ஆன்மிகம்

நான் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே!

குட்டிப் பெண் ”சாமி நீங்கள் திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வாரைச் சேவித்துவிட்டு வரீங்க. அந்த ஆழ்வார்பற்றித் தான் சொல்லப் போகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்தாள்.

ராமானுஜருக்கும் அவர்களுடைய சீடர்களுக்கும் ஆவலாகக் கதை கேட்க ஆரம்பித்தார்கள்.

திருக்குருகூரில் காரியாருக்கும், உடைய நங்கைக்கும் திருமணமாகிப் பல காலமாகக் குழந்தை இல்லை. திருக்குறுங்குடி பெருமாளை வேண்டிக்கொள்ள ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தது முதல் பால் அருந்தவில்லை. அழவில்லை. கண் திறந்து பார்க்கவும் இல்லை. ஆனால் குழந்தை உயிருடன் இருந்தது. மற்ற குழந்தைகளைக் காட்டிலும் மாறுபட்டு இருந்ததால் அதற்கு மாறன் என்று பெயர் சூட்டினார்கள்.


காரியாரும், உடைய நங்கையும் என்ன செய்வது என்று தெரியாமல், பிறந்த பன்னிரண்டாவது நாள் குழந்தையைத் திருக்குருகூர் கோயிலில் உள்ள பெரிய புளியமரத்தின் அடியில் ஒரு தொட்டில் கட்டி பெருமாளே நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று அதில் விட்டுவிட்டார்கள். அந்தக் குழந்தை தவழ்ந்து அந்தப் புளிய மரத்து பொந்தில் உட்கார்ந்தது. பதினாறு வருடம் கடந்தது. ஆனால் அந்தக் குழந்தை கண் திறவாது, வாய் பேசாது யோக நிலையிலிருந்தது.


இப்ப எங்க ஊர் மதுரகவி ஆழ்வார்பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன் என்று தொடர்ந்தாள்.

திருக்கோளூரில் பிறந்தவர் மதுரகவி ஆழ்வார். வேதம், வேதாந்தம், தமிழ், வடமொழி எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தபின் அவர் புண்ணிய தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார். ஒரு நாள் அயோத்தியில் ராமரை சேவித்துவிட்டு இரவு ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டு ஆகாசத்தைப் பார்த்தார். வானத்தில் பேரொளி ஒன்று தெரிந்தது.

இந்த ஒளி எதனால், எங்கிருந்து வருகிறது என்று அறிய ஆவலாகப் பலரைக் கேட்டார் ஆனால் யாருக்கும் விடை தெரியவில்லை.
அந்தப் பேரொளி தென் திசையிலிருந்து வந்தது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தார். தினமும் இரவு அந்த ஓளி வரும் திசையை நோக்கிப் பல மாதங்கள் நடந்த பின் ஒரு நாள் அந்த ஒளி மறைந்தது. ஒளி தோன்றிய இடம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார்.

அங்கு இருந்தவர்களிடம் “இது என்ன இடம்? இங்கே ஏதாவது விசேஷம் உண்டா ?” என்று கேட்டபோது ஊர் மக்கள், இது திருகூருகூர், ஊரில் விசேஷம் ஒன்றும் இல்லை ஆனால் இங்கே ஒரு குழந்தை பதினாறு வருடமாகப் பால் குடிக்காமல், மூச்சுப் பேச்சு இல்லாமல், புளியமரத்துப் பொந்தில் வாழ்ந்துவருகிறது” என்றார்கள்.

மதுரகவி ஆழ்வார் இந்தக் குழந்தையிடம் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும் என்று அந்தப் புளியமரம் இருக்கும் இடத்துக்குச் சென்றார். மேலே பார்த்த அதே ஒளியை அந்தக் குழந்தையின் முகத்தில் தெரிந்தது. குழந்தை அசைவற்று இருந்தது. குழந்தையை எழுப்பக் கீழே கிடந்த ஒரு குண்டுக் கல்லை எடுத்துக் கீழே போட்டார். பெரிய சத்தம் கேட்க, அந்தக் குழந்தை கண்ணைத் திறந்து மதுரகவியைப் பார்த்தது.

மதுரகவி அந்தக் குழந்தை பேசுமா ? என்று யோசித்தார். அந்தக் குழந்தையைப் பார்த்துக் தத்துவக் கேள்வி கேட்க அதற்கு அந்தக் குழந்தை பதில் சொன்னது. உடனே மதுரகவி அந்தக் குழந்தையின் பெருமையை உணர்ந்தார். ஞானத்தை வியந்து குழந்தையின் காலில் விழுந்து, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். பிறகு ஆழ்வாருக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்துகொண்டு அவர் பாசுரங்கள் பாட அதை ஓலைச்சுவடியில் எழுதினார் என்று அந்தப் பெண் கதையை நிறுத்தினாள்.

ராமானுஜர் “மிக அருமை பிள்ளாய்! நான் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப்போலே! என்பதற்கு என்ன பொருள்” என்றார்.
குட்டிப் பெண் சிரித்துக்கொண்டு ”சொல்கிறேன்” என்று தொடர்ந்தாள்.


ஆழ்வார் வேதத்துக்குச் சமமாக நான்கு பிரபந்தங்களைப் பாடினார். பல ஊர் பெருமாள் ஆழ்வாரிடம் வந்து எங்களைப் பற்றிப் பாடுங்கள் என்று ஆழ்வாரிடம் பாடல் வாங்கிக்கொண்டு சென்றார்கள். இவ்வளவு ஞானம் உள்ள ஆழ்வார் தன் பாடல்களில் எனக்கு அறிவு இல்லை, நல்ல குணங்கள் இல்லை, நான் ஒரு பாவி என்று தன்னை மிகவும் தாழ்ந்தவராகக் கூறிக்கொள்கிறார்.
இவ்வளவு ஞானம் உள்ள ஆழ்வாரே தன்னை சிறியன் என்று கூறிக்கொள்கிறார்.

ஒன்றுமே இல்லாத நான் அப்படிச் சொல்லவில்லையே!. அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.

“குழந்தாய்! சற்றுப் பொறு. நம்மாழ்வார் மட்டும் தன்னை சிறியன் என்று கூறிக்கொள்ளவில்லை, தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் , என் குரு ஆளவந்தார் கூட அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள்..”

“சாமி, அப்படி என்றால் நான் உடனே இந்த ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.

“பெண்ணே ஏன் இந்த அவசரம். நம்மாழ்வார் தான் சிறியன் என்று கூறுவதோடு இல்லாமல், பெருமாளையே நீ சிறியன் என்று கூறுகிறார் தெரியுமா ?” என்றாள்.

“அப்படியா ? புதிராக இருக்கிறதே ! விளக்க முடியுமா ?” என்றாள் அந்த பெண் ஆர்வமாக.

ராமானுஜர் தொடர்ந்தார் “இந்த உலகங்கள் யாவும் உன் உள்ளே அடங்கியிருக்கிறது. நீயோ என் இதயத்தில் இருக்கிறாய். அதாவது என்னுள் இருக்கிறாய். அதனால் நீ பெரியவனா ? நான் பெரியவனா ? என்று கேட்க நானே பெரியவன்” என்கிறார் நம்மாழ்வார்.

“சாமி நான் ஒன்று கூறவா ? “ என்று கேட்டு ராமானுஜர் பதிலுக்குக் காத்துக்கொண்டு இருந்தாள்.

ராமானுஜர் “தாராளமாகக் கூறு” என்று சொன்னவுடன்
“ராமர் எப்பேர்பட்ட பெருமாள்.அவரையே தாங்கியது அவருடைய பாதுகை. அதனால் ராமர் பெரியவரா அவர் பாதுகை பெரியதா ? என்பது போல இருக்கு நம்மாழ்வார் கூறுவது!” என்றாள்.

“ஆகா என்ன ஒரு எடுத்துக்காட்டு.. அந்தப் பாதுகையே நம்மாழ்வார் !” என்று ராமானுஜர் கூற அந்தப் பெண் ”இன்னொரு விஷயம் கூறலாமா?”

“சொல்லு பெண்ணே!” என்றார் ராமானுஜர்.

”நம்மாழ்வாரை விட எங்க ஊர் மதுரகவி ஆழ்வார் பெரியவர்” என்றாள் அந்தப் பெண்

“அப்படியா ? ?” என்றார் உடையவர் சிரித்துக்கொண்டே.

“பெருமாள் எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருக்கும் பெரியவர். அவரைத் தன் நெஞ்சுள் வைத்திருக்கும் நம்மாழ்வார் அவரைவிடப் பெரியவர். அந்த நம்மாழ்வாரையும், அவர் பாடிய திருவாய்மொழியையும் ’தன் நெஞ்சுள் நிறுத்தினான்’ என்று பாடிய மதுரகவி ஆழ்வார் மிகப் பெரியவர் அன்றோ ? ” என்றாள்.

உடையவர் வியந்து ”எங்கள் ஊர் ஆழ்வார் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நீ அவரைவிட பெரியவள் சரி தானே ?” என்றார்.

அந்த பெண் பேசமுடியாமல் “நான் கிளம்புகிறேன் சாமி!” என்றாள்.

”நான் எதுவும் பேசப் போவதில்லை எது பேசினாலும். நீ ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாய்” என்றார்.

ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே!” என்றாள்.
உடையவர் வியந்து அடுத்த கதைக்குத் தயார் ஆனார்.

(Visited 150 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close