சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை – நினைவு தினம் – மே 26

இந்திய விடுதலைக்காக நாட்டின் உள்ளிருந்து போராடியவர்கள் ஒருபுறம் என்றால், அதற்காக வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்தவர்கள் மறுபுறம். அகிம்சை வழியில் பாடுபட்டவர்கள் ஒருபக்கம்,ஆயுதம் ஏந்தி பாடுபட்டவர்கள் ஒருபுறம். சுதந்திரம் என்பது சும்மா வரவில்லை. எத்தனையோ தியாகிகளின் கண்ணீரால், உதிரத்தால், உயிர் தியாகத்தால் கிடைத்த பொக்கிஷம் அது.

அப்படி வெளிநாட்டில் இருந்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்களில் முக்கியமானவர் செண்பகராமன் பிள்ளை. தமிழகத்தைச் சார்ந்த இவரின் வாழ்க்கை சாகசங்களும், அதிரடிகளும், எதிர்பாரா திருப்புமுனைகளும், வியப்பும் கொண்டது.

திருவனந்தபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி பிள்ளை – நாகம்மாள் தம்பதியரின் மகன் இவர். பள்ளிப்பருவத்திலேயே ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி தனது தேசபக்தியை வெளிக்காட்டியவர் பிள்ளை. ஜெய் ஹிந்த் என்ற போர் முழக்கத்தை முதலில் பயன்படுத்தி, அதனை பிரபலப்படுத்தியதால் இவரை ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்று மக்கள் அழைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்திலேயே இத்தாலி, சுவிட்ச்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கல்வி பயின்றவர். பொறியியல் துறையில் முனைவர் ( Doctor ) பட்டம் பெற்றவர். ஜெர்மனி நாட்டில் இந்திய சுதந்திர போராட்ட இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி போராடியவர். இந்தியாவில் உள்ள ஆங்கில அரசை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் உருவான இந்திய மாற்று அரசின் வெளிவிவகாரத்துறையின் அமைச்சராகப் பணியாற்றியவர்.

பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக இந்த அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நேர்ந்தது. அப்போது நடைபெற்ற முதலாம் உலகப் போரின் போது எம்டன் என்ற கப்பலில் வந்து சென்னையின் மீது அதிரடியாக குண்டு வீசி ஆங்கில அரசை அதிரவைத்தவர் செண்பகராமன் பிள்ளை

1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இந்தியா குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.

ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.

1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, ‘என்னுடைய சாம்பலை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.

முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு, இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.

நாற்பத்தி இரண்டு வயது வரை மட்டுமே வாழ்ந்த வீரர் செண்பகராமன் பிள்ளையின் நினைவு தினம் இன்று. தியாகிகளின் வாழ்வு நமக்கு வழிகாட்டியாக விளங்கட்டும்.

(Visited 241 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close