ஆன்மிகம்

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே!

”சாமி, இது கண்ணன் பிறந்த கதை” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.

முன்பு ஒரு காலத்தில் சுதபஸ் என்பவர் இருந்தார். அவருக்குப் பிருச்னி என்ற மனைவி. இருவரும் நாராயணனை நோக்கிப் பல பல ஆண்டுக் காலம் கடும் தவம் புரிந்தார்கள். திருமால் மனம் மகிழ்ந்து “இருவரும் என்னைக் குறித்து கடும் தவம் புரிந்தீர்கள். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் ?” என்றார்.

இருவரும் பெருமாளின் அழகைப் பார்த்துப் பிரமித்தார்கள். உன்னைப் போல ஒரு மகன் எங்களுக்குப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார்கள். என்னைப் போல ஒருவன் கிடையாதே, அதனால் நானே உங்களுக்கு மகனாகப் பிறக்கிறேன் என்று வரம் கொடுத்தார். ஒருமுறை இல்லை மூன்று முறை பிறக்கிறேன் என்றார்.

முதல் முறை, பிருச்சனி – சுதபஸ் என்ற தம்பதிகளுக்கு ’பிருச்னி கர்ப்பன்’ என்ற பெயருடன் மகனாகப் பிறந்தார். இரண்டாவது முறை கஸ்யபர் அதிதி தம்பதிகளுக்கு வாமனனாகப் பிறந்தார்.

மூன்றாவதாக வசுதேவர்-தேவகிக்குக் கண்ணனாகப் பிறந்தார்.
கம்சனுடைய தங்கை தேவகி. தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. கம்சன் இவர்களைத் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தான். அப்போது ஆகாசத்திலிருந்து ஒரு குரல் கேட்டது “கம்சா! இந்தத் தேவகியின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லப் போகிறது!” என்று கம்சனுக்கு ஆத்திரம், கோபம், பயம் எல்லாம் சேர்ந்து வந்தது.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி கிடையாது. உடனே தன் தங்கை என்றும் பாராமல், தேவகியையும், வசுதேவரையும் பிடித்துச் சிறையில் போட்டான். காவலர்களை அங்கே அமர்த்தினான். குழந்தை பிறந்தால் உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்று ஆணையிட்டான்.

முதல் குழந்தை பிறந்தது. உடனே அதைக் கொன்றான். இரண்டாவது, மூன்றாவது என்று மொத்தம் ஆறு குழந்தைகளைக் கொன்றான். ஏழாவதாகப் பலராமன் கருவில் வளரும்போத, திருமால் தன் மாய சக்தியால் அந்த அந்தச் சிசுவை வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணி கோகுலத்திலிருந்தாள். அவளின் வயிற்றில் பிறக்க வைத்தான்.

எட்டாவதாகத் தேவகிக்கு நடுநிசியில் கண்ணன் பிறந்தான். பிறக்கும்போது நல்ல மழை. நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவீசியது. மரங்கள், செடிகள் பூத்துக் குலுங்கியது. மயில்கள் நடனமாடியது. பறவைகள் இனிமையாகக் கூவியது. மெல்லிய காற்று வீசியது. எல்லோர் மனதிலும் ஆனந்தம் நிலவியது.

பிறந்த குட்டிக் கண்ணன் மலர்ந்த தாமரை போலக் காட்சி அளித்தான். கையில் சங்கு சக்கரம், கதை முதலான ஆயுதங்கள். மார்பில் ரத்தான பதக்கம். நீல மேனி. கிரீடம். குண்டலங்கள். தேவகியும் வசுதேவரும் கண்ணனின் அழகைப் பார்த்துப் பிரமித்தார்கள்.

அவர்கள் கண்ணனைப் பார்த்து “தெய்வமே! நீயே நாராயணன் ! நீயே உலகத்துக்கு எல்லாம் மூலம்! நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம்” என்றார்கள்.

கண்ணன் “நீங்கள் முன்பு தவம் புரிந்தீர்கள், உங்களின் மகனாகப் பிறக்க வேண்டும் வரம் கேட்டீர்கள். முதல் முறை பிருச்னி கர்ப்பனாக, இரண்டாவது வாமனனாக, இப்போது கண்ணனாக அவதாரம் செய்திருக்கிறேன் என்று தன் அவதார ரகசியத்தைக் கூறினான் என்று அந்தப் பெண் கதை சொல்லுவதை நிறுத்தினாள்.

ராமானுஜர் “பெண்ணே அதற்குப் பின் என்ன ஆகியது ?”
சின்னப் பெண் தொடர்ந்தாள் “சாமி, கண்ணன் திருமாலாகக் காட்சி தந்தது அவர்களுக்கு முன் பிறவிகளை நினைவுபடுத்த. பிறகு கண்ணன் அவர்கள் தான் தெய்வம் என்பதை மறக்கச் செய்தான். அவர்களும் இந்தக் குழந்தை தெய்வம் என்பதை மறந்து எடுத்துக் கொஞ்ச ஆரம்பித்தார்கள்”.

“கண்ணன் மாயமென்ன மாயமே!” என்றார் ராமானுஜர்.

“சாமி, கண்ணன் இந்த உலகத்தை எல்லாம் தன் வயிற்றில் வைத்திருப்பவன். ஆனால் அந்தத் தெய்வத்தையே தன் வயிற்றில் வைத்திருந்த தேவகி போல நான் பாக்கியசாலி இல்லையே ! அதனால் ஊரை வீட்டு போகிறேன்” என்றாள். ராமானுஜர் ஆழ்ந்து யோசித்துக்கொண்டு இருந்தார்.


“சாமி என்ன யோசிக்கிறீர்கள் ?” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.

“பெற்ற வயிற்றுக்குத் தான் என்ன பெருமை என்று யோசிக்கிறேன். ராமனைப் பெற்ற கௌசல்யையை தான் விஸ்வாமித்திரரும் போற்றினார். நீயும் தேவகியைச் சொல்லுகிறாய். பெருமை எல்லாம் தாய்க்கு தானே !”

ஆமாம் சாமி, அதில் சந்தேகம் இல்லை. நீங்க வந்த திருவரங்கத்துக்கும் தேவகிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது!” என்றாள்.

சிஷ்யர்களும் ராமானுஜரும் யோசித்தார்கள். அப்போது ராமானுஜர் சிரித்துக்கொண்டு “நீயே அந்த விடையையும் சொல்லிவிடு!” என்றார்.“திருவரங்கத்தில் கண்ணன் பெரியவனாகப் படுத்துக்கொண்டு இருக்கிறான். தேவகியின் கருவரங்கத்தில் சின்னவனாகப் படுத்துக்கொண்டு இருந்தான்! இரண்டு இடமும் திவ்ய தேசம் தானே !” என்றாள்.

ராமானுஜர் வியந்து இன்னொரு சம்பந்தமும் இருக்கிறது என்றார். அந்தப் பெண் பூரிப்புடன் “என்ன சாமி சொல்லுங்கள்!” என்றாள்.

பெரியாழ்வார் “சீதக்கடலுள் அமுதன்ன தேவகி என்கிறார். அதாவது திருப்பாற்கடலில் தோன்றிய அமுதம் போலக் தேவகி வயிற்றில் கண்ணன் தோன்றினான். திருப்பாணாழ்வார் ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்கிறார். கருவரங்கம் திருவரங்கம் இரண்டும் ஆழ்வார்களுக்கு அமுதம் தான். உன் பேச்சுபோல” என்றார் ராமானுஜர்

சிஷ்யர்கள் “ஆஹா!” என்று கூற, ராமானுஜர் “பிள்ளாய்! அப்பப்பா என்ன ஒரு ஞானம் உனக்கு! ஆழி போல் மின்னுகிறது!” என்றார்.

அந்தப் பெண் தாமதிக்காமல் “ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே!” என்றாள்.

”கண்ணனின் கதை முடியவில்லை போல !” என்று அடுத்த கதைக்குத் தயாரானார்கள்.

(Visited 148 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close