குதிராம் போஸ் பலிதான தினம் – ஆகஸ்ட் 11

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில்தான் பேசவேண்டும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி உமிழும் தோட்டாக்களும்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதனை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று முடிவெடுத்து ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாரதநாட்டில் ஏராளம். அதில் மிகமுக்கியமானவர் குதிராம் போஸ். பதினெட்டு ஆண்டுகளே வாழ்ந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பாரதத்தாயின் மிக இளைய வீரனின் பலிதான தினம் இன்று.

வங்காள மாநில மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாப்பிபூர் கிராமத்தில் த்ரிலோகநாத் போஸ் – லக்ஷ்மிப்ரியா தம்பதியினரின் நான்காவது மகனாக 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் குதிராம். இவருக்கு முன்னர் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் இளைய வயதில் இறந்து போனதால், இவரை தானியத்திற்கு ஈடாக கொடுத்துவிட்டால் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிய இவர் தாயார் இவரது சகோதரிக்கு மூன்று கைப்பிடி தானியத்திற்கு தத்து கொடுத்துவிட்டார். குதி என்ற வங்கமொழி சொல்லுக்கு தானியம் என்று பொருள். அதனால் இவர் பெயர் குதிராம் என்று ஆனது.

மிகச் சிறுவயதில் பெற்றோர் இருவரையும் இழந்த குதிராமை அவர் சகோதரியும் சகோதரி கணவரும் ஆதரித்து படிக்க வைத்தனர். பள்ளிப்பருவத்திலேயே அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டு குதிராம் நாட்டுப்பற்றாளராக உருவானார்.

1905ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். பின்னர் நாடு பிரிவினையாக இதுவே தொடக்கமாக அமைந்தது. வங்காளப் பிரிவினையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் தொடங்கின. வங்காளத்திலும் பஞ்சாபிலும் ஆயுதப் போராட்டம்தான் சரி என்று எண்ணிய இளைஞர்கள் பலர் பல்வேறு குழுக்களாக இணைந்தார்கள். புரட்சியாளர்கள் பலர் இருந்த யுகாந்தர் என்ற குழுவில் குதிராம் தன்னை இணைத்துக்கொண்டார்.

மித்னாபூர் மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய தங்க வங்கம் என்ற துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்யும் போது காவலர் ஒருவர் இவரை பிடிக்க முயன்றார். ஆனால் காவலரைத் தாக்கிவிட்டு குதிராம் தப்பியோடி விட்டார். ஆனால் மீண்டும் ஆங்கில காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். மிக இளவயது என்பதால் நீதிபதி இவரை விடுதலை செய்தார்.

அந்தக்காலத்தில் கொல்கத்தா நீதிமன்றத்தில் கிங்ஸ்போர்ட என்ற நீதிபதி பணியாற்றிவந்தார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மிக கொடூரமான தண்டனைகளை வழங்குவதில் அவர் பெயர் போனவர். ஒரு வழக்குக்காக பிபின் சந்திரபால் நீதிமன்றம் வந்தபோது சுஷில் சென் என்ற பதினான்கு வயது சிறுவன் ஒருவன் வந்தேமாதரம் என்று கோஷமிட்டான். அதற்காக அவனை பதினைந்து கசையடி அளிக்குமாறு நீதிபதி கிங்ஸ்போர்ட உத்தரவிட்டார். ஒவ்வொரு அடிக்கும் சுஷில் சென் வந்தேமாதரம் என்று முழங்கியவாறு இருந்தார்.

நீதிபதியை கொலை செய்வது என்று அனுசீலன் சமிதி என்ற அமைப்பு முடிவு செய்தது. அதனை செய்து முடிக்க குதிராம் போஸ் முன்வந்தார். பிரபுல்ல சாகி என்ற இளைஞர் குதிராமின் துணைக்கு வந்தார். தொடர்ந்த கொலை மிரட்டல்களால் ஆங்கில அரசு நீதிபதி கிங்ஸ்போர்டை பிஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நகரத்திற்கு இடமாற்றம் செய்தது. குதிராம் போஸும் பிரபுல்ல சாகியும் பிஹார் சென்றனர்.

தொடர்ந்து நீதிபதியை கண்காணித்து அவரை எப்படி கொலை செய்வது என்ற திட்டத்தை நண்பர்கள் முடிவு செய்தனர். நாள்தோறும் இரவு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றுக்குச் சென்று சிறிது நேரம் அங்கே தங்கிவிட்டு வீடு திரும்புவது கிங்ஸ்போர்டின் பழக்கம். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவரது வண்டியின் மீது வெடிகுண்டு வீசுவது என்று முடிவானது. ஒருவேளை அதில் நீதிபதி தப்பிவிட்டால் அவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிகளும் கைவசம் இருந்தது.

1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் கிளப்பில் இருந்து நீதிபதி தந்து சாரட் வண்டியில் கிளம்பினார். அதற்க்கு சற்று முன்பாக திருமதி கென்னடி என்ற ஆங்கிலப் பெண்ணும் அவர் மகளும் இன்னொரு வண்டியில் கிளம்பினார். திட்டமிட்டபடி வெடிகுண்டு வீசப்பட்டது, சாரட் வண்டி வெடித்துச் சிதறியது. ஆனால் இறந்தது நீதிபதி அல்ல என்பதை அறியாமல் சம்பவ இடத்தை விட்டு போராட்ட வீரர்கள் நகன்று விட்டனர். தனித்தனியாக பயணம் செய்து வங்காளத்தை அடைவது என்பது அவர்களின் முடிவு.

இரவு முழுவதும் நடந்தும் ஓடியும் களைப்பாக இருந்த குதிராம் வைனி நகரை அடைந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். அவர்களைத் துப்பாக்கியால் சுட குதிராம் முயற்சி செய்தார். ஆனால் அதில் வெற்றிபெறாமல் அவர் கைது செய்யப்பட்டார். பிரபுல்ல சாகியை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது, அவர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைவிலங்கு இடப்பட்டு குதிராம் மே மாதம் ஒன்றாம் நாள் முசாபர்பூர் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணை தொடங்கியது. குதிராம் கொலைக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். குறி வைக்கப்பட்டது நீதிபதிக்குத்தான், தவறுதலாக இரண்டு பெண்கள் இறந்து விட்டார்கள், அதற்காக வருந்துகிறேன், அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

குதிராமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எந்த விதமான சலனமும் இல்லாமல் சிரித்த முகத்தோடு குதிராம் அதனை எதிர்கொண்டார். ஏதாவது சொல்லவேண்டுமா என்ற நீதிபதியின் கேள்விக்கு ” நேரமும், உங்களுக்கு ஆர்வமும் இருந்தால் உங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன் என்று குதிராம் பதில் சொன்னார்.

தனது வழக்கறிஞர்களின் வற்புறுத்தலால் குதிராம் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அங்கேயும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனைக்கான நாளாக ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் நிர்ணயிக்கப்பட்டது.

12 – 8 – 1908 அமிர்த பஜார் பத்திரிகை ‘குதிராமின் முடிவு’ என்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான். இறுதிச் சடங்கு அமைதியாய் நடந்தது. காலை 6 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான். தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் நாம் சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்க்காக குதிராம் போஸ் போன்று பல்வேறு வீரர்கள் தங்கள் வாழ்க்கையை அர்பணித்துள்ளார். அப்படியான வீரர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்.

(Visited 28 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *