சிறப்புக் கட்டுரைகள்
மாயாவதியின் பிரதமர் கனவு நிறைவேறுமா ? – பகுதி 2
1993ஆம் ஆண்டு மாயாவதியின் துணையோடு முலாயம் சிங் உபியில் ஆட்சி அமைத்தார். ஆனால் அந்த ஆதரவை மாயாவதி விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து சமாஜ்வாதி தொண்டர்கள் மாயாவதி மீது கொலை முயற்சியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ கால் நூற்றாண்டு கழிந்து மீண்டும் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க இருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கோரக்பூர், கைரானா இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியுற்றது. முக்கியமான எதிர்க்கட்சிகள் ஓன்று சேர்ந்து ஆளும்கட்சியை எதிர்த்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும்போது பொதுவேட்பாளர் வெற்றி பெறுவது என்பது இந்திய அரசியலில் இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். அதனைக் கணக்கில் கொண்டுதான் அகிலேஷ் யாதவ் மாயாவதியுடன் கை கோர்த்துள்ளார்.
ஆனால் ஏட்டில் சரியாகத் தெரிவதெல்லாம் களத்தில் உண்மையாவதில்லை. ஒரு வேளை இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்திருந்தால் அது உண்மையாக ஆகி இருக்கும். ஆனால் இப்போது காங்கிரஸ் தனித்துப் போட்டி இடுகிறது. கடந்த முறை இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது. அதுவும் நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள்தான் அவை. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அறுபது லட்சம் வாக்குகளை பெற்றது. அதில் ஏறத்தாழ ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பெற்றது. சராசரியாக போட்டியிட்ட தொகுதிகளில் எண்பதாயிரம் வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. மூன்று முனைப் போட்டி என்று வரும்போது இது வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் மிக முக்கியமான காரணியாக இருக்கும்.
அதுபோக இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு, அதைவிட நேரு குடும்பத்திற்கு வாழ்வா சாவா என்று முடிவு செய்யும் தேர்தலாக இருக்கும். ஆட்சி அமைக்கும் அளவிற்கு எண்ணிக்கை இல்லாமல் போனாலும் கணிசமான அளவு வெற்றி பெறவில்லை என்றால் கட்சி தேய்ந்து சில மாநிலங்களில் மட்டுமே செல்வாக்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி போல ஆகிவிடும். அதே போல கட்சியின் மீது நேரு குடும்பத்தின் இரும்புப்பிடி இல்லாமல் ஆகிவிடும். அதனைத் தடுக்கத்தான் இப்போது பிரியங்கா களமிறக்கப் பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்காளர்கள் சிறுபான்மை சமூகத்தினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான். பொதுவாக யாதவர்கள் மற்றும் தலித் சமூகத்தினரின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவாகத்தான் உள்ளது. அதுபோல உயர்ஜாதி ஹிந்துக்களின் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது. அந்த ஓட்டைக் குறிவைத்துதான் தான் ஒரு கெளவுல் பிராமணர் என்று ராகுல் பிரச்சாரம் செய்தார்.
பிறபிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டில் கணிசமான அளவை காங்கிரஸ் பெறுமானால் அது அகிலேஷ் – மாயாவதி கூட்டணிக்கே பாதகமாக அமையும். பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிதறினால் அது யாருக்கு சாதகம் என்று கூறவே வேண்டாம். பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவர் மோதி என்ற கோஷத்தை பாஜக கையிலெடுக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவும் பிற்படுத்தப்பட்டோர் ஒரே அணியாக வோட்டளிப்பதைத் தடுக்கலாம்.
அதுபோல, கணிசமான எண்ணிக்கையில் முஸ்லீம் வேட்பாளர்களைக் களம் இறக்கி, தாங்கள்தான் உண்மையான மதசார்பற்ற கட்சி என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடக்கும்போது இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஹிந்துக்களை ஒரே அணியில் திரட்டும் வேலையை பரிவார் அமைப்புகள் செய்யும். முலயாமின் சகோதர் சிவபால்சிங் யாதவின் புது கட்சியும் யாதவர்களின் வாக்கைச் சிதறடிக்கலாம்.
நடைபெற உள்ளது நாடாளுமன்றத் தேர்தல் அதனால் ஏதாவது ஒரு தேசியக் கட்சிதான் பெரும்பான்மை பெறவேண்டும் என்று மக்கள் சிந்தித்தால் அது அகிலேஷ் – மாயாவதிக்கு எதிராகவே இருக்கும்.
தனது வாக்குவங்கியை தான் இருக்கும் கூட்டணிக்கு மாற்றுவது என்பது மாயாவதிக்கு எளிதாக இருக்கும், ஆனால் அது அகிலேஷ் யாதவால் முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஏன்னென்றால் 2017 சட்டசபைத் தேர்தலில் அகிலேஷ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சந்தித்தார். வோட்டு சதவிகித கணக்கு சரியாக இருக்குமானால் அந்தக் கூட்டணி பெருமளவில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்தமுறை சரிபாதி இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜும் போட்டி இடப்போவதில்லை. அந்நிலையில் அந்தத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டி இடும் கனவில் இருந்த கட்சியினர் கூட்டணிக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தருவார்களா என்பதையும் யோசிக்கவேண்டி உள்ளது.
காங்கிரஸும் பாஜகவும் இணைந்து 272 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால்தான் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க முடியும். அப்போதும் இந்த இரண்டு காட்சிகளில் எதோ ஒன்றின் ஆதரவு இருந்தால் மட்டும்தான் அது நடக்கும். இன்றுள்ள நிலைமையில் 230 முதல் 250 தொகுதிகள் வரை பாஜக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
ஒரு தலித் பிரதமர் என்பது நிச்சயமாக தலித் மக்களுக்கான உரிமையை உறுதி செய்யும் வகையில் அமையும். ஆனால் ஏற்கனவே குடியரசுத்தலைவரும் அதே சமுதாயம் என்பதால் பிற தலைவர்கள் எப்படி மாயாவதியைப் பிரதமராக்க ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்வி. பொதுவாக கூட்டணி ஆட்சி என்றால் பலம் குன்றிய பிரதமர்தான் கூட்டணி கட்சிகளின் தேர்வாக இருக்க முடியும். இதுவும் மாயாவதிக்கு சாதகமாக இருக்காது.
உத்திரப் பிரதேசத்தின் அடுத்த சட்டமன்றத் தேர்தல் என்பது இன்னும் மூன்றாண்டு கழித்துதான். அதுவரை அகிலேஷ் மாயாவதி கூட்டணி நீடிக்கும் என்று யாராலும் உறுதி கூற முடியாது.
இதையெல்லாம் பார்க்கும்போது மாயாவதியின் பிரதமர் கனவு இந்தமுறை நிறைவேறுவது கடினம் என்றே தோன்றுகிறது.
(Visited 82 times, 1 visits today)