தனி நபர் உரிமை மறுக்கப்பட்ட தேசம் – கியூபா : பகுதி -2 – ராமலிங்கம்
கட்டுரை எழுத்தாளர் – ராம லிங்கம் . சிங்கப்பூரில் மின்னியல் துறையில் பணியாற்றி வருகிறார்.
“Public criticism of the government is a crime in Cuba”
அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சிப்பது கியூபாவின் சட்டப்படி குற்றம். எடுத்துக்காட்டாக, ஒருவர் ஆராய்ச்சிப் படிப்பிற்காக கியூபா செல்கிறார். அவர் தனது ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு “Health care system in Cuba”. தனது படிப்பின் முடிவில் பட்டம்பெறும் முன் பல்கலைக்கழகத்தில், தனது ஆரய்ச்சிக் கட்டுரையைச் (Thesis) சமர்பிக்க வேண்டும். அதில் தற்போதுள்ள சுகாதார அமைப்பு முறைப்படி’ என்ன நேர்மறை புள்ளிகள் உள்ளதோ அதை மட்டுமே குறிப்பிட வேண்டும். எதிர்மறையான கருத்துகள் இருப்பின் அது சட்டப்படி குற்றம். அந்த மாணவர் மீது குற்றத் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படி ஒரு சட்டத்தை வைத்துக் கொண்டு கியூபாவை பற்றி எந்த எதிர்மறைக் கருத்துகளும் இல்லை என்பது எப்படி உண்மையாகும். மேலே கூறியது எனது சொந்த கற்பனையல்ல. ஒரு வெளிநாட்டு மாணவர் தனது ஆராய்ச்சியைக் கியூபாவில் முடித்தவர். பிற்காலத்தில் தனது ஆராய்ச்சிக்கால அனுபவமாக பதிவுசெய்தது. அங்குள்ள “மருத்துவர்களே பெரும்பாலான நேரம் தங்களுக்குள் புலம்புவது மருத்துவத் துறையில் வரம்பு மீறிய அரசியல் தலையீடு” என்கிறார் இந்த மாணவர்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பாருங்கள். பயங்கரவாதி அப்சல் குருவை எப்படி தூக்கிலிடலாம்? அஜ்மல் கசாப்பிற்கு நீதி கிடைக்கவில்லை என ஆராய்ச்சி பல்கலைக் கழக மாணவர்களே போராடும் சுதந்திரம் உள்ளது. இங்கு ஆராய்ச்சி என நீங்கள் சாதிய பாகுப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம். சாதிய ஒடுக்குமுறையால் மதம் மாறிய காரணங்களை ஆராய்ச்சிப் படிப்பாக சமர்பிக்கலாம். அப்படி மதம் மாறியவர்கள் என்ன சாதிகளோடு தான் இருக்கிறார்களா என சொல்ல வேண்டிய அவசியமில்லை. கேட்டால் எனது ஆராய்ச்சி மதம் மாறியதற்கான காரணங்களைக் கண்டறிவதோடு முடிந்து விட்டது. இந்தியா விவாதங்களை அனுமதிக்கும் நாடு. ஆனால் இந்தியாவில் சகிப்பின்மை பெருகிவிட்டதாகவும், கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளதாகவும் இதே இடதுசாரி கம்யுனிஷ அறிவுஜீவிகள் பக்கம் பக்கமாக பேசித் திரிவார்கள்.
சீனா பொருளாதாரக் கொள்கையில் முதலாளித்துவத்திற்கு சென்று விட்ட நாடு. ஆனால் ஆட்சிமுறையில் கம்யுனிஷத்தை பின்பற்றும் நாடு. அதாவது எந்தத் தேர்தலும் கிடையாது. அரசு சொல்வதே செய்தி. கொரோனா விஷயத்தில் சீனா நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் மன்னராட்சி நாடுகளைக் காட்டிலும் படு மோசமாக உள்ளதை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
இன்னும் ஒரு எடுத்துக்காட்டு,
கியூபாவில் குழந்தை பிறப்பின்போது ஏற்படும் மரணம் என்பது மற்ற எந்த நாடுகளையும் விட குறைவு. உண்மைதான். இதற்காக WHO அவார்டு கூட கொடுத்துள்ளது. மற்ற எந்த இரண்டாம் நிலை வளரும் நாடுகளையும் விட சுகாதாரத்தில் மலிவான நாட்டால் இது எப்படி சாத்தியமானது? ரொம்ப சுலபம். கருவுற்ற பெண் மூன்று மற்றும் ஐந்தாவது மாதங்களில் கட்டாயம் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யவேண்டும் (இலவசம் தான்). ஏதாவது அசாதாரணங்கள் தென்பட்டால், குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பதைத் தவிர்க்க கட்டாயம் கருவை கலைத்துவிட வேண்டும். இப்படி ஒரு விதியை வைத்துகொண்டால் ஏன் முதல் இடத்தில் இருக்க மாட்டார்கள்?
இது எப்படி இருக்கிறதென்றால், நமது ஊரில் சில தனியார் பள்ளிகளில் பத்தாவது, பனிரெண்டாவது பொதுத் தேர்வு நெருங்கும் சமயத்தில் அல்லது ஒன்பது, +1 லியே வடிகட்டி விடுவது அல்லது சரியாக படிக்காத மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டு 100% பாஸ் ரிசல்ட் காண்பிப்பது போன்றது.
Source: Wikipedia.org ரஷ்யா, சீனாவை விமர்சித்தால் உடனே அமெரிக்கக் கைக்கூலி என ஒதுக்குவார்கள். இதில் சமீப காலத்தில் கியூபாவும் இணைந்து கொண்டது. ஆனாலும் உண்மையை காலத்தால் அழிக்க முடியாதது. வெனிசுலா இன்னொரு கம்யுனிஷ நாடு. அதன் இன்றைய நிலை என்ன?
கியூபாவில் சிறந்த மருத்துவரே இல்லை என்கிறாயா?
என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கு எனது பதில், உலகின் தலைசிறந்த மருத்துவர்களை கொண்ட நாடுகளில் கியூபாவும் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், கியூபாவில் மட்டும் தான் அல்லது கியூபாவில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தலைசிறந்தவர்கள் என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை.
ஏன் திடீரென கியூபாவை பற்றி எதிர்மறையாக எழுதவேண்டும்?
திடீரென கியூபாவை புனிதப்படுத்தும் கம்யூனிஸ்ட்களின் பதிவுகளை காணும்போது, அங்கும் குறைகள் உள்ளதென சுட்டிக்காட்டவே இந்த பதிவுகள். ஒவ்வொரு நாடும் நிறைகளாலும் குறைகளாலும் நிறைந்த நாடு. கியூபா குறைகள் அதிகமிகுந்த நாடாகவே உள்ளது.
மற்றபடி கியூபாவையும் அதன் புரட்சித் தலைவர் பிடல்காஸ்ட்ரோவையும் தேடித்தேடி படித்தவன் நான், செகுவாராவை விட அதிகம் திறமையுள்ளவர் பிடல் என அறிந்துகொண்டவன். தலைமையை அடைந்த அனைவரும் சிறந்தவர்கள் அல்ல, தன் காலத்தில் எத்தனை திறமையான தலைவர்களை இயக்கத்துக்கு வழங்குகிறானோ அவனே உண்மையில் போற்றத்தக்க தலைவன் என்பதற்கிணங்க, பிடல்காஸ்ட்ரோ, செகுவாராவை உலக புரட்சியின் நாயகனாக அனுப்பிவைத்து பின்னிருந்து வழிகாட்டிய ரியல் ஹீரோ என்பேன். அமெரிக்காவின் பல உளவுத் தாகுதல்களையும் வெகு அனாயசமாக தூக்கி எறிந்துவிட்டு வாழ்ந்த போராளி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மனிதனாய் பிறந்த அனைவரிடத்தும் ஏதோவோரு குறைகள் கண்டிப்பாக இருக்கும். அகிம்சையைப் போதித்த காந்தியே தன்னிடமும் குறைகள் உள்ளதென ஒத்துகொண்டவர் தானே, பின் புரட்சியைப் போதித்த பிடலிடம் குறையே இல்லை என்பீர் எனில் கண்டிப்பாக அவரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவரால் மட்டுமே நம்ப முடியும். நான் அதில் ஒருவன் அல்ல. பிடலிடம் பல குறைகள் இருந்ததென அவரிடம் நெருக்கமாக இருந்தவர்களே பிற்காலத்தில் பதிவுசெய்துள்ளனர். செகுவாராவே பிடல் கருத்தில் பல நேரங்களில் முரண்பட்டார் என்கிறது வரலாறு. எதிர்க்கட்சிகள் இல்லாத தேசத்திலிருந்து என்ன மாதிரியான சுதந்திரம் இருக்கும் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.