ஆன்மிகம்

ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே

கோகுலத்தில் யசோதையும், வசுதேவரும் ஆயர் குலத்தவர்கள். மாடு வளர்ப்பவர்கள். அதனால் கண்ணன் மாடுகளுடன் வளர்ந்தான். மாடுகள் பல இருந்ததால் அங்கே பால் ஆறு மாதிரி ஓடியது. கெட்டித் தயிரும், வெண்ணெய்யும் பானைகளில் வழிந்தது. ஊரே தயிர், வெண்ணெய் கலந்த வாசனையாக இருந்தது.

இரவோடு இரவாகக் கோகுலத்தில் வசுதேவர் கண்ணனை விட அங்கே யசோதைக்கு மகனாக வளர்க்கப்பட்டார். ஆயர்குலத்தில் வளர்ந்ததால் ஆயனாகவே அவனை வளர்த்தாள் யசோதை. ஆயனாக வளர்ந்தான். கண்ணனுக்கு மாடு மேய்ப்பது பிடிக்கும். பால், தயிர், வெண்ணெய் சாப்பிடப் பிடிக்கும். ஆனால் மோர் ? பிடிக்கவே பிடிக்காது. யார் வீட்டிலாவது பானையில் தயிர் இல்லாமல் மோர் இருந்தால் அந்தப் பானையை உருட்டி விட்டுவிடுவான். வீடே மோர் குளமாகிவிடும்!

கண்ணன் வளர்வதை யசோதை ஆனந்தமாகப் பார்த்தாள். முழங்கால் தேயத் தவழ்ந்தான். புழுதியைக் கிளப்பினான். மண்ணை உண்டான். நீராட மறுத்தான். சேற்றுடன் வெண்ணெய் பிசுக்கால் அலங்கரித்துக்கொண்டான். இவன் அழகைக் கண்ட சந்திரன் அப்படியே நின்றது.

தளர்நடை பருவத்தில் இரண்டு அடி எடுத்து வைத்துப் பின் தொப்பென்று விழுந்தான். கருப்பாகக் குண்டாக இருந்ததால் நடக்கும்போது, யானைக் குட்டிபோல இருந்தது. நடக்கும்போது கழுத்தில் சங்கிலிகளும், இடுப்பில் மணிகளும், கால் கொலுசு ஒன்றுக்கொன்று தட்டி இனிமையான ஒலியை எழுப்பின என்றாள் அந்தச் சின்னப் பெண்.

ஒரு சிஷ்யர் அப்போது “பிள்ளாய்! குறுக்கே பேசுவதாக நினைக்காதே ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது சொல்லட்டுமா ?” என்றார்.

“தாராளமாகச் சாமி! சொல்லுங்கள்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

“கண்ணன் நடந்து வரும் அழகையும், அந்த ஓசையையும் நீ சொன்னபோது எனக்குப் பெரியாழ்வார் ‘தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப’ என்ற பாசுரம் நினைவுக்கு வந்தது. இந்தப் பாசுரத்தில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது” என்றார்.

“அப்படியா அதைச் சொல்லுங்கள் அதற்குப் பிறகு நான் கதையைத் தொடர்கிறேன்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

”மேல்நாட்டில் திருநாராயணபுரம் என்ற ஒரு இடம் இருக்கிறது. மிக அழகிய இடம். உடையவர் சில காலம் அங்கே தங்கியிருந்தார். அங்கே ஒரு கோயில் இருக்கிறது. ஆனால் உற்சவர் இல்லை. நம் உடையவர் ஊர் மக்களை விசாரிக்க அவர்கள் அந்த விக்ரகம் துலுக்க அரசர்கள் அபகரித்து எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்றார்கள். உடையவரும் வடதேசம் சென்று அங்கே துலுக்க பாதுஷாவிடம் கேட்டார். அவரும் தன் கருவூலத்தைத் திறந்து காண்பிக்க அங்கே பல விக்ரகங்கள் இருந்தது ஆனால் உடையவர் தேடிக்கொண்டு வந்த விக்ரகம் அதில் இல்லை!”

“அப்பறம் என்ன ஆச்சு சாமி?” என்றாள் அந்தச் சின்னப் பெண் ஆர்வமாக

“அந்த விக்ரகம் ராஜாவின் அந்தப்புரத்தில் அவளுடைய மகளிடம் இருந்தது. இதை அறிந்துகொண்ட உடையவர் பெரியாழ்வார் பாடிய ‘தொடர் சங்கிலி’ பாசுரத்தைப் பாடினார். உடனே குட்டி கண்ணன் ஓடிவருவது போல ஓடி வந்து உடையவர் மடியில் செல்லப் பிள்ளைப் போல உட்கார்ந்துவிட்டது!. இன்றைக்கும் அந்தப் பெருமாளுக்குச் செல்லப் பிள்ளை என்று தான் பெயர். நீ சொன்னவுடன் எனக்கு இது நினைவுக்கு வந்தது” என்றார்.

குட்டிப் பெண் சற்று நேரம் எதுவும் பேசமுடியாமல் உடையவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள். ”பெண்ணே கதையை நீ தொடர்ந்து சொல்லு” என்று உடையவர் சொல்ல அவள் தொடர்ந்தாள்.

கண்ணன் ஓடி ஆடி விளையாடும்போது மண்ணின் அவன் பாதம் பட்ட இடம் எல்லாம் சங்கு சக்கர அடையாளம் இருக்கும். கோகுலமே அனந்தமாக இருந்தது.

அப்போது உடையவர் “பெண்ணே !கிருஷ்ணன் என்ற பெயரிலேயே ஆனந்தம் இருக்கிறது !” என்றார். “சாமி கொஞ்சம் விவரித்துச் சொல்ல முடியுமா ? “ என்றாள் அந்தப் பெண்.

உடையவர் “கண்ணன் பிறந்து முதல் ஆண்டுப் பெயர் வைக்க அவனைத் தொட்டிலில் இட்டார்கள். அவர்களுடைய குலகுரு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார். க்ருஷி என்றால் பூமி என்று பொருள். ‘ண’ என்றால் மகிழ்ச்சியைக் குறிக்கும். கிருஷ்ணன் என்றால் பூமிக்கும் அதில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று பொருள்” என்றார்

பெண் பிள்ளைக்கு முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அவள் மேலும் கதையைத் தொடர்ந்தாள்.

ஒரு நாள் கோகுலத்தில் மழை. ஊர் முழுக்க ஈரமாகிவிட்டது. கண்ணன் ஈர மண்ணை லட்டு மாதிரி உருட்டி வாயில் போட்டுக்கொண்டான். அண்ணன் பலராமன் பார்த்துவிட்டான். உடனே ஓடிச் சென்று யசோதையிடம் சொன்னான். யசோதை கண்ணனிடம் கேட்க வாயைக் கையால் மூடிக்கொண்டு “அம்மா வாயில் ஒன்றும் இல்லை” என்றான்.

“வாயைத் திற நானே பார்க்கிறேன்” என்று சொல்லக் கண்ணன் வாயைத் திறந்தான். யசோதை மயங்கி விழுந்தாள். மயங்கிவிழும் முன் அவள் கண்ணன் வாயில் கடல்கள், காடுகள், மலைகள், பறவைகள், விலங்குகள். நட்சத்திரம், சூரியன், நிலவு என்று எல்லா லோகங்களும் வாய்க்குள் தெரிந்தது. ஆனால் மண் உருண்டை மட்டும் அங்கே இல்லை. கண்ணன் சட்டென்று வாயை மூடிக்கொண்டான். ஒன்றும் தெரியாதது போல “அம்மா எழுந்துக்கோ!” என்று தட்டி எழுப்பினான். யசோதை எழுந்தவுடன் கண்ணனுக்கு ஏதோ பூதம் பிடித்துவிட்டது என்று திருஷ்டி சுற்றிப் போட்டாள்.

கண்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும். அவனுக்கு எட்டாத இடத்தில் வெண்ணெய் பால் தயிர் எல்லாம் உரியில் ஏற்றி ஒளித்து வைப்பாள் யசோதை. கண்ணன் எம்பிப் பார்ப்பான். அவனுக்கு எட்டாது. உடனே தன் தோழர்களைக் கூப்பிட்டு ஒருவர் மீது ஒருவர் ஏறி உரியில் இருக்கும் வெண்ணெய்யைத் திருடிவிடுவான். குட்டு வெளிப்படாமல் இருக்க எல்லோருக்கும் சரியாகப் பங்கு போட்டுக் கொடுப்பான். எல்லா பானையும் கலியான பிறகு பானையை நன்றாகத் தட்டிப் பார்ப்பான் அப்போது பானை உடைந்துவிடும்.

வெண்ணெய், தயிர்ப் பானையைப் பறிகொடுத்த கோகுலத்துப் பெண்கள் எல்லாம் யசோதையிடம் ”உன் பையன் கண்ணன் என்ன செய்தான் தெரியுமா ?” என்று கண்ணன் செய்யும் விஷமங்களைக் கதை கதையாகப் புகார் சொல்லுவார்கள். யசோதை கண்ணனைப் பார்ப்பாள். கண்ணன் தன் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்வான். யசோதை உடனே அவனைத் தூக்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்டு ’என் கண்ணன் ரொம்ப சமத்து. நீங்கள் அவனைப் பற்றித் தப்பாகச் சொல்லுகிறீர்கள் என்று வந்தவர்களை விரட்டிவிடுவாள்.

ஒருநாள் யசோதை பொறுமை இழந்து எல்லோரும் பார்க்கக் கண்ணனை ஒரு உரலில் சேர்த்து தாம்புக் கயிற்றால் கட்டினாள். லோகத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கண்ணன் யசோதைக்குக் கட்டுப்பட்டான்.

யசோதை கயிற்றை அவன் இடிப்பில் சுற்ற மறுமுனையை எடுக்க யசோதை குனியக் கண்ணனே அதை எடுத்து யசோதையிடம் கொடுத்தான். கூடவே கைகூப்பி இனிமே செய்யமாட்டேன் என்று அஞ்சுவது போல, கெஞ்சுவது போலப் பாசாங்கு செய்தான். யசோதை உடல் பருமனாக இருப்பாள் அதனால் அவளால் கண்ணனைக் கட்டமுடியாமல் தவித்தாள். அவள் கண்களில் தளர்ச்சி தெரிந்தது. பிறகு கண்ணனே அவனைக் கட்டிக்கொண்டான்.

“ சாமி இதைத் தான் எங்கள் ஆழ்வார் மதுரகவிகள் ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப். பண்ணிய பெரு மாயன்’ என்று பாடினார் என்றாள் அந்தக் குட்டிப் பெண். அப்போது இன்னொரு சிஷ்யர் “யசோதை கண்ணனைக் கட்டியபோது ஒரு தழும்பு ஏற்பட்டது. அதை இன்றும் நாம் காணலாம்!” என்றார்.

“அப்படியா சாமி ? எங்கே ? ” என்றாள் ஆச்சரியத்துடன்
“திருவரங்கத்தில் நம்பெருமாள் இடுப்பில் அந்தத் தழும்பு இருக்கிறது! ஆனால் அதை வெளியே காட்ட அவருக்கு வெட்கம் அதனால் அதை மறைத்துவிடுவார்கள்” என்றார் அந்தச் சிஷ்யர். இன்னொரு சிஷ்யர்.

”பெண்ணே இன்னொரு விஷயம் தெரியுமா ? கண்ணன் வெண்ணெய் அதிகம் உண்டதால் அவன் வாயில் எப்போதும் வெண்ணெய் வாசனை இருக்கும். இதையும் இன்று நாம் நுகரலாம்!”
அந்தப் பெண் ஆச்சரியப்பட்டு ”அப்படியா ?” என்று கேட்க
அந்தச் சிஷ்யர் “ திருப்பாணாழ்வார் ‘வெண்ணெய் உண்ட வாயன்’ என்று திருவரங்கம் பெரிய பெருமாளைப் பற்றிப் பாடுகிறார். இன்றும் அந்த வாசனையை நாம் பெரிய பெருமாள் பக்கம் சென்றால் நுகரலாம்”

“அருமை ! அருமை!” என்றாள் அந்தப் பெண் குதுகுலத்துடன்.
“பிள்ளாய்! உரலில் கட்டப்பட்ட கண்ணன் பிறகு என்ன ஆனான் ?” என்றார் உடையவர்.

“கண்ணன் உரலை இழுத்துக்கொண்டு தவழ்ந்தான். பெரிய இரண்டு மரங்களுக்கு நடுவே புகுந்தபோது உரல் மாட்டிக்கொண்டுவிட்டது. கண்ணன் இழுத்த இழுப்பில் மரம் உடைந்து இரண்டு தேவர்கள் அதிலிருந்து வெளிப்பட்டுச் சாபம் தொலைந்து சென்றார்கள். அதன் பிறகு கம்சனால் அனுப்பபட்ட அசுரர்கள் நிறையப் பேர் வந்தார்கள். எல்லோரையும் கண்ணன் தீர்த்துக்கட்டினான். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தான். காளிங்கனை அழித்தான். இவ்வளவு செய்துவிட்டு யசோதை தாம்பால் கட்டியதை நினைத்து நினைத்துக் கண்ணன் அழுவான்.

ஒரு நாள் அப்படி அழுதபோது நந்தகோபன் “கண்ணா அழாதே.. வாசலில் பழம் விற்பவள் வந்திருக்கிறாள். நெல்லை எடுத்து அவளிடம் கொடுத்துப் பழம் வாங்கி சாப்பிடு என்று சமாதானப்படுத்தினார். கண்ணன் குடுகுடு என்று வீட்டுக்குள் ஓடினான். தன் சின்னக் கைகளால் நெல் மூட்டையிலிருந்து இரண்டு கைகளாலும் நெல்லை அள்ளி எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடினான்.

ஓடிய வேகத்தில் வழி விரல் இடுக்கில் நெல் கொட்டியது. வாசலில் பழம் விற்பவளிடம் கையைத் திறந்து காட்டியபோது அதில் இரண்டு மணி நெல் மணிகள் தான் இருந்தது. அதைக் கொடுத்து இலந்தைப் பழம் கேட்டான். பழம் விற்பவள் சொன்னாள் “இந்த நெல்லுக்குப் பழம் கிடைக்காது விலை அதிகம்” என்றாள். கண்ணன் “வேற என்ன வேண்டும் ?” என்று கேட்க அதற்கு அந்தப் பழம் விற்பவள் “ எனக்கு இப்போதே முக்தி கொடுத்தால் பழம் தருகிறேன்” என்றாள்.

”நான் முக்தி கொடுப்பவன் என்று எப்படி அறிந்தாய் ? என்று கண்ணன் கேட்க அதற்கு அவள் “நீ நெல்லை கொடுக்கும்போது உன் உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகையைப் பார்த்தேன்” என்றாள்.
கண்ணன் அவளுக்கு முக்தி அளித்தான்.

”சாமி, நான் யசோதை போலக் கண்ணனை வளர்க்கவில்லையே, அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

உடையவர் “பெண்ணே இவ்வளவு நேரம் உன் கதையைக் கேட்டபோது கோகுலத்தில் நானும் கண்ணனுடன் அநுயாத்திரை செய்தேனோ என்ற எண்ணம் வந்தது” என்றார்.

பெண் தாமதிக்காமல் “அநுயாத்திரை செய்தேனோ அணில்களைப் போலே!” என்றார்

(Visited 167 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close