ஸ்டாலின் வேஸ்ட் ; திமுகவின் பலவீனங்கள்
சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. அதன் படி திமுக தலைமையிலான அணியில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்கு 2 லோக்சபா இடங்கள் ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அரசியல் விமர்சகர்கள் பலரும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை வாரி வழங்கி வருவது திமுகவின் பலவீனத்தையும் நம்பிக்கையின்மையையும் காட்டுகிறது என்கின்றனர். அதிமுகவிற்குத் தான் பல கட்டாயங்கள் உள்ளது. ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும், தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று நிருபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் அதிமுக சில இடங்களை அதிகமாக பாமக, தேமுதிகவிற்கு விட்டுக் கொடுத்தாலும் சட்டசபை இடைத்தேர்தலை மனதில் வைத்து செயல்படுகிறது. அதிமுக தமது இலக்கை நோக்கித் தெளிவாக பயணிக்கிறது.
பாஜகவிற்கும் அதேதான். தங்களது இலக்கை நோக்கித் தெளிவாக பயணிக்கிறார்கள். ஐந்து இடங்களைப் பெற்றுக் கொண்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் கடந்த முறையைக் காட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற 2 இடங்களுக்கு மேலாகக் கிடைக்கும் இடங்கள் அனைத்தும் லாபம் மட்டுமே. அந்த வகையில் பாஜகவும் தெளிவாக உள்ளது.
ஆனால் ஸ்டாலினுக்கு அரசியல் ரீதியாக அப்படி எந்த நெருக்கடியும் இல்லை. மேலும் அவரது அரசியல் அதிமுகவை எதிர்ப்பதற்குப் பதிலாக பாஜகவை நோக்கி உள்ளது. இதையும் பல அரசியல் விமர்சகர்கள் பலவீனமாக பார்க்கின்றனர். காங்கிரசுக்கு முக்கியமான மாநிலங்களில் மகா கட்பந்தன் என்ற அணியை அமைக்க இயலாமல் போயுள்ளது. பாஜகவே தனிப் பெரும் கட்சியாக வரப் போகிறது. மேலும் பழைய கூட்டாளிகளை தங்களது மாநிலங்களில் மீண்டும் பாஜக மீட்டு எடுத்துள்ளது. குறிப்பாக சிவா சேனா, ஜனதா தளம் (யு), அகாலிதளம் கட்சிகளை மீண்டும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ளது. இது திமுகவிற்கும் நன்றாகத் தெரிகிறது.
ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க எந்த கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது என்று பார்க்காமல் விட்டது முதல் பலவீனம். இரண்டாவதாக பாஜக எதிர்ப்பு. நாளை பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தால் அதிமுக ஆட்சியைக் கலைப்பதற்கு பாஜக உதவி தேவைப்படும் என்றும் அரசியல் செய்யவில்லை. அடுத்த பலவீனம், விடுதலைச் சிறுத்தைகள், கம்யுனிஸ்ட் போன்ற சிறிய கட்சிகளுக்கு 2 இடங்கள் என்று ஒதுக்கியது.
வலுவான அணியை அமைக்க ஸ்டாலின் முற்படுகிறார். ஆனால் திமுக விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் வைத்து நின்ற 2014 லோக்சபா தேர்தலிலேயே 2 இடங்கள் தான் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டன. அப்போது கூட ஆரம்பத்தில் ஒரு இடம் மட்டுமே விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. திமுக இறுதியாகத் தான் 2 வது இடத்தை வழங்கி விசிகவைத் தங்கள் அணியில் தக்க வைத்தது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், காங்கிரஸ், மதிமுக , கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்க வேண்டிய நிலையில் 2 இடங்களை விசிக போன்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது மேலும் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக உடைந்துள்ள நிலையில் அதிமுக அதிக இடங்களை விட்டுக்கொடுப்பது புரிகிறது. ஆனாலும் அதிமுக சட்டசபையில் தங்களது ஆட்சி தொடர வேண்டும் என்கிற தங்களது குறிக்கோளில் தெளிவாக உள்ளது. ஆனால் திமுக இலக்கில்லாமல் பயணிக்கிறது.
ஒருமாதத்திற்கு முன்பு இருந்த நிலையை யோசித்துப் பாருங்கள். திமுக தனித்து நின்றாலே 40 தொகுதிகளையும் வெல்லும். இப்படித் தான் நிலைமை இருந்தது. மேலும் தமிழக ஊடகங்கள் செய்த பிரச்சாரம் பாஜகவுடன் தமிழகத்தில் யார் கூட்டணி அமைப்பார்கள்? அவ்வாறு ஒருவேளை அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் இரண்டும் படு மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்றனர். ஆனால் பாஜக ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்து வந்தது.
அதிமுக அணியில் பாமக வந்ததுதான், தமிழக அரசியல் சூழல் முற்றிலுமாக மாறி இருந்தது. அதிமுக அணியும் சில இடங்களைப் பிடிக்கும் என்று பேச ஆரம்பித்துள்ளனர். அடுத்தபடியாக பாமக அதிமுக அணியில் இடம் பெற்றவுடன் ஸ்டாலின் தனது பலவீனத்தை நம்மிடம் படம் பிடித்துக் காட்டினார். தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் பேரம் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது திமுக. இருந்த போதிலும், தேமுதிக தங்களின் அரசியல் எதிரியாக திமுகவை அதிக அளவில் எண்ணுவதால் அதிமுக அணியில் தான் இடம் பெறப்போகிறது. அது தற்போது தெளிவாகிக் கொண்டு இருக்கிறது. தேமுதிக இனி வராது என்பதால் தான் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்களின் தகுதியை மீறி இடங்களை வாரி வழங்குகிறது.
தற்போது அதிமுக அணியில் என் ஆர் காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளும் இணைந்துள்ளன. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே மெகா கூட்டணியைக் கொண்டுள்ளன. திமுக எளிதான வெற்றி என்ற இடத்திலிருந்து நகர்ந்து தங்களது அணிக்கு அனைத்து சிறிய கட்சிகளையும் வளைத்துப் போட வேண்டிய கட்டாயத்தில் வந்துள்ளது. அதுவே உண்மை. ஆகையால் தான் கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய தேசிய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி என அனைத்து சிறிய கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்கி உள்ளது. தற்போது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் நிர்பந்தமும் தங்கள் பக்கத்தில் உள்ளது என்ற பயம் திமுகவிடம் ஏற்பட்டு உள்ளது.
அதிமுக தினகரன் தலைமையில் பிரிந்து சென்ற பின்னும், திமுகவிற்கு இத்தனைக் கட்சிகள் கூட்டணி தேவைப்படுகிறது என்பதே திமுகவின் பயத்தையும் நம்பிக்கையின்மையையும் காட்டியுள்ளது.