ராஜரிஷி புருஷோத்தமதாஸ் டான்டன் – ஆகஸ்ட் 1
உத்திரப்பிரதேசத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர், உத்திரப்பிரதேச மாகாணத்தின் சட்டசபையின் நீண்டகால சபாநாயகர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர், அரசியலமைப்பு நிர்மாண சபையின் உறுப்பினர், வழக்கறிஞர், பாரதரத்னா விருது பெற்றவர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன்
1982ஆம் ஆண்டில் ப்ரயாக்ராஜ் நகரில் திரு சாலிக்ராம் டான்டன் அவர்களின் மகனாகப் பிறந்தவர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன். வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் அதனோடு சட்டப் படிப்பையும் முடித்து விட்டு ப்ரயாக்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.முன்னணி வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தேஜ் பகதூர் சப்ருவின் வழிகாட்டுதலில் புருஷோத்தமதாஸ் டான்டன் தனது வழக்கறிஞர் சேவையை நடத்தினார்.
மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட டான்டன் ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க காங்கிரஸ் கட்சி நியமித்த குழுவில் பணியாற்றினார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரஹம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். 1937ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் உத்திரப்பிரதேச சட்டசபையின் சபாநாயகர் பொறுப்பில் பணியாற்றனார்.
நாடு பிளவுபடுவதை கடுமையாக எதிர்த்தார். பிரிவினை என்பது உறுதியான பிறகு இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் உள்ள எல்லா ஹிந்துக்களை இந்தியாவிற்கும் மாற்றிக் குடியேற என்று வலியுறுத்தினார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகவும் பின்னர் 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
இந்தியாவின் தேசிய மொழியாக காந்தி பரிந்துரைத்த ஹிந்தியும் உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானி மொழிக்கு பதிலாக தேவநாகரி எழுத்தில் உள்ள ஹிந்தியைத்தான் நாட்டின் தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதாடினார்.
மதமாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் புருஷோத்தமதாஸ் டான்டனும், குலபதி முன்ஷியும் பரிந்துரைத்தனர்.
1950ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் – ஆமாம் அப்போதெல்லாம் ஆண்டுதோறும் தேர்தல் வைத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது – வெற்றி பெற்று கட்சி தலைவரானார். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை இவருக்கு வழங்கி மரியாதை செலுத்தியது.
தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் டான்டன் காலமானார்.