நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக பாமக கூட்டணி? பாஜகவை சேர்ப்பதில் குழப்பமும் தயக்கமும்!
சென்னை: தமிழகத்தில் 2019 லோக்சபா தேர்தலுக்குத் திமுக தனது கூட்டணிக் கட்சிகளை ஓரளவுக்கு உறுதி செய்துவிட்டது. திமுகவைப் பொறுத்தவரையில், திமுக, காங்கிரஸ், மதிமுக, இரு கம்யுனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி என்பது ஏறத்தாழ அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
திமுக குறைந்தது 27 இடங்கள் வரை நிற்கத் திட்டமிடுகிறது. எக்காரணம் கொண்டும் இதற்கு கீழ் இந்த முறை செல்லக் கூடாது என்பதில் திமுக தரப்பு உறுதியாக உள்ளதாம். இந்திய தேசிய முஸ்லிம் லீக்கையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கத் திட்டமிட்டுள்ளது திமுக. காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட அதிகபட்சமாக 10 இடங்கள் மட்டுமே கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. மதிமுக, கம்யுனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் சில கட்சிகள் அதிக இடம் கேட்டு முரண்டு பிடித்தால் அக்கட்சிகளை உதறி விடுவது எனத் திட்டமிடுகிறது திமுக. அதில் தங்கள் கட்சியும் காங்கிரசும் இடங்களைக் கூடுதலாக பகிரலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
அதிமுக இன்னும் நாடாளுமன்றக் கூட்டணி பற்றி வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், பாமகவும், தேமுதிகவும் அதிமுக அணியில் இணைந்து போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. பாமகவிற்கு, அதிமுக அணியில் பாஜக இடம்பெறுவதை விரும்பவில்லை என்ற பேச்சு அடிபடுகிறது. ஏனெனில் தமிழகத்தில் மற்ற கட்சிகளைப் போல தாங்களும் பாஜக அரசைக் கடுமையாக எதிர்த்தவர்கள் என்ற அடிப்படையில் தயக்கம் காட்டுகிறது.
ஆனால் அதிமுகவிலோ தங்களது ஆட்சி நீடிக்க உதவியது பாஜக என்ற அடிப்படையில் இணைந்திருப்பதை விரும்புகிறது ஒரு தரப்பு. இது அரசியல் கட்டாயமாகவும் நெருக்கடியாகவும் அதிமுகவிற்கு உள்ளது. பல்வேறு சிபிஐ வழக்குகள் அதிமுக அமைச்சர்கள் மீதே இருப்பதால் பாஜகவை ஒதுக்க அதற்கு விருப்பமில்லை. தயக்கமாகவும் உள்ளது. தேமுதிகவைப் பொறுத்தவரையில் அது எந்தக் கட்சியையும் தனிப்பட்ட முறையில் இந்த இரு ஆண்டுகளில் எதிர்க்கவில்லை என்பதால் பாஜக , அதிமுக அணியில் இருப்பதை எதிர்க்காது என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் பாமக பாஜகவை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் , அதிமுக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிகள் உள்ளடங்கிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதில் பாரி வேந்தர், ஏ.சி சண்முகம் ஆகியோர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டி இட உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
அதிமுகவில் ஓர் அணி பாஜகவுடன் கூட்டணி வேண்டாம், அதனால் நமக்கு இழப்புதான் என்று நினைக்கிறது. மேலும் பாஜகவின் மீது மோசமான அபிப்ராயத்தை எதிர்க்கட்சிகள், தமிழ் தேசிய கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள், தமிழக ஊடகங்கள் வலுவாக ஏற்படுத்தியுள்ளன என்று தமிழக உளவுத் துறை அறிக்கைக் கொடுத்துள்ளதாகவும் , அதைவிட முக்கியமாக திமுகவை ஹிந்து மத விரோதக் காட்சியாகக் கட்டமைப்பதில் சங் பரிவார் அமைப்புகள் வெற்றி பெற்றுவிட்டன என்றும் அது தெரிவிக்கிறது. மொத்தத்தில் தமிழக நிலைமை இன்று பாஜகவைத்தான் சுற்றி இருக்கிறது என்று உளவுத்துறை அறிக்கை சொல்கிறது
எனவே பாஜகவை தேர்தலுக்கு முன்பாக ஒதுக்கி வைக்கிற ஏற்பாடுகளை மோடிக்கு எடுத்துச் சொல்லி, பாஜகவிற்குப் பதிலாக மனித நேய மக்கள் கட்சி, அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை இணைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம் என்றும் கருதுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை ஓரளவுக்குப் பெற இது உதவும் என்று அதிமுக கருதுகிறது.
பாமக அதிமுக அணியில் இல்லையென்றால் விடுதலைச் சிறுத்தைகளால் திமுகவிற்கு பெரிதும் பலனில்லை என்று திமுகவும் கருதுகிறது. இந்தத் தேர்தலில் திமுக வலுவாக உள்ளதால் இயன்ற அளவு எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பொறுத்தே இதர கட்சிகளுக்கு வழங்கப்படும் சீட்டுகளின் எண்ணிக்கை அமையும் என்கிறார்கள்.
அதிமுக தேர்தலுக்குப் பின் வெற்றி பெரும் எம்பிக்களின் ஆதரவை பாஜகவிற்கு அளிக்கும் உத்திரவாதத்துடன் இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். அல்லது பாஜகவை சேர்த்துக்கொண்டு, மனித நேய மக்கள் கட்சியை மட்டும் விலக்கி வைத்து பாமகவையும் இணைத்துக் கொண்டு நிற்கவும் முயற்சி செய்கிறது.
அதிமுக, பாஜக, பாமக,தேமுதிக, புதிய தமிழகம் இணைந்து நின்றால் போட்டி பலமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் சீமான், தினகரன், கமல், திமுக உட்பட பல கட்சிகளுக்கும் அதிக அளவு சிதறும் வாய்ப்புகள் உள்ளது என்றும் , சமீபத்திய நிகழ்வுகளால் ஹிந்து ஓட்டுகள் திமுகவிற்கு எதிராக ஒருங்கிணைக்கப்படுகிறது என்றும் பல்வேறு நலத்திட்டங்களால் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்து உள்ளது.
மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், தென்னிந்தியாவில் உள்ள நாலு மாநிலங்களில் வலுவாக காலூன்ற பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே பாஜகவை அதிமுக அணியில் இணைப்பதால் கிடைக்கும் லாபமும் அதிமுகவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பாஜக எதிர்ப்பு வாக்குகள்+ பாமகவின் முடிவைப் பொறுத்தே அதிமுக கூட்டணி அமையும் என்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் மார்ச் மாதத்தில் அனைத்து குழப்பங்களுக்கும் ஓர் முடிவு கிட்ட வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.