போராளியாகவே வாழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் – பிறந்தநாள் ஜூன் 3
போராட்டகுணம் கொண்ட தொழில்சங்கவாதி, ஜனநாயகத்தைக் காக்க இந்திராவை எதிர்த்து நின்ற வீரர், சிறந்த பாராளுமன்றவாதி, மத்திய அமைச்சர், எழுத்தாளர், பல மொழி விற்பன்னர், பத்திரிகையாளர் என்ற பன்முக பரிமாணம் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள் இன்று.
மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கிருத்துவ இறையியல் படிப்பதற்காக பெங்களூரு வந்தார். ஆனால் அதில் சலிப்புற்று மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கே சோசியலிச சித்தாந்தவாதியாக மாறி, ரயில்வேதுறை தொழிலார்களின் தலைவராக உருவானார். ராம்மனோஹர் லோகியாவின் சீடராக, சோஷலிச கொள்கைகளை முன்னெடுப்பவராக மாறினார். மும்பை மாநகராட்சியின் உறுப்பினனராக 1961 முதல் செயல்பட்டார். இன்றுபோல் அன்றும் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்ற முனைப்போடு உள்ள மக்களை ஈர்த்துக்கொண்டு இருந்தது. அந்த நகரத்தில் குடியிருக்கும் அமைப்புசாரா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அப்போது ஜார்ஜ் வடிவமைத்தார்.
ரயில்வே துறை தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி சார்பாக தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1975ஆம் ஆண்டுஇந்தியாவில் எல்லா ஜனநாயக முறைகளையும் இல்லாமலாக்கி இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டார். பரோடா ரயில்பாலத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் கொல்கத்தா நகரில் கைது செய்யப்பட்டார்.
1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த ஜனதா கட்சியின் ஆட்சியில் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். குறுகிய காலத்தில் ஜனதா ஆட்சி கலைய, மீண்டும் இந்திரா பிரதமரானார்.
1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் வி பி சிங் தலைமையில் அமைந்த ஜனதாதள் அரசில் ரயில்வேத்துறை மந்திரியாகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் கொங்கன் ரயில்வே திட்டம் தொடங்கப்பட்டது.
சமதா கட்சியின் நிறுவனரான 1996ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவில் இருந்தார். வாஜ்பாய் அரசில் ராணுவ அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதும், கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான்.
கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடலை கொண்டுசெல்லும் சவப்பெட்டியில் வாங்கியதில் ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை இவர் மீது சுமத்தியது. ஆனால் விசாரணை முடிவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டார்.
கொங்கணி, துளு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், உருது, லத்தின் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1967 முதல் 2004 வரை ஒன்பது முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
உடல்நலம் சரியில்லாது இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் காலமானார்.