சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

மஹரிஷி அரவிந்தரின் அவதார தினம் – ஆகஸ்ட் 15.

பாரத நாட்டின் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான தினம். அன்னியர் ஆட்சியில் இருந்து நாம் விடுதலை அடைந்த நாள் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்ட வீரரும், தத்துவ ஞானியும், கவிஞரும், கர்மயோகியுமான மஹரிஷி அரவிந்தரின் அவதார தினமும் இது.

1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் கொல்கத்தா நகரின் மருத்துவர் கிருஷ்ணதன் கோஷ் – ஸ்வர்ணலதா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் அரவிந்த கோஷ். பெனுபூஷண், மன்மோகன் என்ற மூத்த சகோதர்களும், சரோஜினி என்ற தங்கையும், பாரேன் கோஷ் என்ற தம்பியும் இவரின் உடன்பிறப்புகள். இவர் தந்தை அன்று வங்காளத்தில் செல்வாக்கு மிகுந்த பிரம்மசமாஜத்தின் உறுப்பினர். ஆங்கில அரசு கருணை உள்ளம் கொண்டது என்றும் மேற்கத்திய நாகரிகம் முன்னேறியது என்ற எண்ணமும் கொண்டவர் அவர். அதனால் வீட்டில் ஆங்கிலமும், வெளியே தேவைப்படும் இடங்களில் ஹிந்துஸ்தானி மொழியும் பேசுமாறே அவர் தன் பிள்ளைகளை வளர்த்தார்.

தனது பிள்ளைகள் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கவேண்டும் என்று கருதிய கிருஷ்ணதன் கோஷ் அவர்களை முதலில் டார்ஜிலிங் நகரில் உள்ள ஆங்கிலப் பள்ளியிலும் பின்னர் இங்கிலாந்து நாட்டிலும் படிக்க வைத்தார். அங்கே அரவிந்தரும் அவர் சகோதர்களும் லத்தீன், பிரெஞ்சு, வரலாறு, புவியியல் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தந்தையின் எண்ணம் ஒன்றாக இருக்க பிள்ளைகளின் கனவு வேறாக இருப்பது இயல்பான ஒன்றுதானே. மற்ற சகோதர்கள் தங்களின் மனதிற்கு உகந்த படிப்பை மேற்கொள்ள, அரவிந்தர் மட்டும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் பதினோராம் இடத்தில் தேர்ச்சி பெற்றார். அதுவும் அவர் தந்தைக்காகத்தான். ஆட்சிப் பணியில் ஈடுபாடு இல்லாத அரவிந்தர் குதிரை ஓட்டும் தேர்வுக்கு தாமதமாக வந்து, ஆட்சிப் பணிக்கு செல்வதைத் தவிர்த்தார்.

இதனிடையில் இங்கிலாந்து வந்த பரோடா மன்னர் மூன்றாம் சாயாஜிராவ் ஜெய்குவார்ட் தனது அரசில் வேலை பார்க்க வருமாறு அரவிந்தருக்கு அழைப்பு விடுத்தார். அரவிந்தர் மீண்டும் தாயகம் திரும்பினார். மகனை வரவேற்ற மும்பைக்கு வந்த தந்தையிடம் தவறுதலாக அரவிந்தர் வந்துகொண்டு இருந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. மனமுடைந்த தந்தை அங்கேயே மரணமடைந்தார். தந்தையை உயிரற்ற உடலாகத்தான் அரவிந்தரால் பார்க்க முடிந்தது.

பரோடா அரசில் நில அளவுத் துறை மற்றும் வருவாய்துறைகளில் பணியாற்றிய அரவிந்தர் வெகு விரைவில் மன்னருக்கு நெருக்கமானவராக மாறினார். மன்னருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பும், விழாக்களில் பேசுவதை எழுதித் தரும் பொறுப்பும் அவருக்கு வந்தது. அப்போது பரோடா கல்லூரியில் பகுதி நேரமாக பிரெஞ்சு ஆசிரியராகவும் பணியாற்றினார். பரோடாவில் இருக்கும்போதுதான் அரவிந்தர் வங்காள மொழியையும், சமிஸ்க்ரித மொழியையும் கற்றுக்கொண்டார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நாட்டில் சுதந்திரக் கனல் வீசிக்கொண்டு இருந்தது. அரவிந்தரும் அதில் தப்பவில்லை. நேரடியாக அரசியலில் ஈடுபடும் சூழல் இல்லாததால் பரோடாவிலும், வங்காளத்திலும், மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இளைஞர்களை ஓன்று திரட்டினார். அன்றய சுதந்திரப் போராட்டம் என்பது ஆயுத வழியில் வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்று எண்ணிய இளைஞர்களைப் பெருவாரியாக கொண்ட குழுக்களாக இயங்கியது. அப்படியான இளைஞர்களை தனது அனுசீலன் சமிதியின் மூலம் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அரவிந்தர் ஆயுதப் பயிற்சி அளித்தார்.

1906ஆம் ஆண்டு வங்காள மாகாணத்தை கர்சான் மத ரீதியாக பிரித்தார். நாடெங்கும் அதனை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கின. 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. புரட்சியாளர்கள் திலகர் பின்னும், மிதவாதிகள் கோகுலே பின்னும் என்று திரண்டனர். திலகர் அணியில் அரவிந்தர், பாரதியார், சிதம்பரம் பிள்ளை ஆகியோர் இருந்தனர்.

நீதிபதி கிங்ஸ்போர்டை கொலை செய்ய அனுசீலன் சமிதி முடிவு செய்தது. அதனை நிறைவேற்றும் பொறுப்பு குதிராம் போஸ் பிரபுல்ல சாகி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி வரும் வண்டியில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன, ஆனால் தவறுதலாக இரண்டு ஆங்கிலேயப் பெண்கள் கொல்லப்பட்டனர், நீதிபதி தப்பிவிட்டார். பாரத நாட்டின் முக்கியமான அலிப்பூர் சதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அனுசீலன் சமிதியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரவிந்தரும் அவர் சகோதரர் பாரேன் கோஷ் உள்பட முப்பத்தி ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அரவிந்தர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அனுசீலன் சமிதியின் அமைப்பின்படி மேல்மட்ட தலைவர்கள் யாரும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களோடு நேரடித் தொடர்பில் இருப்பதில்லை. எனவே அரவிந்தர் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாமல் அவரை அரசு விடுதலை செய்தது. பாரேன் கோஷையும் உல்சாகர் தத்தையும் தூக்கிலிடுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பலர் நாடு கடத்தப்பட்டார். பலருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார்.

சிறையில் இருந்த அரவிந்தருக்கு சில வினோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தியானத்தில் இருந்த அரவிந்தர் செவிகளில் விவேகானந்தர் உரையாடுவது கேட்டது, ஏறத்தாழ பதினைந்து நாட்கள் விவேகானந்தர் அவருக்கு பல்வேறு போதனைகளைச் செய்தார் என்று அரவிந்தர் குறிப்பிட்டார். சிறையில் அவருக்கு கிருஷ்ண தரிசனமும் கிடைத்தது. நேரடியாக பகவான் கிருஷ்ணன் அரவிந்தருக்கு கீதையை போதித்ததாக அரவிந்தர் எழுதுகிறார். இதுபோன்ற அனுபவங்கள் அரவிந்தரின் வாழ்க்கைப் போக்கை மாற்றின. அரசியலில் இருந்து விலகி அரவிந்தர் ஞான மார்க்கத்தில் பயணிக்கத் தொடங்கினார்.

ஆனாலும் ஆங்கில அரசு வேறு வழக்குகளில் அரவிந்தரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது. வங்காளத்தில் இருந்து விலகி அன்று பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரிக்கு அரவிந்தர் குடிபுகுந்தார். அங்கே பாரதியார், வ வே சு ஐயர் ஆகிய தேசபக்த நண்பர்கள் அவருக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். தனது சொற்பொழிவுகளாலும் கட்டுரைகளாலும் தேசபக்தி கனலைத் தூண்டும் ஆற்றல் வாய்ந்த அரவிந்தர் மீண்டும் அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்று காந்தி தனது நண்பர்கள் மூலம் அவர்க்கு வேண்டுகோள் விடுத்தார். பாரத நாட்டின் விடுதலை என்பது மிக விரைவில் நடக்கப் போகிறது. ஆனால் நாடு பெரும்புகழ் அடையவேண்டும் என்றால் அது ஆன்மீகத்தின் மூலமாகவே முடியும், அந்த ஆத்ம சக்தியை தூண்டுவதே எனது வேலை என்று அரவிந்தர் கூறிவிட்டார்.

பாரத தத்துவ ஞானம் பற்றி, கீதை உபநிஷதங்கள் ஆகியவற்றுக்கு உரை என்று பல்வேறு படைப்புகளை அரவிந்தர் இயற்றினார். 24,000 வரிகள் கொண்ட தத்துவ நூலை சாவித்ரி என்ற பெயரில் அவர் எழுதினார். ஆத்ம சாதகத்தாலும், யோகத்தால் மாநிறம் கொண்ட அரவிந்தர் படிப்படியாக தங்க நிறத்திற்கு மாறினார் என்று அவரோடு பழகியவர்கள் பதிவு செய்து உள்ளனர்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி அரவிந்தர் மஹாசமாதி அடைந்தார். போராளியாகத் தொடங்கி ஆன்மீகவாதியாக மலர்ந்த மஹரிஷி அரவிந்தர் நம்மை வழிநடத்த பிராத்திக்கிறோம்.

நாடு விடுதலை அடைய தங்கள் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் பாரத தாயின் காலடியில் சமர்ப்பணம் செய்த மாவீரர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். தேச மக்களுக்கு ஒரே இந்தியா தளத்தின் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

(Visited 203 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close