கழகக்கூடாரத்தில் கலவரம் – I
ஒரு அரசியல் கட்சியின் பதட்டத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? அந்தக் கட்சியின் தலைவர்/கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடுகின்ற கருத்துக்களைக் கவனித்தால் இதற்கான விடை கிடைக்கும். உதாரணத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் எவ்வளவு பதட்டமடைந்திருக்கிறார் என்பதற்கு, அண்மையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குறித்து அவர் எழுப்பியுள்ள இரு கேள்விகளே சான்று. ‘தலித் என்பதனால் பாஜக தலைவர் பதவி கொடுக்கப்பட்டதா அல்லது திறமை அடிப்படையிலா?’ என்பதே அவரது கேள்வியின் சாரம். ‘இதுவா அல்லது அதுவா?’ என்ற அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்வி, அரசியல் விமர்சகர்கள் பலரை ஆச்சரியத்திலும், சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.
என்ன சொல்ல வருகிறார் தொல்.திருமாவளவன்? தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கும், திறமை மிக்கவர் என்பதற்கும் தொடர்பு இல்லையென்று சொல்கிறாரோ? இப்படியொரு சந்தேகம் அவருக்கே ஏற்பட்டு விட்டதா என்று ஒரு புதுக்கேள்வி முளைத்து நிற்கிறது. காரணம், அண்மைக்காலங்களில், அவர் சார்ந்திருக்கிற தி.மு.கவின் சில பெரும்புள்ளிகள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து வெளியிட்டு வருகின்ற ஆட்சேபிக்கத்தக்க கருத்துக்களின் பின்னணியில் பார்த்தால், தொல்.திருமாவளவனும் அந்தக் கருத்துக்களை மறைமுகமாக அங்கீகரிக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்புதானே?
சமூக நீதியென்று முழங்குகின்ற திராவிடக் கட்சிகள் செய்யத்துணியாத ஒரு காரியத்தை, மனுவாதக்கட்சியென்று திராவிடக்கட்சிகளால் விமர்சிக்கப்படுகின்ற பாஜக செய்திருப்பது தொல்.திருமாவளவனின் அஸ்திவாரத்தை ஆட்டம்காணச் செய்து விட்டதோ? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஒரே உரிமைக்குரலாக இருந்தவருக்கு, ஒரு தேசியக்கட்சியிலிருந்து அதைவிடவும் வலுவான குரல் எழும்புவதைக் கேட்பது நாராசமாக இருக்கிறதோ?
திமுகவின் அதிகாரமையத்தில் அங்கம் வகித்துவருகின்ற ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் போன்றவர்கள், அடுத்தடுத்து பட்டியல் சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியபோது, தொல்.திருமாவளவனின் சம்பிரதாயமான கண்டனத்தில் சங்கடமே மிதமிஞ்சிக் காணப்பட்டது. அரசியல் நிர்ப்பந்தங்களின் காரணமாக, திமுகவின் சில தலைவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்திய பட்டியல் சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை மென்று விழுங்கிச் செல்ல வேண்டியிருந்ததேயன்றி, சமூகநீதியென்று சூளுரைத்துக் கொண்டிருக்கிற ஒரு கட்சியின் சாயம் வெளுத்துக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டு, அதனை வன்மையாகக் கண்டிக்கின்ற துணிச்சல் வராமலே போய்விட்டது ஏன்?
பாஜக மாநிலத் தலைவராக, எல்.முருகன் பதவியேற்று சில மாதங்களே ஓடிவிட்ட நிலையில், ‘சாதி அடிப்படையிலா? தகுதி அடிப்படையிலா? எதனால் எல்.முருகன் தலைவராக்கப் பட்டார்?’ என்று பதட்டமடையும் தொல்.திருமாவளவனுக்கு, திமுக தலைவர்களின் அத்துமீறிய பேச்சுக்கள் ஏன் பதட்டத்தையோ, அறச்சீற்றத்தையோ ஏற்படுத்தவில்லை என்பதே கேள்வி. ஆனால், அதற்கான விடையை அரசியல் விமர்சகர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
திமுக கூடாரத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்ற சலசலப்புகளைக் குறித்து, அரசல்புரசலாக வெளிவந்து கொண்டிருக்கின்ற தகவல்கள் தொல்.திருமாவளவனின் பதட்டத்தை அதிகரித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், திமுக தனது கூட்டணியை வலுப்படுத்த சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அரசியல் நோக்கர்கள் கவனித்தே வருகின்றனர். இதில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு எத்தகையது என்பதை அவரவர் ஊகத்துக்கே விட்டுவிடுவது நல்லது. ஆனால், சட்டமன்றத் தேர்தலின்போது, சில அவசியமற்ற சுமைகளோடு களத்திலிறங்க திமுக விரும்பவில்லை. உதாரணமாக, திமுக ஒரு இந்துவிரோதக்கட்சி என்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தைத் தகர்ப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதைப்போலவே, வடதமிழகத்தில் பரவலான வெற்றியைக் குவிக்க வேண்டுமென்றால், விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் நம்பியிராமல், அதற்கு மாற்றான கட்சிகளுடனான உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அறச்சீற்றம் என்றால் தர்மசங்கடமான நிலையில் உள்ளது என்பதா
அருமை!
செஞ்சோற்றுக்கடன் தீர்க்கனும்ல…..
சிறந்த பதிவு. திமாவின் சாதீய முகமூடி அவர் கையாலேயே கிழிக்கப்பட்டு விட்டது. பட்டியலின் நண்பர்கள் தங்கள் தலைமை பற்றி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.