சிறப்புக் கட்டுரைகள்பொருளாதாரம்

வேலை வாய்ப்பு அளிப்பதில் தோல்வி அடைந்ததா மோதி அரசு ? பகுதி 1

மோதி தலைமையிலான பாஜக அரசு போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாற்றி வருகின்றன. உலகமயமாக்கல், இயந்திரமயமாக்கல், புதுப்புது தொழில்நுட்பங்கள் என்பதால் ஏற்கனவே இருந்த பல்வேறு வேலைகள் இல்லாமல் ஆகி புது வேலைகள் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. அது போக பொதுவாக மிகப் பெரும் அளவில் ஆட்களை வேலைக்கு எடுக்கும் அரசுத்துறைகளும், கனரகத்தொழிற்சாலைகளும் அதிகளவில் கணினி போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் அவை உருவாக்கும் வேலைகள் குறைந்துகொண்டே வருகின்றன. வளர்ச்சி என்பது ஒரு சாராருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமானதாக இருக்கவேண்டும். சமநிலையில் இல்லாத வளர்ச்சி நீண்டகால நோக்கில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாகிவிடும். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பாஜக அரசு என்ன செய்துள்ளது என்பது இந்தத் தேர்தலில் முக்கியமான கேள்வியாக இருக்கும்.

இந்தியாவில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தனியார் துறையில்தான் வேலை பார்க்கிறார்கள். அதில் முக்கியமானது போக்குவரத்துத்துறை. விவசாயத்திற்கு அடுத்தபடி அதிகமான வேலைகளை உருவாக்கும் துறை இது. இந்திய வாகனத் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு தரும் தகவலின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக வாகனங்களின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. இந்த விற்பனையில் பெரும்பங்கு இருசக்கர வாகனங்களின் விற்பனை மூலம் நடக்கிறது. அதனைக் கழித்து விட்டு மற்ற வாகனங்களின் உற்பத்தியைப் பார்த்தல் அதன் மூலம் எந்த அளவு வேலைவாய்ப்பு உருவாகி இருக்கிறது என்று கணித்து விடலாம். இதிலும் பழைய வண்டிகளை மாற்றுவதன் மூலம் உருவாகும் விற்பனை 20% என்று எடுத்துக்கொண்டு அத்தனையும் இந்த அட்டவணையில் நீக்கி விடுவோம்.

ஒரு டிராக்டர் விற்பனையின் மூலம் ஒரு வேலை உருவாக்கியது என்று எடுத்துக்கொள்வோம். இரண்டு  ஆட்டோ ரிக்ஷா விற்பனை மூலம் மூன்று வேலைகள் உருவாகும். ஆட்டோவின் ஓட்டம் அதிகமாக இருக்கும், அதனால் அதனை இரண்டு வேளைகளில் இருவர் ஓட்டுவார். கனரக ( பஸ் லாரி வேன் ) வாகனங்கள் குறைந்தது இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். பயணிகள் பயன் படுத்தும் கார்கள் நான்கு விற்பனையானால் அதன் மூலம் ஒரு வேலை உருவாகும் என்று கருதலாம். ஏன்னென்றால் பலர் சொந்த உபயோகத்திற்கு பயன் படுத்தும் கார்களை தாங்களே ஒட்டிச் செல்லுவர். இப்படிக்கு கணக்கெடுத்தால் கடந்த டிசம்பர் வரை ஒருகோடியே நாற்பது லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாகி இருக்கும்.

இது போக, இந்த வண்டிகளை உற்பத்தி செய்வதற்கான வேலைகள், விற்பனை செய்வதற்கான பணிகள், வாகனங்களை பழுது நீக்கும் பணியாளர் வேலைகள், அதற்கான உதிரிப்பாகங்கள் உற்பத்தி, விற்பனை ஆகிய வேலைகள், இந்தப் பணிகளுக்கான துணைத்தொழில்களின் மூலம் உருவாகும் வேலைகளை நாம் இங்கே கணக்கில் எடுக்கவே இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

கடந்த நாலரை ஆண்டுகளில் பதினோரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது என்பதே பொருளாதாரம் வலுவாக உள்ளத்தையும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதையும் காட்டத்தான் செய்கிறது

(Visited 98 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close