சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசப் அலி பிறந்தநாள் ஜூலை 16

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாய் நகரத்தில் கூடிய காங்கிரஸ் மாநாடு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. எல்லா முன்னணித் தலைவர்களையும் உடனடியாக பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு 32 வயதே ஆன ஒரு இளம் பெண் தலைமை வகித்தார். மாநாட்டில் அன்று காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றினார். பாரத நாட்டின் மிகப் பெரும் போராட்டம் தொடங்கியது. கூட்டத்தில் புகுந்து வெள்ளையர்களின் காவல்துறை கண்முடித்தனமாக தாக்கியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது. தனது உயிரை துச்சமாக எண்ணி போராட்டத்தை முன்னெடுத்ததஅருணா ஆசப் அலியின் பிறந்தநாள் இன்று.

அன்றய பஞ்சாப் மாநிலத்தில் கல்கா நகரில் ஒரு உணவு விடுதியை நடத்திக்கொண்டு இருந்த வங்காளத்தை சேர்ந்த உபேந்திரநாத் கங்குலி – அம்பாலிகா தேவி தம்பதியினரின் மகளாக 1909 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணா கங்குலி. இவர் தாயார் வழி தாத்தா த்ரிலோக்நாத் சன்யால் பிரம்ம சமாஜத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்.

தனது பள்ளிக்கல்வியை லாகூர் நகரிலும் கல்லூரி படிப்பை நைனிடால் நகரிலும் முடித்த அருணா கங்குலி கொல்கத்தா நகரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அலஹாபாத் நகரில் அருணா காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் ஆசப் அலியை சந்தித்தார். புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆசப் அலி பகத்சிங், படுகேஸ்வர் தத் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கா வாதாடியவர்.

இருபத்தி ஒரு வயது வித்தியாசமும், வெவ்வேறு மதம் என்பது அருணாவின் காதலுக்கு குறுக்கே நிற்கவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி அருணா ஆசப் அலியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு காந்தி, நேரு, ராஜாஜி,  சரோஜினி நாயுடு, அபுல் கலாம் ஆஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆசப் அலி விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததால், அருணாவும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று சிறைத்தண்டனை அனுபவித்தார். 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தை அடுத்து நாட்டின் எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்ட போதும் அருணா விடுதலை செய்யப்படவில்லை. அவரோடு சிறையில் இருந்த எல்லா பெண் கைதிகளும் தாங்களும் சிறையில் இருந்து வெளியே போகப் போவதில்லை என்று போராடியபிறகே அருணா விடுதலை செய்யப்பட்டார்.

1932ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட அருணா ஆசப் அலி, சிறையில் அரசியல் கைதிகள் மரியாதையாக நடத்தப்படவேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கைதிகளின் நிலையில் மாற்றம் வந்தது, அதோடு அருணா அம்பாலா சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு தனிமைச்சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலையான அருணா ஆசப் அலி, சிறிது காலம் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். ஆனால் நாட்டின் கொந்தளிப்பான நிலைமை அவரை அமைதியாக இருக்கவிடவேயில்லை. 1942ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கி வைத்த அருணா தலைமறைவானார். ஆகஸ்ட் புரட்சியின் கதாநாயகி தலைமறைவு வாழ்க்கையில் இருந்தாலும் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை கொழுந்து விட்டு எரியச் செய்துகொண்டுதான் இருந்தார். ராம் மனோகர் லோஹியாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் இன்குலாப் என்ற மாதாந்திர பத்திரிகையை வெளியிட்டுக்கொண்டும், வானொலி ஒலிபரப்பின் மூலமாக மக்களிடம் உரையாடிக்கொண்டும் இருந்தார். இன்குலாப் பத்திரிகையின் 1944ஆம் ஆண்டு இதழில் ஆயுதம் ஏந்தியா அல்லது அகிம்சை வழியிலா என்று விவாதித்துக் கொண்டு இருக்காதீர்கள், போராட்டத்தில் இறங்குங்கள், எந்த வழியானாலும் தவறில்லை என்று ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து பாரத நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் அரசியல் வாரிசுகள் இப்போது மார்க்ஸின் மாணவர்களாக மாறிவிட்டார்கள் என்று அன்றய பத்திரிகைகள் எழுதின.

அருணாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு என்று ஆங்கில அரசு அறிவித்தது. 1946ஆம் ஆண்டு அவர் மீதான கைது ஆணை ரத்து செய்யப்பட்ட பின்னர்தான் அருணா வெளியுலகத்திற்கு தன்னைக் காட்டிக் கொண்டார். சூரியனே அஸ்தமிக்காத அரசு என்று பெருமை பேசிக்கொண்ட ஆங்கில அரசு ஒரு பாரதப் பெண்மணியிடம் தோற்று மண்டியிட்டது. பம்பாயில் தொடங்கிய இந்தியா கப்பல் படை கிளர்ச்சியை அருணா ஆதரித்தார். இது இந்த நாட்டின் ஹிந்துக்களுக்கு முஸ்லீம்களுக்குமான உறவை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அருணா ஆசப் அலி காங்கிரஸ் கட்சியின் சோசலிச பிரிவில் தீவிரமாக இயங்கினார். பின்னர் சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியின் முதல் மேயர் பதவியை வகித்தார்.

நேரடி அரசியலில் இருந்து விலகிய அருணா பெண்கள் முன்னேற்றதிற்காக கமலாதேவி சட்டோபாத்யாய உடன் இணைந்து பணி செய்யத் தொடங்கினார்.

1964ஆம் ஆண்டு சோவியத் அரசு அருணாவிற்கு லெனின் அமைதிப் பரிசை வழங்கியது. 1992ஆம் ஆண்டு பாரத அரசு பத்ம விபூஷண் விருதையும் அவர் மரணத்திற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வழங்கி அவரை கவுரவித்தது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அருணா ஆசப் அலி காலமானார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் அருணா ஆசப் அலிக்கு தனியான இடம் ஓன்று எப்போதும் இருக்கும்.

(Visited 148 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close