ஆன்மிகம்

அவன் மேனி ஆனேனோ திருப்பாணாரைப் போலே!

”உறையூரில் ஒரு நாள் பாணர் குலத்தைச் சேர்ந்த தம்பதி ஒரு குழந்தையைக் கண்டு எடுத்தனர். அந்தக் குழந்தையே திருப்பாணாழ்வார்” என்று கதையை ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.

குழந்தையே இல்லாத அந்தத் தம்பதிக்கு மிகுந்த சந்தோஷம். பாலூட்டி சீராட்டி வளர்த்தார்கள். சிறுவயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது, பாணர் அவர்களுடன் சேர்ந்து விளையாடமாட்டார். அவருடைய பொழுதுபோக்கு கையில் பாண் இசைக் கருவியைக் மீட்டிக் கொண்டு திருமால் மீது பாட்டுப்பாடிக்கொண்டு இருப்பது. எப்போதும் இசைக்கருவியுடன் அலைந்துகொண்டு இருப்பதால் பாணர் என்று பெயர் பெற்றார்.

பாணர் தாழ்ந்த குலம் அதனால் அந்த நாள் வழக்கப்படி அவர் கோவிலுக்குள் செல்லவில்லை. தினமும் காலை உறையூரிலிருந்து காவிரிக் கரைக்கு வருவார். அங்கே நின்றுகொண்டு தெரியும் கோபுரத்தைப் பார்த்துத் திருவரங்கனைப் பற்றிப் பாட ஆரம்பிப்பார். நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருப்பார். பசி, தூக்கம் எதுவும் கிடையாது.

பாணருக்கு அருள் புரிய வேண்டும் என்று பெருமாள் நினைத்தார். ஒரு விளையாட்டை நிகழ்த்தினான்.ஒரு நாள் பாணர் மெய்மறந்து பாண் இசைத்துப் பாடிக்கொண்டு இருந்தார். அந்தச் சமயம் லோகசாரங்க முனிவர் பெருமாள் திருமஞ்சனத்துக்கு ( அபிஷேகம் ) தீர்த்தம் எடுக்கக் காவிரிக்கரைக்கு குடத்துடன் வந்தார்.

வழியில் பாணர் மெய்மறந்து பாடிக்கொண்டு இருக்க, லோகசாரங்க முனிவர் “தூரப்போ! தூரப்போ!” என்றார். பாணர் காதில் அது விழவில்லை. முனிவர் “தள்ளிப்போ தள்ளிப்போ!” என்று குரலை உயர்த்தினார். பாடிக்கொண்டு இருந்த பாணர் காதில் அதுவும் விழவில்லை.எப்படி மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை எழுப்ப ஒரு கல்லை அவர் பக்கம் எறிந்தாரோ அதுபோல லோகசாரங்க முனிவர் ஒரு சிறுக் கல்லை எடுத்து அவர் பக்கம் எறிந்தார்.

பாணரின் கவனத்தை ஈர்ப்பதற்காக எறிந்த கல் துரதிருஷ்டவசமாகப் பாணர்மீது பட்டுவிட்டது. உடனே அவர் முழித்துக்கொண்டார். “சாமி ! என்னை மனித்துவிடுங்கள். அபசாரம் ஆகிவிட்டது!” என்று உடனே விலகிச் சென்றார்.

லோகசாரங்க முனிவர் பெருமாளுக்குக் குடத்தில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார். பெருமாளும் பிராட்டியும் ”உம்மக் கையால் எங்களுக்கு இனி திருமஞ்சனம் வேண்டாம்!” என்றனர். லோகசாரங்க முனிவர் பதறினார் ஏன் என்று புரியாமல் விழித்தார்.

“காவிரிக்கரையில் நீர் பார்த்த பாணர் எனக்கு மிகவும் வேண்டியவன். என் நெஞ்சில் குடிக்கொண்டு உள்ளான். அதனால் பாணர்மீது பட்ட கல் என் நெஞ்சில் பட்டது” என்றார். முனிவர் “ஐயோ தெரியாமல் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று பெருமாள் காலில் விழுந்தார்.

பெருமாள் “லோகசாரங்கரே ! எனக்கு நெருக்கமாக இருக்கும் பாகவதன் மீது நீர் செய்த அபசாரத்துக்கு, அந்தப் பாகவதனிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். பாணரிடம் மன்னிப்பு கேட்டு அவரை நீர் இங்கே அழைத்து வாரும்!” என்றார்.

லோகசாரங்க முனிவர் காவிரிக்கரையை நோக்கித் தலைதெறிக்க ஓடினார். அங்கும் இங்கும் தேடினார். ஓர் இடத்தில் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டு பாணர் பாடிக்கொண்டு இருந்தார். முனிவர் பாணர் காலில் விழுந்து “தெரியாமல் செய்த பிழை! தயவு செய்து மன்னிக்க வேண்டும்! ” என்றார்.

பாணர் பதறினார் ”சாமி! நீங்கத் தான் என்னை மன்னிக்க வேண்டும்! பெருமாளுக்குத் தொண்டு செய்வதைத் தடுத்த பாவத்திற்காக !” என்றார் பாணர்.

முனிவர் கண்களில் கண்ணீருடன் “நம்பெருமாள் உம்மைக் கையோடு அழைத்து வரக் கட்டளையிட்டுள்ளார்” என்றார். பாணர் “சாமி நான் தாழ்ந்த குலம், என் கால் திருவரங்க மண்ணில் படக் கூடாது” என்று பின் வாங்கினார்.

லோகசாரங்க முனிவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரங்கனின் கட்டளை எப்படி மீறுவது ? சட்டென்று அவர் “உமது கால் மண்ணில் படாமல் அழைத்துச் செல்கிறேன்” என்று கருட வாகனம்போலக் கீழே அமர்ந்து ”என் தோளில் ஏறி அமருங்கள்” என்றார். பாணர் தயங்கினார்.

முனிவர் “இது அரங்கன் கட்டளை, இதை யாராலும் மீற முடியாது. தயங்காமல் ஏறிக்கொள்ளுங்கள்” என்றார்.முனிவரின் தோளில் ஏறிக்கொண்டு கோவிலுக்குள் முதன் முதலாக நுழைந்தார் பாணர். உள்ளமும் உடலும் பூரிப்பாக இருந்தது.

முதல் கோபுரத்துக்குள் நுழைந்தார். உள்ளே அரங்கன் காத்துக்கொண்டு இருந்தான். பாணர் மற்ற கோபுரங்களைக் கடந்து கருவறைக்குள் வருவதற்கு நேரம் ஆகும். அரங்கனுக்கு உடனே காண ஆசை. பாணருக்காக அரங்கன் தன் காலைச் சற்று நீட்டினான்.

உடனே பாணர் கண்களுக்கு முன் அரங்கனின் பாதம் தெரிந்தது. அடுத்த கோபுரம் கடந்தார் பீதாம்பரமும் சிவந்த ஆடைகளும் ஜொலிப்பதைப் கண்டார். அடுத்த கோபுரத்தைக் கடக்கும்போது வயிற்றுப்பகுதியும். அடுத்து அடுத்து கோபுரங்களைக் கடக்கும்போது இடுப்பும், மார்பும் அதில் முத்து மாலைகளும் தெரிய, கருவறை வரப் பாணர் கீழே இறங்கினார்.

பெருமாளின் முகம் பிரகாசமாகத் தெரிந்தது. மெய்சிலிர்த்தது. திருமணத் தூண்களைப் பிடித்துக்கொண்டார். அரங்கன் அருகே சென்றபோது வெண்ணெய் வாசனை அடித்தது. திருவரங்கனின் சிவந்த உதடுகள் புன்முறுவலுடன் காட்சி கொடுத்தது. கண்கள் பாணரை நோக்கிக் கருணையுடன் நீண்டது! ”இனி இந்த அரங்கனைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்காது என்று கண்களை மூடிக்கொண்டார்.

உடனே ’திருப் பாண் ஆழ்வார்’ பெருமாளுடன் கலந்தார். ’பாண் பெருமாள்’ ஆனார்.கதையைக் கேட்டுக்கொண்டு இருந்த ராமானுஜர் கண்களை மூடிக்கொண்டு இருந்தார்.

“சாமி! திருப்பாணாழ்வார் போல நான் திருவரங்கன் மீது பாடவும் இல்லை, அவருடன் கலக்கவும் இல்லை! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.ராமானுஜர் கண் திறக்காமல் பேசாமல் இருந்தார்.


“சாமி ! என்ன யோசிக்கிறீர்கள் ?” என்றாள் அந்தச் சின்னப் பெண்.“பெண்ணே! திருக்கோளூரில் இருந்தாலும் உன் கதையால் என்னை நடக்காமலே திருவரங்கம் அழைத்துச் சென்று அரங்கன் முன் நிறுத்திவிட்டாய். உனக்கு என் வந்தனங்கள்” என்றார்.

சாமி! நான் சின்னப் பெண் என்னை நீங்கள் வணங்கலாமா ?” என்று அந்தப் பெண் பாணர்போலப் பதறினாள்.

“குழந்தாய்! அடியார்களை வணங்க வயது வித்தியாசம். ஆண் பெண், குலம் எதுவும் பார்க்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு “இதற்கு முன் தொண்டரடிப்பொடியாழ்வார் பற்றிக் கூறினாய். இப்போது திருப்பாணாழ்வார் பற்றி. இரண்டு பேரும் அடியாருக்கு ஆட்படுத்தத் தான் வேண்டும் என்று பெருமாளிடம் பிராத்திக்கிறார்கள்” என்றார்.

“புரியவில்லையே சாமி!” என்றாள் அந்தப் பெண்.

சொல்லுகிறேன் ! திருப்பள்ளியெழுச்சியில் தொண்டரடிப்பொடியாழ்வார் ‘உன் அடியார்க்கு- ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!’ என்கிறார் என்று அரங்கனை எழுப்புகிறார்” என்று ராமானுஜர் சொல்லி முடிக்க உடனே அந்தப் பெண் ”திருப்பாணாழ்வார் ‘அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்’ என்கிறார்” என்றாள்.

ராமானுஜர் ”பிரமாதம்! உடனே கண்டுபிடித்துவிட்டாயே!” என்றார்.“சாமி! எனக்கு ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா ?” என்றாள்.“கேளு குழந்தாய்!” என்றார் ராமானுஜர்“பெருமாள் கருட வாகனத்தில் போகிறார். பெருமாள் பெரியவர். கருடாழ்வார் அவருக்குத் தொண்டு செய்பவர். ஆனால் லோகசாரங்க முனிவர் பெரியவர் அவர் தோளில் ஆழ்வார் ஏறிக்கொள்ளலாமா ?” என்றாள்.

சிஷ்யர்களும் அந்தக் குட்டிப் பெண்ணும் ராமானுஜர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்க ராமானுஜர் ”பெண்ணே நல்ல கேள்வி! திருத்துழாய் பெருமாளின் திருவடியில் இருக்கிறது, சில சமயம் அவனுடைய தோளில் இருக்கிறது ஏன் திருமஞ்சனம் போது எம்பெருமானது திருமுடியிலும் இருக்கிறது ஆனாலும் திருத்துழாய் அவனுக்கு அடிமைப்பட்டதே. அதே போலத் திருப்பாணாழ்வாரும் லோகசாரங்க முனியின் தோளில் வீற்றிருந்தாலும் அவருடைய அடியவரே என்று புரிந்துகொள்ள வேண்டும்!” என்றார்“மிக அருமையான விளக்கம் சாமி!” என்றாள்.

ராமானுஜர் தொடர்ந்தார் “லோகசாரங்க முனிவர் வேண்டிக் கொண்டபடியினால் அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஆழ்வார் அவர் தோளில் அமர்ந்தார்” என்றார்பக்கத்திலிருந்த சிஷ்யர் “வசிஷ்டருடைய பேச்சைத் தசரதன் கேட்டது போல!” என்றார்உடனே அந்தப் பெண் ”அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே!” என்றாள்

(Visited 112 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close