ஆன்மிகம்

இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனைப் போலே !

”சாமி ! இது கோகுலத்தில் ஒரு தயிர் விற்பவரைப் பற்றிய கதை இது” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.

ததி என்றால் தயிர் என்று பொருள். பாண்டம் என்றால் பானை. தினமும் தலையில் பெரிய பானையில் தயிர் எடுத்துச் சென்று கோகுலத்தின் வீதிகளில் ’தயிர் வாங்கலையோ! கெட்டி தயிர் வாங்கலையோ!” என்று கூவி விற்பார். விற்று விட்டுக் காலி பானையுடன் வந்து மத்தியானம் தன் குடிசையில் உணவு அருந்திவிட்டு வாசலில் அந்தப் பெரிய பானையின் மீது தலை வைத்துச் சற்று தூங்குவார். அதனால் இவர் பெயரே ’ததிபாண்டன்’ என்று ஆகிவிட்டது.

இந்தச் சமயத்தில் கோகுலத்தில் கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வளர்ந்தான். வெண்ணெய்யைப் பார்த்தால் கண்ணனுக்குக் கொண்டாட்டம். ஆனால் யசோதைக்குத் திண்டாட்டம்.

ஒரு நாள் யசோதையின் மடியில் படுத்துக்கொண்டு இருந்தான் கண்ணன். அடுப்பில் பால் பொங்கிவிடப் போகிறதே என்று மெதுவாகக் கண்ணனைப் படுக்கையில் விட்டு விட்டு அடுப்படிக்குச் சென்றாள்.

யசோதை போனவுடன் கண்ணன் மெதுவாக எழுந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கும் வெண்ணெய், பால், தயிர், நெய் எதுவும் இல்லை. யசோதை எல்லாவற்றையும் கண்ணுக்கு எட்டக் கூடாது என்று மேலே உறியில் வைத்திருந்தாள்.

கண்ணன் பக்கம் ஒரு இரு உரல் இருந்தது. அதை உருட்டினான். பிறகு கவிழ்த்தான், பிறகு அதன் மீது ஏறினான். அப்பவும் உறி எட்டவில்லை. ஒரு கல்லை எடுத்து அடித்தான். உறியில் இருந்த தயிர், வெண்ணெய் கீழே அருவிபோலக் கொட்டியது. தித்திக்கும் பாலை குடித்தான். வெண்ணெய்யைக் கொஞ்சம் சாப்பிட்டான். மீண்டும் பால், வெண்ணெய் என்று மாற்றி மாற்றிச் சாப்பிட்டான். அவனுடைய நண்பர்கள் அங்கே வர அவர்களுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தான்.

சாப்பிட்ட பால், வெண்ணெய் ஜீரணம் ஆக வேண்டுமே என்று நெய் கொஞ்சம் சாப்பிடலாம் என்று ஒருவர் மீது ஒருவர் ஏறி நெய் குடத்தை எடுத்த தூக்கியபோது கையில் வெண்ணெய் பிசுக்கில் நெய்ப் பானை வழுக்கி அவன் முகத்தின் மீது கொட்டி பானை உடைந்தது

.சத்தம் கேட்ட யசோதை அடுப்படியிலிருந்து ஓடி வந்தாள். வீடே அல்லோலகல்லோலமாய் இருப்பதைப் பார்த்தாள். கண்ணனின் தோழர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள். கண்ணன் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான்.

யசோதை பக்கத்தில் இருந்த தாம்புக்கயிற்றை எடுத்தாள். கண்ணனை நோக்கி அடிக்க வந்தாள். கண்ணனைப் பிடித்தாள் ஆனால் கண்ணன் உடம்பு முழுக்க நெய்யும் வெண்ணெய்யும் பூசிக்கொண்டு இருந்தால் வழிக்கிகொண்டு நழுவினான். நழுவியவன் தெருவில் குடுகுடு என்று ஓட ஆரம்பித்தான். திரும்பிப் பார்த்தான். தூரத்தில் யசோதை கையில் தாம்புகயிறுருடன் தெரிந்தாள். சட்டென்று ததி பாண்டன் வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன். பாதித் தூக்கத்தில் இருந்த ததி பாண்டன் அருகில் சென்று “தாதா தாதா” எழுப்பினான்.

ததி பாண்டனனிடம் கண்ணன் “அம்மா என்னை அடிக்க வருகிறாள். என்னை எங்காவது ஒளித்து வை!” என்றான். சுற்றி முற்றும் பார்த்தான் ததி பாண்டன். உடனே கண்ணனை எடுத்துப் பானைக்குள் போட்டான். உடல் முழுக்க வெண்ணெய்யும் தயிருமாக இருந்த கண்ணன் வழிக்கிகொண்டு உள்ளே சென்றான். பக்கத்தில் இருந்த மூடியை அதன் மீது கவிழ்த்தார்.அங்கே வந்த யசோதை “என் பையன் கண்ணன் இங்கே வந்தானா ? இங்கே இந்த வீட்டுக்குள் வந்த மாதிரி இருந்தது” என்றாள்

“இங்குக் கண்ணன் இல்லையே! நான் அவனைப் பார்க்கவில்லையே” என்று பொய் சொன்னான் ததிபாண்டன். வயதான ததி பாண்டன் பொய் சொல்லமாட்டார் என்று யசோதை கண்ணனைத் தேடிக்கொண்டு வெளியே சென்றாள்.

பானையின் உள்ளே இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த கண்ணன் “மூடியைத் திற நான் பானையிலிருந்து வெளியே வர வேண்டும்!” என்றான்.ததி பாண்டன் சொன்னான்.

“கண்ணா நீ வெளியே வர வேண்டும் என்றால் எனக்கு நீ ஒன்றைத் தர வேண்டுமே!” என்று ஒரு நிபந்தனையை விதித்தான்.“தாதா ! நான் ஒரு குட்டிக் குழந்தை என்னால் என்ன தர முடியும் ? என்னை வெளியே விடு” என்று கெஞ்சும் குரலில் பானையிலிருந்து குரல் கொடுத்தான் கண்ணன்.

“கண்ணா! நீ சாதாரணக் குட்டிக் குழந்தை இல்லை. உன் லீலைகள் எல்லாம் எனக்குத் தெரியுமே! உன் பக்தர்களுக்கு நீ மோட்சம் தருகிறாய் என்று கேள்விப்பட்டேன். எனக்கும் அது வேண்டும்” என்றான்.

”தாதா ! எதுவாக இருந்தாலும் வெளியே வந்தவுடன் பேசிக்கொள்ளலாம். பானையிலிருந்து முதலில் என்னை வெளியே எடு. எனக்கு மூச்சு முட்டுகிறது!” என்றான் கண்ணன்.

ததி பாண்டன் “அது எப்படி, முதலில் தருகிறேன் வாக்கு கொடு அதற்குப் பிறகு தான் உன்னை வெளியே எடுப்பேன்” என்றான்.“சரி தருகிறேன்!” என்றான் கண்ணன்.

”கண்ணா சந்தோஷம். இன்னொரு சின்ன நிபந்தனையும் இருக்கு. சிறுவயதிலிருந்து இந்தப் பானையுடன் வளர்ந்துவிட்டேன் மத்தியானம் அதைத் தலைக்கு வைத்துப் படுத்தால் தான் தூக்கம் வரும். அதனால் என் பானைக்கும் மோட்சம் கொடு. அதுவும் என்னுடன் மோட்சத்துக்கு வர வேண்டும்” என்றான்.

“என்னது பானைக்கு மோட்சமா ? அது எப்படி“ என்றான் கண்ணன் பானையிலிருந்து.“கண்ணா நீ நினைத்தால் முடியாதது இருக்கிறதா ?” என்றான்.

“சரி உனக்கும், உன் பானைக்கும் மோட்சம் உண்டு” என்று சொன்னபிறகு ததி பாண்டன் கண்ணனைப் பானையிலிருந்து விடுவித்தான்.

“சாமி ! ஒன்றும் அறியாத இடையன் ததி பாண்டன் கண்ணன் இங்கு இல்லை என்று பொய் சொல்லி மோட்சம் பெற்றான். ஒன்றும் அறியாத பானையும் மோட்சம் பெற்றது. எனக்கு அந்தப் பாக்கியம் இல்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் “பெண்ணே நீ சொன்ன கண்ணன் விஷமக் கதை அப்படியே பெரியாழ்வார் பாசுரத்தில் இருக்கிறது!” என்றார்”அப்படியா சாமி !” என்றாள்.

“ஆமாம் ’பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெய்யும் மெத்த திருவயிறு ஆர விழுங்கிய’ கண்ணன் என்கிறார் ஆழ்வார்” என்றார்.

அப்போது ஒரு சிஷ்யர் “ஒரு சந்தேகம். பானை ஓர் அறிவில்லாத உயிரற்ற பொருள். அதற்கு எப்படி மோட்சம் …?” என்று கேட்க

ராமானுஜர் புன்முறுவலோடு “மீண்டும் பெரியாழ்வாரைத் தான் துணைக்கு அழைக்க வேண்டும் என்று தொடர்ந்தார். திருக்கோட்டியூர் பெருமாளை அழைக்காதவர்கள் குடிக்கிற தண்ணீர் அவர்கள் உடுக்கும் உடை முன் பிறவியில் பாவம் செய்திருக்க வேண்டும்’ என்கிறார் பெரியாழ்வார்.

தண்ணீருக்கும், உடையும் அறிவில்லாத உயிரற்ற பொருள் ஆனால் ஆழ்வார் பாவம் செய்திருக்கும் என்கிறார். அதுபோல இந்தப் பானை முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கும், மோட்சம் போனது ! ராமாவதாரத்தில் ராமர் கடைசியில் தான் வைகுண்டத்துக்கு கிளம்பும் முன் எல்லாவற்றையும் அழைத்துக்கொண்டு போனாரே! பெருமாள் நினைத்தால் முடியாதது கிடையாது!” என்றார்.

உடனே அந்தப் பெண் சிரித்துக்கொண்டு “காட்டுக்கும் போனேனோ பெருமாளைப் போலே!”

”மறுபடியும் ராமாயணமா ?” என்றார் ராமானுஜர் சிரித்துக்கொண்டே

(Visited 269 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close