உலக மன அழுத்த விழிப்புணர்வு வாரம்
மக்களிடையே மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகள், அதனிலிருந்து மீளும் வழிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாரமாக நவம்பர் முதல் வாரம் ‘International Stress Awareness’ பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2018ல் தொடங்கிய இந்த விழிப்புணர்வு மக்களிடையே பெருகிவரும் மன அழுத்தத்தைக் கையாளும் வழிகளை அறிமுகப்படுத்த உதவுகிறது.
நம்முடைய இளவயதில் கேட்டறியாத வார்த்தையை இன்றைய பள்ளி செல்லும் குழந்தைகளிடமே கேட்க முடிகிறது. மன அழுத்தம் தாளாமல், போதிய அறிவுரைகள் கிடைக்காமல், முறையான வழிகாட்டிகள் அமையாமல் தன்னுள் குமைந்து உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் பலர்.
வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனச்சோர்வுறும் சம்பவங்கள் நடந்தாலும் அதிலிருந்து மீள்பவர்கள் மட்டுமே வெற்றி நடை போடுகிறார்கள். மீள இயலாதவர்கள் தனக்கு மட்டும் ஏன் இப்படியொரு துயரமான வாழ்க்கை என்று விதியை நொந்தபடி வாழ்க்கையின் வரங்களை எண்ணி மகிழாமல் சுய பச்சாதாபம் கொண்டு சுற்றியிருப்பவர்களையும் வதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கே தன் சோகங்களைப் பகிர்ந்து கொண்டால் தனனை இழிவாகப் பார்ப்பார்களோ என்று எண்ணியே மேலும் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த எண்ணிக்கை கூடி வருவதுதான் இந்த வார-விழிப்புணர்வுக்குக் காரணமாயிற்று.
பலருக்கும் குழந்தைகள், வேலை, கணவன் மனைவி உறவில் வரும் விரிசல்கள், உற்றார் உறவினர்களுடன் ஏற்படும் பகைமை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் மன அழுத்தம் உண்டாகிறது. தற்போதைய சூழலில் வேலையிழப்பு, நெருங்கியவர்களின் இழப்பு என்று எதிர்பாராத துயரங்கள் தரும் மன பாரமும் அதிகம். இந்தத் தொற்றுநோய்ப் பரவலால் நிம்மதியற்ற, மன உளைச்சலுடன் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. வேலை நாட்களைக் குறைத்து, அதனால் வருமானமும் குறைந்து, சங்கிலித்தொடர் போல் நீளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் நிலையில்தான் பலரும் இருக்கிறார்கள். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள சிலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதும் நடக்கிறது.
தொடர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடல்நிலையும் பலவித நோய்களுக்கு உள்ளாகிறது.
இதயம் சம்பந்தமான நோய்கள், சுவாசக் கோளாறுகள், தூக்கமின்மை, குழந்தைப் பிறப்பில் தாமதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், டயாபடீஸ் என்று நீள்கிறது பட்டியல். இதன் அறிகுறிகளும் தாக்கங்களும் பலரின் நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
தியானம், முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலம் மன அமைதி பெறலாம். உடல் நோய்களைப் போலவே மன நோய்களுக்கும் நிவாரணங்கள் உண்டு. தனிமையில் போராட முடியவில்லையெனில் வெளிப்படையாகக் குடும்பத்தினருடன் பேசி நிலைமையைப் புரிய வைக்க வேண்டும். நண்பர்களிடம் தங்களுடைய பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். தகுந்த மருத்துவரிடம் ஆலோசித்து மருந்துகளின் மூலமும் நிவாரணம் பெறலாம்.
முதற்கட்டமாக ஆலோசனை சிகிச்சை (counseling Therapy) பெறுதல் அவசியம். இன்று பலரும் யோசிக்கும் விஷயமும் இதுதான். எப்பொழுது அடுத்தவருக்காக வாழாமல் தனக்காக வாழப் பழகிக் கொள்கிறோமோ அன்று மன அழுத்தங்கள் குறைந்து நிம்மதியான வாழ்வை வாழலாம்.
மனநோய் இருப்பதை மறுப்பதும் மறைப்பதும்தான் நோயின் முதல் அறிகுறி. அதிலிருந்து மக்களை மீட்டெடுப்போம். நல்ல நண்பர்களாக , உறவுகளாக உலகில் அனைவரும் இன்புற்று வாழ ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம்.
பிரச்சினைகளை பிரச்சினைகளாக எதிர்கொள்வதுதான் பிரச்சினை.