சினிமாசெய்திகள்

ஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா

சில படங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கும். அது என்னவென்றால், படத்தைப் பார்க்கப் போகும்போதே அப்படம் கேவலமாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்துக் கொண்டேதான் செல்வோம். நாம் எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் சுமாராக இருந்துவிட்டால்கூட அது ஒரு நல்ல படமோ என்ற மயக்கம் சிலருக்கு ஏற்பட்டுவிடும். இதை ஒட்டியே சில படங்களுக்கு மைனஸ் பாயிண்ட் உண்டு. அது என்னவென்றால், நாம் பார்த்த படம் நாம் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருக்கும். ஏ1 திரைப்படம் இரண்டாம் வகையைச் சார்ந்தது.

சந்தானத்தின் இந்தப் படம் எப்படியும் மோசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேதான் நான் திரையரங்குக்குள் நுழைந்தேன். நான் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருந்தது.

இப்படத்தின் டீசர், பிராமண சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாக இருந்தது. இதை ஒட்டிப் பேசிய சந்தானம், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்றும் சில விஷயங்களைக் கிண்டலுக்கு உள்ளாக்கினால்தான் காமெடி செய்ய முடியும் என்றும் வேலை வெட்டி இல்லாதவர்களே இதை எதிர்ப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது ஒன்று உறுதியாகிறது. வேலை வெட்டி இல்லாதவர்கள் இது போன்ற படத்தை எடுப்பவர்களும் இப்படத்தில் நடிப்பவர்களும்தான்.

இந்தப் படத்தை ஜான்சன் என்ற இயக்குநர் இயக்கி இருக்கிறார். ஜான்சன் என்ற பெயருடையவர் என்பதால் இப்படம் இப்படி பிராமணர்களைத் தாக்குகிறது என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால் இப்படம் சந்தானத்தின் திரைப்படமாகவே அறியப்படுகிறது. ஜான்சன் என்பவர் இதற்கு முன்பு ஏதேனும் திரைப்படம் எடுத்திருக்கிறாரா என்ற தகவல் கூட எனக்குத் தெரியாது. சந்தானம் போன்றவர்களே இப்படிப்பட்ட படத்தை எடுக்கத் துணியும்போது மற்றவர்களைச் சொல்லி பொருளில்லை.

நான் கூட தொடக்கத்தில் பிராமணர்களை அத்தனை கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் எத்தனை முடியுமோ அத்தனை அத்தனை இப்படத்தில் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சேரியில் வாழ்பவர்கள் முட்டாள்கள், குடிகாரர்கள் என்றும் மிகக் கேவலமானவர்கள் என்ற ரீதியிலும் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இந்த இரட்டை நிலையிலிருந்து தமிழ்த் திரைப்படங்கள் விடுபடாத வரை நமக்கு மோட்சம் இல்லை.

இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப் போற்றுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை எந்த நேரத்திலும் சிதைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். படத்தின் மைய முடிச்சே அந்தக் கதாபாத்திரத்தைச் சீரழிப்பதுதான் என்பது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதை எப்படி சீரழித்து இருக்கிறார்கள் என்பதை திரைப்படத்தில் பார்த்தால்தான் தெரியும். நேர்மையானவராகக் காட்டப்பட்ட அந்தப் பிராமணக் கதாபாத்திரத்திற்கு மூன்று மனைவியர். ஒருவர் வட இந்தியப் பெண். இன்னொருவர் சேரியில் வாழும் பெண் ரௌடி. இதில் அந்தப் பிராமணர் நடு இரவில் கருவாட்டுக் குழம்பை வாங்கிச் சாப்பிடுவார் என்றெல்லாம் வசனம் வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் பொருட்படுத்தத்தக்க அம்சம் ஒன்று கூடக் கிடையாது என்பது விஷேசம். சந்தோஷ் நாராயணன் இசை உட்பட. பிராமணர்களைக் கேவப்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. சந்தானம் தொலைக்காட்சியில் பேசும்பொழுது சொன்னார், திரைப்படங்களை இப்படி எடுத்தால்தான் காமெடி செய்ய முடியும் என்று‌ அப்படியும் காமெடியே இல்லை என்பது ஒரு பக்கம். அவருக்கும் தெரிந்திருக்கிறது, ஜான்சனுக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, பிராமணர்களை மட்டுமே வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்றும் இதில் வரும் இன்னொரு ஜாதி என்ன என்பதைக் காட்டவே கூடாது என்றும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் மறந்தும் ஒரு சொல் கூடச் சொல்லிவிடக் கூடாது என்றும் இவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. பிராமணப் பெண்ணிடம் முட்டை சாப்பிட்டுத்தான் தன் காதலை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் சந்தானம் உள்ளிட்ட திரையுலகத்தினர் எந்த படத்திலாவது இஸ்லாம் பெண் தன் காதலை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா?

தமிழ்த் திரையுலகமே மிக மோசமான ஒரு சூழலில் சிக்கி இருக்கிறது. இந்திய வெறுப்பு, ஹிந்து வெறுப்பு, பிராமண வெறுப்பு என்ற மூன்றும் உள்ளடக்கி உருவாகியிருக்கும் இந்தச் சுழலில் சிக்காத நடிகர்களே இன்று கிடையாது என்று சொல்லிவிடலாம். இவர்களிடமிருந்து தமிழ்நாட்டை நாம் மீட்டாக வேண்டும்.

இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் காட்டப்படும்போது ஒரு நொடி மட்டுமே கவனித்தேன், அதில் லீலா மீனாட்சி என்ற பெயர் வந்தது. யார் இந்த லீலா மீனாட்சி என்று தெரியவில்லை.

– ஹரன் பிரசன்னா

(Visited 2,899 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close