மொரார்ஜி தேசாய் நினைவு நாள் – ஏப்ரல் 10
காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமரான திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் நினைவுதினம் இன்று.
1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பல்சார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியரின் மூத்த மகனாகப் பிறந்தவர் தேசாய் அவர்கள். தனது பள்ளிப்படிப்பை குஜராத்திலும், பட்டப்படிப்பை மும்பையில் முடித்த இவர் அரசு வேலையில் இணைந்தார். கோத்ரா மாவட்டத்தில் துணை ஆட்சியாளராக இருந்த இவர், காந்தியின் அழைப்பை ஏற்று பணியைத் துறந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கு கொண்டு பல்லாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். சுதந்திரத்துக்கு முன்பு பிளவு படாத பம்பாய் ராஜதானியின் வருவாய் மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1952ஆம் ஆண்டு பம்பாய் ராஜதானியின் இரண்டாவது முதலமைச்சராகப் பணியாற்றினார்.
குராஜாத்தில் உள்ள சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1957ஆம் ஆண்டில் இருந்து ஐந்துமுறை ( இருபத்தி மூன்று ஆண்டுகள்) வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் 1958ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை நிதியமைச்சராகப் பணியாற்றினார். நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசாய், கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் லால் பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தால், அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.
சாஸ்திரியின் அகால மரணத்திற்குப் பிறகு மீண்டும் பிரதமர் போட்டியில் குதித்த தேசாய், நேருவின் மகளான இந்திரா காந்தியிடம் தோல்வியுற்றார். ஆனால் இந்திராவின் அமைச்சரவையில் 1967 முதல் 1969வரை துணைப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றனார்.
வங்கிகளைத் தேசியமயமாக்க இந்திரா முடிவு செய்து தேசாயிடமிருந்து நிதித்துறையை பறித்தார். ஆனாலும் துணைப்பிரதமராக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதை மறுத்து தேசாய் மந்திரிசபையில் இருந்து வெளியேறினார். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டி வேட்பாளரை நிறுத்தி அவரை இந்திரா வெற்றிபெறவைத்தார். கட்சி பழைய தலைவர்களை முன்னிறுத்தி சிண்டிகேட் எனவும் இந்திராவை முன்னிறுத்தி இண்டிகேட் எனவும் இரண்டானது. அதைத்தொடர்ந்து வந்த தேர்தலில் இந்திரா பெரும் வெற்றிபெற்றார்.
நேரு குடும்பத்தின் ஆட்சிக்கான அட்சாரமாக எழுபதுகளின் தொடக்கம் இருந்தது. பிரதமர் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் முக்கியமான அதிகாரமையமாக உருவானார். நாடெங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமானது. அரசியலை விட்டு விலகியிருந்த லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் ஓன்று திரண்டனர். இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. பிரச்சனைகளை சமாளிக்க இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார்.
சுதந்திரம் அடைந்து முப்பது ஆண்டுகளுக்கு உள்ளாக இந்தியா மீண்டும் தனது ஜனநாயக உரிமைகளை இழந்தது. அநேகமாக எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திராவே இந்தியா என்று இந்திரா காங்கிரஸின் தலைவர்கள் கோஷமிட்ட ஆரம்பித்தனர். பத்திரிகைகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. அரசை விமர்சிக்கும் எந்த செய்தியும் பிரசுரிக்கும் நிலை இல்லாமல் ஆனது.
1977ஆம் ஆண்டு திடீர் என்று இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார். ஜெயப்ரகாஷ் நாராயணனின் வழிகாட்டலில் பெருவாரியான எதிர்க்கட்சிகள் இணைத்து ஜனதா கட்சி என்ற பெயரில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றன. நாட்டின் நான்காவது பிரதமராக, காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக தனது எண்பத்தி ஒன்றாம் வயதில் மொரார்ஜி தேசாய் தேர்வானார்.
உள்கட்சி பூசலால் ஜனதா கட்சியின் ஆட்சி கவிந்தது. 1980ஆம் ஆண்டு நேரடி அரசியலில் இருந்து தேசாய் விலகிக்கொண்டார்.
வாழ்நாள் முழுவதும் உண்மையான காந்தியவாதியாக இருந்த தேசாய் மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டார். நீண்ட அரசியல் வாழ்வில் அவரது எதிரிகள்கூட அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை.
அரசியல் வாழ்வில் இருந்து விலகிய பிறகு, தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத காரணத்தால் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றால் இன்றய தலைமுறையால் அதனை நம்பவே முடியாது.
இந்திய அரசு தேசாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது. பாகிஸ்தான் அரசு தனது உயரிய விருதான நிஷான் ஹி பாகிஸ்தான் விருதை அவருக்கு வழங்கியது
தனது 99 ஆம் வயதில் 1995 மும்பையில் தேசாய் காலமானார்.
இந்த நாளில் தேசாயைப் போல ஒழுக்கமானவராக இருப்போம் என்று உறுதி பூணுவோம்.