தருமபுரி தொகுதியில் அதிமுக அணியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் செந்தில் குமார் என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார். பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.
ஒவ்வொரு தொகுதிக்கும் எப்படி கணிக்கிறேன் என்பதைக் சொல்ல இயலாது என்பதால் அதை இந்தத் தொகுதிக்கு மட்டும் குறிப்பிடுகிறேன்.
- 2014 ஆம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலைக் கணக்கில் கொள்ளவில்லை. அதற்குக் காரணமுள்ளது. 2014 லோக்சபா தேர்தலின் போது பத்து ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் மற்றும் திமுக கடும் ஊழல் எதிர்ப்பு காரணமாக மக்களிடத்தே பெரிய வெறுப்பைச் சம்பாதித்து இருந்த காலக்கட்டம் அது. மேலும் காங்கிரஸ் , திமுக இரு கட்சிகளுமே பிரிந்தது போலக் காண்பித்து , நாங்கள் நல்லவர்கள் என்ற வேடத்தில் திமுக காங்கிரசை கழட்டி விட்டு தேர்தல் களம் கண்டது. ஆனால் 2G ஊழல் காரணமாக திமுகவின் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த காலக்கட்டம் அது. மோடியை வைத்து தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாமல் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தன. அதிமுக ஜெயாவை பிரதமர் என்று அறிவித்து, திமுகவுடன் யாரும் அணி சேரப் போவதில்லை என்று அறிந்தவுடன் தனித்துக் களம் கண்டார். அம்மா உணவகம், விலையில்லா மருந்தகம் போன்ற திட்டங்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்த காலக் கட்டம். மேலும் சிறுபான்மையினரின் வாக்குகள், திமுகவிற்கு எதிர்ப்பலை, மோடி ஆதரவு எண்ணம் போன்ற காரணங்களால் அதிக அளவிற்கு அதிமுகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வாக்குகளைப் பெற்றன. ஆனால் தற்போது அதிமுக இரண்டாம் முறை வென்றுவிட்டு, ஜெயா இல்லாமல் களம் காண்கிறது. மேலும் தினகரன் தரப்பு வெளியேற்றப்பட்டு களம் காண்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பதால் சிறுபான்மை வாக்குகளில் பெருமளவுக்கு அதிமுக அணியை விட்டுச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக தரப்பில் மோடி இரண்டாம் முறையாக வாக்கு கேட்டு வருகிறார். இரு ஆட்சிக்கும் எதிரான மனநிலையில் இத்தேர்தலை அதிமுக அணி சந்திக்கிறது. இவையனைத்தும் அதிமுக அணிக்கு 2014 ல் ஆதரவாக இருந்த அம்சங்கள். எனவே தான் 2014 தேர்தல் முடிவைக் கணக்கில் கொள்ள வில்லை.
2. 2016 சட்டசபை தேர்தல் முடிவுகளைக் கணக்கில் கொள்ள சில காரணங்கள் உள்ளன. அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை காங்கிரசுடன் கூட்டணி வைத்து எதிர்கொண்ட திமுகவால் அதிகபட்சம் 90 இடங்களைத் தான் பிடிக்க முடிந்தது. அதிமுக தனித்து வேறு தேர்தலை எதிர்கொண்டுள்ளது. 2006 தேர்தலில் இருந்து திமுகவால் அதிமுக அளவிற்கு தனித்துப் பெரும்பான்மை பெற இயலவில்லை. ஆகையால் திமுகவிற்கான வாக்குகள் அதிகபட்சம் 2016 சட்டசபை தேர்தலில் கிடைத்த வாக்குகளே ஆகும். எனவே தான் திமுகவிற்கு சாதகமான 2016 சட்டசபை தேர்தலையே கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவுகள் எப்படி அமையலாம் என்று கணிக்கிறேன்.
3. அதிமுக அணியில் பலம் பொருந்திய கட்சிகள் நிற்கின்றன.
2016 சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை கூட்டணி வாக்குக் கணக்கைப் பார்க்கலாம்.
அதிமுக அணி : 52.36%
திமுக அணி : 42.85%
வித்தியாசம் : 9.51%
அதிமுக அணி அரித்மெட்டிக் படி அதிமுக கூட்டணி 9.51% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
4. அதிமுக வாக்கு வங்கியில் தினகரன் எந்தளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார், அது எந்தளவுக்கு பாதகத்தை அதிமுக அணிக்குத் தரும் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. தினகரன் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் பெரிய அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவார். குறிப்பாக முக்குலத்தோர் அதிகம் வாழும் பகுதிகளில் தினகரனின் தாக்கம் அதிக அளவுக்கு இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் தினகரன் முக்குலத்தோர் கட்சியாகவே அமமுகவை எடுத்துச் செல்வது கண்கூடாகத் தெரிகிறது. குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறேன். இதர தொகுதிகளில் வேட்பாளர் செல்வாக்கு, இடம்பெயர்ந்த முக்கிய முன்னாள் அதிமுக நிர்வாகிகளின் உழைப்பால் கட்சிக்குக் கிடைக்க இருக்கும் வாக்குகள் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் . அது அதிமுகவின் வெற்றியைத் தடுக்காது.
5. திமுகவும் அதிமுகவும் சம அளவில் சாதிக் கட்சிகளை அணிக்குள் கொண்டு வந்துள்ளன. திமுக தரப்பில் விசிக, கோ.தே.ம.க, இந்திய ஜனநாயக கட்சியும், அதிமுக அணியில் புதிய தமிழகம், பாமக, புதிய நீதிக் கட்சியும் உள்ளன.
6. 2016 தேர்தலில் , ம.ந.கூ பெற்ற வாக்குகளில் 2/3 பங்கை திமுக கூட்டணிக்குக் கொடுத்துள்ளேன்
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டுதான் தேர்தல் கணிப்பைச் செய்துள்ளேன். மற்ற பதிவுகளில் யார் வெல்வார் என்ற விபரங்கள் மட்டுமே இருக்கும்.
தருமபுரியில் வெல்லப் போவது யார்?
2016 ல் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 6,81,000
திமுக அணி பெற்ற வாக்குகள் 4,53,000
அதிமுகவின் வெற்றி வாக்கு வித்தியாசம் 2,28,000
இதில் பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி,மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வென்றது. பென்னாகரம், தருமபுரி, ஹரூர் ஆகிய தொகுதிகளில் திமுக வென்றுள்ளது. ஆனால் பாமகவின் வாக்குகளை அதிமுகவுடன் கூட்டினால் அதிமுக திமுக வாக்கு வித்தியாசம் அதிக அளவு வருகிறது. விசிக திமுக அணியில் இருப்பதால், மாற்று சமூக வாக்குகள் பெருமளவுக்கு பாமகவிற்கு சாதகமாகும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் அன்புமணி ராமதாஸ் களத்தில் நிற்பதால் வெற்றியை பாமகவே தட்டிச் செல்லும் என்பதே எனது கணிப்பு. தருமபுரியை திட்டவட்டமாக அதிமுக அணி வெல்லும் தொகுதிகள் வரிசையில் நிச்சயமாக வைக்கலாம்.