந்துவிடக் கூடாது என்று ’சங்கு சக்கரத்தை மறைத்துக்கொள்’ என்று சொன்ன வசுதேவர் போல நான் இல்லையே, அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

அந்தச் சமயம் ஒரு சிஷ்யர் “பெண்ணே வசுதேவர் சங்கு சக்கரத்தை மறைத்துக்கொள் என்றார் ஆனால் இங்கே இருக்கும் கோவிந்த பெருமாளோ மறைக்காதே ! என்றார் தெரியுமா ?” என்றார்.

“அது என்ன சாமி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றாள் அந்தப் பெண் ஆர்வமாக.

அந்தச் சிஷ்யர் தொடர்ந்தார். கண்ணன் கோகுலத்தில் தன் தோழர்களுடன் அப்பூச்சி காட்டி விளையாடுவான்.அப்பூச்சி காட்டுவது என்றால் கண் இமையை மடக்கிக்கொண்டால் சிகப்பாக இருக்கும். அப்போது நாக்கை நீட்டினால் பயமாக இருக்கும். சிறுவர்கள் இதை விளையாடுவார்கள். பெரியாழ்வார் என் கண்ணன் அப்பூச்சி காட்டுகிறான் என்று பாடியிருக்கிறார்.

திருவரங்கத்தில் ஒரு நாள் அரையர் பெரியாழ்வார் அப்பூச்சி பாசுரங்களை அபிநயத்துக்கொண்டு இருந்தார். உடையவரும் அவர் சிஷ்யர்களும் அதை அனுபவித்துக்கொண்டு இருக்க, அரையர் கண்ணன் அப்பூச்சி காட்டுவது போலக் கண் இமைகளை மடக்கிக்கொண்டு அபிநயித்தார். மீண்டும் அதே பாசுரத்தை அபிநயம் செய்தார் ஆனால் இந்த முறை கண் இமைகளை மடக்காமல் சங்கு சக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதைப் போல அபிநயித்துக் காட்டினார்.

அந்தப் பெண் உடனே அதைப் புரிந்துகொண்டு “சாமி, கண்ணன் தோழர்களுடன் விளையாடும்போது, கண் இமைகளை மடக்கிப் பயமுறுத்தாமல், திடீர் என்று தன் கையில் சங்கு சக்கரத்தை வர வழித்துப் பயமுறுத்தி அப்பூச்சி காட்டுவான்” என்று சொல்ல
அந்தச் சிஷ்யர் “அட உடனே புரிந்துகொண்டு விட்டாய் பிள்ளாய்!” என்றார். இந்த யோசனையை அரையருக்குச் சொன்னவர் இதோ இங்கே இருக்கும் கோவிந்த பெருமாள் தான்” என்று சொல்ல அந்தப் பெண் அவரைப் பார்த்துக் கைகூப்பினாள்.

அப்போது ராமானுஜர் “கண்ணனின் விளையாட்டைக் காணக் கண் கோடி வேண்டும். அந்தப் பாக்கியம் தேவகிக்கு இல்லை யசோதைக்குத் தான் கிடைத்தது!” என்றார். உடனே அந்தப் பெண் “ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே!” என்றாள்.

(Visited 231 times, 1 visits today)
+2
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close