சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

பெண்மையின் சக்தி – காமா அம்மையாரின் நினைவுதினம் – ஆகஸ்ட் 13

இந்திய விடுதலை வேள்விக்கு ஆண்கள் மட்டுமல்ல ஏராளமான பெண்களும் ஆகுதியானார்கள். அதில் முக்கியமானவர் காமா அம்மையார். இந்திய மண்ணுக்கு வெளியே சுதந்திரக் கனலை பாதுகாத்தவர் அவர்.

1861ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் மும்பையைச் சார்ந்த பார்சி வகுப்பைச் சார்ந்த சொரப் பிரேம்ஜி படேல் என்பவரின் மகளாகப் பிறந்தவர் காமா அம்மையார். 1885ஆம் ஆண்டு ருஸ்தம் காமா என்ற வழக்கறிஞரை இவர் மணந்தார். ருஸ்தம் காமா ஆங்கிலேயர்களோடு இணைந்து அதன் மூலம் செல்வாக்கு பெறவேண்டும் என்று எண்ணியவர். ஆனால் காமா அம்மையாரே ஆங்கில ஆட்சியை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். அதனால் இவர்களது மணவாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை.

1896ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சமும் உடனடியாக அதனைத் தொடர்ந்து பிளேக் நோயும் மும்பையைத் தாக்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் குழுவில் காமா அம்மையாரும் தன்னை இணைத்துக் கொண்டார். அதனால் அவரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக 1902ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார்.

மண் மாறினாலும் மனம் மாறாது. இந்திய விடுதலை இயக்கத்தை காமா அம்மையார் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் தலைநகரத்தில் தொடர்ந்தார். லண்டன் நகரத்தில் லண்டன் ஹவுஸ் என்ற பெயரில் இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதியை அமைத்து, அந்த மாணவர்களிடம் தேசபக்தி கனலை ஏற்றிக் கொண்டிருந்த ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, தாதாபாய் நௌரோஜி ஆகியோருடன் இணைந்து கொண்டார். அங்கே வீர சாவர்க்கர், வ வே சு ஐயர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

அதனால் அவர் பாரதம் திரும்பவேண்டும் என்றால் இனி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி அளிக்கவேண்டும் என்று ஆங்கில அரசு உத்தரவிட்டது. அதனை அளிக்க மறுத்து காமா அம்மையார் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு குடியேறினார். அங்கிருந்து வந்தே மாதரம் மற்றும் தல்வார் என்ற பத்திரிகைகளை நடத்தினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட அந்த பத்திரிகைகளை பாண்டிச்சேரி வழியாக பாரதத்திற்குள்ளும் தேசபக்தர்கள் கொண்டு வந்தனர்.

1907ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சோசலிச மாநாட்டில் காமா அம்மையார் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றினார். மேலே பச்சை நிறமும் அதோடு எட்டு தாமரை மலர்களும், நடுவில் காவி நிறமும் அதில் வந்தே மாதரம் என்ற தேசபக்தி மந்திரமும், கீழே சிகப்பு நிறமும் அதில் ஒரு புறம் பிறைச் சந்திரனும், மறுபுறம் சூரியனும் பொறிக்கப்பட்டு இருந்தது.

” பாருங்கள், சுதந்திர பாரதத்தின் கொடி இங்கே ஏற்றப்பட்டு உள்ளது. இதன் பெருமையைக் காப்பதற்காக பல்லாயிரம் இளைஞர்கள் தங்கள் குருதியை சிந்தி உள்ளனர். இந்தக் கொடியின் பெயரால் நான் அழைப்பு விடுக்கிறேன், உலகில் உள்ள சுதந்திரத்தை விரும்புபவர் அனைவரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருக” என்று காமா அம்மையார் முழங்கினார்.

நெடுங்காலம் வெளிநாட்டிலேயே வசித்து வந்த காமா அம்மையார் 1935ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் நாள் அவர் காலமானார்.

எட்டும் அறிவினிலில் மட்டுமல்ல தியானத்திலும் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய காமா அம்மையாரின் தியாகமும் வீரமும் நம்மை வழிநடத்தட்டும்.

(Visited 220 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close