வரும் லோக்சபா தேர்தலுக்காக அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் அமையும் கூட்டணி வலிமையானதாக இருக்கும் என்று தெரிகிறது. திமுகவின் அணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், இந்திய தேசிய முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெறும் என தெரிய வந்துள்ளது. இடங்கள் பகிர்வு சுமூகமாக முடியவில்லையெனில் இதில் சில கட்சிகள வெளியேற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
திமுகவிற்கு இணையாக வலிமையான கூட்டணியை அதிமுகவும் அமைகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பலமான கருத்து உலவி வருகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய பாரதம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த அணியிலும் இடங்கள் பகிர்வுதான் பிரச்சினையாக உள்ளது.
இதில் அதிமுக, பாமகவுடனும், தமிழ் மாநில காங்கிரசுடனும் தங்களுக்குரிய இடங்களைப் பேசிப் பகிர்ந்து கொள்ளும் என்றும், பாஜகவிடம் எஞ்சிய தொகுதிகளைக் கொடுத்து அதை இதர கட்சிகள் சுமூகமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பாஜக தரப்பிடம் சொல்லிவிட்டதாம். பாமக, தேமுதிக இரண்டும் இடங்கள் ஒதுக்கப்படுவதைக் காட்டிலும், யாருக்கு அதிக இடங்கள் என்ற போட்டியில்தான் இடங்களைக் கேட்கின்றனவாம். அதனால் தான் அதிமுக, பாஜகவிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களைக் கொடுத்து பாஜகவோ விஜயகாந்தோ விட்டுக்கொடுத்து செல்லட்டும் என்று நினைக்கிறதாம். இதற்குக் காரணமுள்ளது. பாஜக நடக்கப்போவது லோக்சபா தேர்தல் என்பதால் பாஜக அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. இதனால்தான் அதிமுகவிடம் தங்களுக்கு 10 இடங்கள் வரை வேண்டும் என்று கேட்டதாம். இதைச் சமாளிப்பதற்குப் பதிலாக , 14 இடங்களை உங்களுக்குத் தந்துவிடுகிறோம், அதில் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டதாம் அதிமுக தரப்பு.
தினகரன், கமல் மட்டும் தனித்து விடப்பட்டு உள்ளனர். மேற்கூறிய இரு அணிகளில் இடங்களை ஒதுக்குவதில் பிரச்சினை ஏற்பட்டால் இந்த இரு கட்சிகளில் ஒன்றோடு இணைந்து மற்ற கட்சிகள் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.