கழகக்கூடாரத்தில் கலவரம் – II
கொள்கையளவில் சமூக நீதியென்றும், சிறுபான்மைக் காவலர்களென்றும் பேசினாலும், தேர்தல் அரசியலில் பழம்தின்று கொட்டைபோட்ட திமுக, எப்போதுமே வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பின் அடிப்படையிலேயே சீட் வழங்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது. கலைஞர் காலத்தில் இந்த அணுகுமுறை குறித்த ஆதங்கங்கள் வெளிப்படையாகத் தெரியாமல், ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போது திமுகவில் நீறுபூத்த நெருப்பாகக் காணப்படும் உட்கட்சிப்பூசல்கள், தலைமைக்குக் கூடுதலான தலைவலியை விளைவித்திருப்பது கண்கூடு. பட்டியலினத்தைச் சார்ந்த சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் அண்மைக்காலமாகப் புறக்கணிக்கப்படுவதாக கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது. கட்சியின் பெருந்தலைகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருவதும், அதை தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பதும், வெறும் ஒழுங்குப் பிரச்சினை மட்டுமா அல்லது திட்டமிட்டு நடத்தப்படுகின்ற நாடகமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்தப் பின்னணியில், தொல்.திருமாவளவன், பாஜக தலைவரின் தேர்வுகுறித்து எழுப்பிய கேள்விகளை அணுகும்போது, அவரது பதட்டத்தின் தீவிரத்தை நம்மால் உணர முடிகிறது. ஆரிய பார்ப்பனக் கட்சியென்று பரிகசிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் குரல் எழுப்புவதும், சமூகநீதிக் காவலர்கள் என்று தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட திமுகவின் தலைவர்கள், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதும், காற்று வேறு திசையில் திரும்புவதன் குறியாகவே காணப்படுகிறது. கூட்டணிக் கட்டாயங்களுக்காக, திமுகவின் அத்துமீறல்களைப் பூசிமெழுக வேண்டிய நிலையிலிருப்பது, தற்போது தொல்.திருமாவளவனின் அரசியல் எவ்வளவு பலவீனப்படுத்தப் பட்டுள்ளது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.
தமிழக பாஜகவுக்கு எல்.முருகனைத் தலைவராக நியமித்திருப்பது, மத்திய பாஜக தலைமையின் தொலைநோக்கையும் துணிச்சலையும் காட்டுகிறது. இந்தத் தேர்வு பாஜகவினரையே ஆச்சரியப்படுத்தியிருந்தாலும், எல்.முருகன் தலைமையேற்றபிறகு, தமிழக பாஜகவில் நிகழ்ந்து வருகின்ற மாற்றங்களை எதிர்க்கட்சியினர் கூர்ந்து கவனித்தே வருகின்றனர். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு, ஆர்.எஸ்.எஸ், ஏபி.விபி, சுதேசி ஜாக்ரண் மஞ்ச் ஆகியவை தமிழக பாஜகவுடன் தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றுவது, திமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மிகுந்த கலவரத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஊரடங்கு நீக்கப்பட்டதும், தமிழக பாஜகவில் மேலும் சில அதிரடி மாற்றங்கள் நிகழும் என்பதும், எல்.முருகன் மும்முரமாய்க் களப்பணியில் இறங்கி, கட்சியை அடிமட்டத்திலிருந்தே வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார் என்பதும், இரண்டு கழங்கங்களையும் சற்றே நிலைகுலைய வைத்துள்ளது.
எல்.முருகன் வருகை, தமிழக அரசியலில் ஏற்படுத்தவுள்ள சில சலசலப்புகளை மேலும் விரிவாக அலச வேண்டியது அவசியமாகும். அவர் தலைமையேற்றுள்ள பாஜக மட்டுமின்றி, ஆளுங்கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகியவற்றோடு, அதன் கூட்டணிக்கட்சிகளிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் பாரபட்சமின்றி விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அருமை ஜி!
காவிகளுக்கு உற்சாகம் தரக் கூடிய இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதப் பிரார்த்திக்கிறேன். மகிழ்ச்சி!
நல்ல அவதானிப்பு; நிறைய எழுதுங்கள்
Excellent observation and narration ji.
Kelli it up