தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்
இந்திய சுதந்திரப் போர் பல அரிய தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியல் மட்டும் சார்ந்தவர்கள்தான் இவர்களில் பெரும்பாலோர். அரசியல் வாதியாகவும், மொழிப்புலமையும் பெற்ற பலரும் சுதந்திரப் போர் வீரர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர் அரசியல், மொழிப்புலமை, சைவம், தொழிற்சங்கப் பணி, சமூக சீர்திருத்தங்கள் என்று பல துறைகளிலும் பாடுபட்டவர். இவர் போல வேறு யாரும் உண்டா என்பது தெரியவில்லை. தலைவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் தமிழ்த்தென்றல் என்று போற்றப்படும் திரு வி.க. ஆவார். இவரது தனித்தமிழ் எழுத்தும் பேச்சும் இவருக்குத் தனி முத்திரைப் பதித்தது.
திருவாரூர் விருத்தாசல கலியாணசுந்தர முதலியார் என்பதன் சுருக்கமே திரு. வி.க. என்பது. இவர் 1883இல் பிறந்தார். இவரது பாட்டனார் காலத்திலேயே இவர்கள் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டது. இவரது தந்தையார் விருத்தாசல முதலியார். இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி இறந்த பின், சின்னம்மாள் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் பிறந்தனர். இவர்களில் ஆறாவது குழந்தைதான் திரு.வி.க.
இவரது தந்தையாருக்கு சென்னை ராயப்பேட்டையில் வியாபரம் தொழில். இவர் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை மராமத்து செய்யும் பணியை ஏற்றுக்கொண்டு துள்ளம் எனும் கிராமத்தில் குடியேறினார். அங்கு இருக்கும்போதுதான் 26-8-1883இல் திரு.வி.க. பிறந்தார். இவருக்கு ஆரம்பகால கல்வியை அவ்வூரில் பள்ளிக்கூடம் இல்லாததால் இவரது தந்தையே புகட்டி வந்தார். பின்னர் சென்னையில் வந்து பள்ளியில் சேர்ந்தார். இவரது குடும்ப சூழல் காரணமாகவும், இவரது சொந்த காரணங்களாலும் பத்தாவதோடு இவரது பள்ளிக்கல்வி முடிவடைந்தது. ஆனால் இவரது புறக்கல்வி தேவாரம், திருவாசகம் என்று தொடர்ந்தது. இவரது மரியாதைக்கு உரியவரான கதிரைவேற் பிள்ளை என்பவரிடம் இவர் தமிழ் பயின்றார். அவர் காலமான பின் மயிலை வித்வான் தணிகாசல முதலியார் என்பவரிடம் தமிழ் பயின்றார். தமிழோடு இவர் சமஸ்கிருதமும் நன்கு பயின்றார். இவரது சொந்த முயற்சியால் ஆங்கிலம், வேதாந்தம், பிரம்மஞானதத்துவம் போன்ற பல துறைகளில் இவர் முயன்று கற்றுத் தேர்ந்தார்.
கல்வி ஒருபுறமிருந்தாலும் வாழ்வதற்கு ஒரு தொழில் வேண்டுமே. அதனால் சில காலம் ஸ்பென்சர் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது தேசிய உணர்வு அந்த கம்பெனியின் வெள்ளை முதலாளிகளுக்குப் பிடிக்காமல் வேலை போயிற்று. அப்போது சென்னை வந்து சொற்பொழிவு ஆற்றிய வங்கதேசபக்தர் விபின் சந்திர பாலின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அரவிந்தரின் பத்திரிகையும் இவரை ஒரு தேசபக்தனாக உருவாக்கின. வேலை போன பிறகு தனது தமையனார் நடத்திய அச்சகம் வாயிலாக பெரிய புராணக் குறிப்புரை எழுதி வெளியிட்டார். திருமந்திரத்துக்கும் விளக்கம் எழுதி வெளியிட்டார். பிறகு சிலகாலம் வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தம்மை இணைத்துகொண்டு பணியாற்றத் தொடங்கினார். ‘தேசபக்தன்’ எனும் பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தினார். பிறகு அதிலிருந்தும் வெளியேறி “நவசக்தி” பத்திரிகையின் ஆசிரியரானார். 1941இல் இந்த பத்திரிகையும் நின்று போயிற்று. 1917இல் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்ட திரு வி.க. 1934 வரை அதில் முழுமையாக பங்கேற்றார். இவர் காலத்தில் காங்கிரசில் முன்னணி வகித்தவர்கள் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வே.ராமசாமி நாயக்கர், திரு வி.க. ஆகியோராவர். எனினும் கால ஓட்டத்தில் இந்தக் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனி வழியே பயணிக்க வேண்டியதாகி விட்டது. இதில் முதல் இருவரும் காங்கிரசை விட்டுப் போய்விட்டாலும் திரு வி.க மட்டும் கட்சியை விட்டு விலகாமல் சற்று ஒதுங்கியே இருந்தார். 1918இல் வாடியா என்பவராம் தொடங்கப்பட்ட சென்னை தொழிற்சங்கத்தில் இவர் ஈடுபாடு காட்டினார். இந்த சென்னை தொழிலாளர் சங்கம்தான் இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்கென உண்டான சங்கங்களில் முதல் சங்கமாகும். இவரது காங்கிரஸ் அரசியல் பணியில் இவர் சிறை சென்றதில்லை. ஆனால் 1947இல் நடந்த பக்கிங்காம் கர்நாடிக் மில் தொழிலாளர் போராட்டத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இவர் 1919இல் மகாத்மா காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தார். லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ.சிதம்பரனாருடன் சென்று கண்டு உரையாடினார். அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் என்பவர் இவரை அழைத்துக் கடுமையாக எச்சரித்தார். நாடுகடத்த வேண்டியிருக்கும் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். அப்படியொரு எண்ணம் கவர்னருக்கு இருப்பது அறிந்து அப்போதிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராசர் கவர்னரிடம் அப்படிச் செய்தால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்று கூறி நாடுகடத்தலைத் தடுத்து நிறுதினாராம்.
1925இல் காஞ்சிபுரம் நகரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் பெரியார் ஈ.வே.ரா. வகுப்பு வாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் திரு வி.க. இந்த தீர்மானத்தை தலைவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பெரியார் மாநாட்டை விட்டு வெளியேறினார். காங்கிரசுக்கும் தலை முழுகிவிட்டு தனி இயக்கம் கண்டது நாடறிந்த வரலாறாகிவிட்டது.
பன்முகத் திறமை கொண்டவராக திரு வி.க. விளங்கினார். அரசியலில், தொழிற்சங்க இயக்கத்தில், தமிழிலக்கியத்தில், சைவ சமயத்தில் இப்படி இவரது பணி பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. மிக எளிமையானவராக இவர் திகழ்ந்தார். 1943இல் இவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு மலர்கள் வெளியிட்டன. மணிவிழாவுக்குப் பிறகு இவர் மேலும் பத்தாண்டுகள் பயனுள்ள பணிகளைச் செய்துகொண்டு வாழ்ந்தார். ஏராளமான நூல்களை எழுதினார். தொழிலாளர் இயக்கங்களிலெல்லாம் பங்கு கொண்டார். இவரது தொழிற்சங்க பணிகளில் வ.உ.சி.யும் பங்கெடுத்துக் கொண்டு, சென்னை துறைமுகத் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவ்வளவு பெயருக்கும் புகழுக்கும் உரியவரான திரு வி.க. சொந்த வீடு இன்றி, வங்கிக் கணக்கு இன்றி, காலில் காலணி இன்றி, எளிய கதராடையில் நான்கு முழ வேட்டி, சட்டை, அல்லது சில சமயங்களில் மேல் துண்டு மட்டும் என்று இப்படி மிக எளியவராகவே இருந்தார். இறுதி நாட்களில் சர்க்கரை வியாதியால் கண்பார்வை இழந்து முதுமை வாட்ட தனது எழுபதாவது வயதில் ஒரு வாடகை வீட்டில் 1953 செப்டம்பர் 17ல் உயிர் நீத்தார்.
இவரைப் பற்றி நூல் எழுதியுள்ள பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி இவரைப் பற்றி கூறியுள்ள கருத்து “படிப்பால் இமயம், பண்பால் குளிர் தென்றல், பணியால் திருநாவுக்கரசர், சுருங்கச் சொன்னால் தமிழகம் கண்ணாரக் கண்ட ஒரு காந்தி. பல சாரார்க்குப் படிப்பினை நிறைந்த வாழ்க்கை, இன்று அவரது நூல்களில் ஒளிமயமாய் வாழ்கிறது”. வாழ்க திரு வி.க. வின் புகழ்!
எண்ணமும் எழுத்தும்
திரு கோபாலன் தஞ்சை