தனி நபர் உரிமை மறுக்கப்பட்ட தேசம் – கியூபா : பகுதி -7 – ராமலிங்கம்
பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் புரட்சி நடந்ததும் அதன் முடிவில் ஆட்சி அமைந்ததைப் பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். தொடர்ச்சியான உள்நாட்டு குழப்பங்கள், அமெரிக்கத் தலையீடு, பொருளாதாரத் தடை என ஆரம்ப காலத்தில் பெரிய சிக்கல்கள் இருந்தாலும், அப்போதைய சோவியத்யூனியனின் அளவற்ற ஆதரவில் தொடர்ந்து கம்யூனிசக் கொள்கையை கைவிடாமல் ஓரளவு கல்வி, மருத்துவத் துறையில் நாட்டை முன்நோக்கி நகர்த்திக்கொண்டிருந்தார் பிடல். ஆனாலும் நாட்டின் உற்பத்தித்துறை மற்றும் உணவுப் பொருள்களுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கும் சூழல் தொடர்ந்தது. ரஷ்யாவைப் பொறுத்தவரை கியூபா அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் நாடு, தேவைப்பட்டால் அமெரிக்காவைத் தாக்கும் தளமாகவும் அல்லது பயமுறுத்தவும் என பல விதங்களில் உதவும் என்பது எண்ணமாய் இருந்தது.
இந்த நிலையில் 1990 களில் ஏற்பட்ட ரஷ்ய உள்நாட்டு குழப்பமும் அரசியல் மாற்றமும், அந்நாட்டைக் கம்யூனிசத்திலிருந்து வெளியேற்ற வைத்தது. மேலும் உலக அரசியலை விடுத்து உள்நாட்டு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே முதல் நோக்கமாக ஆனது. இதன் காரணமாக கியூபாவுக்கு வந்துகொண்டிருந்த ஒரே பொருளாதார ஆதரவும் நின்று போனது. இப்படியான சூழலில், அரசு அந்நிய செலாவணி தேவைக்காய் பல கட்டுப்பாடுகளை தளர்த்தி திறந்துவிடப்பட்டதே சுற்றுலாத் துறை. 1994 இல் தான் கியூபா அரசு முறையாக சுற்றுலாவுக்கான தனித் துறையை அறிவித்தது. போலவே தமது மருத்துவர்களை உலகெங்கும் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பிவைத்து கட்டணமாக பொருளையோ, பணத்தையோ பெற்றுக்கொண்டது இதைப் பற்றி ஏற்கனவே விரிவாக பார்த்தோம். இப்பகுதியில் சுற்றுலாத்துறையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆரம்ப காலத்தில் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாவுக்காக மக்கள் வந்தாலும் பெரும்பாலும் ஒரு முறை வந்தவர்கள் மறுமுறை வருவதில்லை மேலும் இவர்களின் அனுபவம் (Feedback) என்பது வழிப்பறியில் பொருள் இழந்தது, உள்ளூர் மக்களால் மிரட்டப்பட்டது என கியூபாவின் கசப்பான பக்கத்தைப் பற்றியே அதிகம் பேசியது. அரசு எதிர்பார்த்த வருமானம் இல்லை. இந்த நேரத்தில் அரசு தன் கொள்கை முடிவில் சில தளர்ச்சியைக் கொண்டுவந்தது. அதாவது, அதுவரை குற்றம் என நடைமுறையிலிருந்த விபச்சாரத்தை சட்டத்திருத்தம் மூலம் அரசின் அனுமதியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவது தவறில்லை என அறிவித்தது.
இதன் விளைவாக கியூபா பாலியல் சுற்றுலா தளமாக (sex tourism) அரசு அனுமதியுடன் செயல்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டது. அரசு எதிர்பார்த்தது போலவே சுற்றுலாத்துறை வெகு வேகமாக வளர்ந்தது. மேலும் அரசு பாலியல் தொழிலாளிக்கான குறைந்தபட்ச வயதாக 18 வயதை நிர்ணயித்தது. எனினும் சில வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு குழந்தைகள் கூட இந்த நரகத்தில் தள்ளப்பட்டனர். சில இடங்களில் குழந்தைகள் கடுமையாக காயப்படுத்தப்பட்டனர், உயிரிழப்புகள் கூட நடந்ததாக கூறபடுகிறது. இதன் காரணமாக அரசு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது கடுமையான குற்றமாக அறிவித்தது. (இது பற்றி பல விசயங்களை நேரடியாக எழுத முடியாது. தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று படித்துக்கொள்ளவும்).
https://www.miamiherald.com/latest-news/article1948284.html
https://journals.sagepub.com/doi/abs/10.1177/030639689603800103?journalCode=racb
விபச்சாரத்தை அனுமதித்ததை பற்றி பிடல் ஒரு இடத்தில் பேசியிருப்பதை கடந்த பதிவில் பார்த்தோம் அப்போது அவர் மேலும் குறிப்பிட்டது, கியூபா பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வதாகவும் எனவே தான் HIV போன்ற நோய்கள் கியூபாவில் அதிகம் இல்லை என்றார்.
படித்த பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட இவ்வாறு பொருளீட்ட வேண்டிய நிலை கியூபாவில் வர காரணம் அரசு ஆக்கபூர்வமாக செயல்படாத நிலையும், தவறான சோசியலிச கொள்கையை நடைமுறையில் கொண்டதுமே ஆகும். ஆம் ஆண்களும் விபசாரத்தில் ஈடுபட்டனர், GAY CLUB கியூபாவில் பிரபலம் மேலும் ஆண்கள் அறுவைசிகிச்சை செய்து பெண்களாக மாறியது பற்றி கடந்த பகுதியில் படித்தோம். அதற்கு விபச்சாரமும் ஒரு காரணம். இப்போது ஒரு கேள்வி வரலாம், அரசு அனுமதித்தது. ஆனால், ஏன் மக்கள் இவ்வாறு தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர் எனலாம். ஏனெனில் படித்தவர்களுக்குப் பொருளீட்ட முறையான வேலை வாய்ப்பு இல்லை. கிடைத்த வேலைக்குச் சென்றால் கிடைக்கும் ஊதியம் என்னவோ சில டாலர்களே. கியூபாவில் அரசு வேலைக்குச் செல்லும் ஒருவரின் மாத சராசரி வருமானம் 20 டாலர் மட்டுமே. அதாவது விபச்சாரத்தில் ஈடுபடும் ஒருவர் ஒரு நாளில் பெரும் வருமானமே அரசு வேளையில் இருக்கும் தொழிலாளியின் மாத சம்பளம். இதனால் படித்த பெண்களே பலர் இதை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் பகுதியில் எதையும் மிகைப்படுத்தி எழுதிவிடவில்லை, நாகரீகம் கருதி குறைத்தே கூறப்பட்டுள்ளது. முழுவிவரம் அறிய google லில் தேடிப்பாருங்கள். மேலே கொடுத்திருக்கும் சுட்டி போல் மேலும் பல விவரங்கள் கிடைக்கலாம்.
சிறுவர் சிறுமியரைக் கூட அழிவுப்பாதையில் தள்ளி வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் எவ்வாறு நிம்மதியுடன் வாழ்வார்கள். இந்தியாவில் வாழும் கம்யூனிஸ்ட்கள் தவிர விபரமறிந்த உலகில் எந்த நாடும் கியூபாவை, அந்த நாட்டின் பொருளாதாரத்தை, மக்களின் வாழ்க்கை தரத்தை புகழ்ந்து பேசவில்லை. மாறாக அனுதாபத்துடன் தான் அணுகுகிறார்கள்.
இந்தியாவையும், இங்குள்ள ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் பாதுகாப்பு மட்டுமின்றி எந்த பொது துறையின் வளர்ச்சியுடனும் ஒப்பீடு செய்யத் தகுதியான நாடு கியூபா அல்ல.
கியூபாவை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பேசும் தமிழக தோழர்களின் கூற்றில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்பதுடன், கியூபா அந்த நிலையை எட்ட இன்னும் பல காலம் பிடிக்கும்.