ஆன்மிகம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்
வளங்கள் பெருக்கும் வஸந்த நவராத்திரி
வரும் 05.04.19 முதல் 14.04.19 வரை வஸந்த நவராத்திரி கொண்டாடப்படும். அனைவரும் அம்பாளின் அருளை பெற்று வாழ்வில் சிறப்புற வேண்டும்.
லோக மாதா ஸ்ரீ லலிதாதேவியை இந்த வஸந்த நவராத்ரியில் நாம் கொண்டாடுவோம்.
தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை மனதார வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறுகிறது.
அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம். பங்குனி மாதம், கோடையின் துவக்கம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.
பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி (05.04.19 அன்று ஆரம்பம்); ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி; புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரி களையும் கொண்டாடுவது வழக்கம்.
வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். அந்த ருதுக்களில் ‘ரிதூநாம் குஸுமாகர:’ என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும்.
மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும் ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும் ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)
பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.
மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.
வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; அன்யோன்யம் உண்டாகும்.
அக்னி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியில் சக்தி வழிபாடு செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம்.
வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும்.
முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரிய வில்லையா?
கவலைப் படாதீர்கள்.
‘ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ’ என்பதை 108 தடவை சொன்னால் போதும். உரிய பலன் கிடைக்கும்.
அபிராமி அந்தாதி 58ஆவது பதிகம் படிக்கலாம். அன்னையின் அருளால் மன அமைதி கிடைக்கும்.
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.
வேறு பிரார்த்தனைகள் இருப்போர் அதற்கான பதிகங்களைப் படிக்கலாம்.
சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
தர்மபுரி கல்யாணகாமாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.
(Visited 290 times, 1 visits today)