ஓர்மையில் ஒரு சிஷிரம் – மலையாள சினிமா – விமர்சனம்
பல படங்களில் இதற்கு முன்பு வந்த படங்களின் காட்சிகளைக் காட்டிலும் பெரிதாக மாற்றங்கள் இருக்காது. குறிப்பாக கதை போகிற போக்கினைப் பார்க்கும் போது , அப்படி என்னதான் வித்தியாசம் உள்ளது என்று பார்த்துக் கொண்டிருக்கிற நமக்குத் தோன்றும். பொதுவாக பள்ளி, கல்லூரி காதல் படங்களுக்கு இது அதிகமாக பொருந்தும். ஒவ்வொரு காதல் கதையின் பலமும் அதன் கிளைமாக்சில் மட்டுமே எந்த அளவிற்கு இப்படம் மற்ற காதல் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டுள்ளது என்பதை நம்மால் பார்க்க முடியும்.
அப்படியான ஒரு படம்தான் “ஓர்மையில் ஒரு சிஷிரம்:”. நீ என்னவாக விரும்புகிறாயோ, எந்த இலக்கிற்காக நீ Efforts ஐ போடுகிறாயோ , அதற்கான பலனைக் கடவுள் ஒருநாள் தருவார். தனி ஒருவனுடைய இலக்குகளின் பின்னால் பெற்றோர்கள் உள்ளனர். பெற்றோர் உன்னுடைய இலக்கைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் பட்சத்தில் உன் வாழ்க்கை அதற்கேற்ப அமையும். இதுதான் கதை. இதை ஒரு பள்ளிக் காதல் செய்த ஜோடிகளை மையப்படுத்தியும் அவர்களின் பெற்றோர்களின் எண்ணங்கள் எப்படியானவையாக இருக்கிறது என்பதை மையப்படுத்தியும் கதை நகர்கிறது..
நாயகனின் வீட்டில் அப்பா தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். அம்மா, மகனது விருப்பத்தின் படி அவன் இருக்கட்டும் என்கிற எண்ணமுடையவள். நாயகியின் வீட்டில் அப்படியே உல்டா. நாயகியின் தந்தை அத்தனை விசாலமான பார்வை கொண்டவர். நாயகியின் தாய், தனது குழந்தை பெண்ணானவள். அவள் இப்படி இருந்தால் போதும் என்ற எண்ணமுடையவள். நாயகனுக்கு சினிமா இயக்குனராக வேண்டும். நாயகிக்குத் தான் விரும்பியைதைச் செய்ய வேண்டும். இதை அவர்கள் செய்து காட்டினார்களா?
ஒரு பள்ளிக் காதலை மையப்படுத்தி கதை செல்கிறது. பள்ளியில் நாயகியைச் சுற்றி வரும் ஒரு சராசரி சீனியர் மாணவன். மற்றபடி பள்ளிக் கதை சுவராஸ்யமாக மற்ற படங்களில் காட்டியுள்ளது போலவே செல்கிறது. ஒரு காதல் படத்தில் அதைத் தாண்டி நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது இயல்புதானே!
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது. அதுவே நாயகனுக்கும் நடக்கிறது. இருவரும் காதலித்து இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லாமலேயே பிரிந்து செல்லும் காதல்கள் உலகில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி கொட்டிக் கிடக்கும் காதல்களில் ஒன்றுதான் படத்தில் வரும் நாயக, நாயகியின் காதலும். நாயகியின் தந்தை மாரடைப்பில் காலமான ஒரு காட்சியிலிருந்து தான் இப்படம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது. விரும்பியதைச் செய்ய நினைக்கும் மகளுக்கு தந்தையின் இழப்பின் பின்னால், அவளது வாழ்க்கையை சராசரியாக சிந்திக்கும் தாயும் மாமனும் முடிவெடுக்கிறார்கள். நாயகனுக்கோ தந்தையே மகனின் காதலையும் கனவையும் புரிந்து கொண்டு பின் நிற்கிறார். இந்தப் படத்தை ஓஹோவென்று பாராட்டவும் முடியாது. ஒரேயடியாக நிராகரிக்கவும் முடியாது. அதுதான் ’ ஓர்மையில் ஒரு சிஷிரம்”.
நாயகி இனிமையாக அழகாக இருக்கிறார். இலக்கின்றி சவசவ என்று நகர்ந்தாலும் படம் போர் அடிக்கும்!