சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

ஸ்வாமி அபேதானந்தர் – அக்டோபர் 2

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடராக, ஸ்வாமி விவேகானந்தரின் சக தோழராக, மேற்கு நாடுகளில் வேதாந்த அறிவைப் பரப்பிய ஞானியாகத் திகழ்ந்த  ஸ்வாமி அபேதானந்தரின் பிறந்ததினம் இன்று. 

கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் ரஸிகலால் சந்திரா – நயன்தாரா தேவி தம்பதியினருக்கு 1866ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் ஸ்வாமிஜி. அவரின் இயற்பெயர் காளிபிரசாத் சந்திரா என்பதாகும். 

தனது 18ஆம் வயதில் பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் போது, தக்ஷிணேஸ்வரில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்கச் சென்றார். காளிபிரசாத் அவரிடம் யோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். காளிபிரசாத்தின் நாக்கில் தனது வலதுகை நடுவிரலால் காளி மாதாவின் பெயரை எழுதி அவரை தியானத்தில் ஈடுபட ராமகிருஷ்ணர் தூண்டினார். தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் மங்கை தலைவன் தாளே என்று அப்பர் ஸ்வாமிகள் கூறியது போல, காளிபிரசாத் அன்றே ராமகிருஷ்ணரின் சீடராக மாறினார். 

தனியறையில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு நீண்டநேரம் சமாதியில் அமர்வது காளிபிரசாத்தின் வழக்கமாக இருந்தது. அதனால் அவரது தோழர்கள் அவரை காளி தபசி என்று அழைக்க ஆரம்பித்தனர். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் துறவறம் மேற்கொண்டு, வேதாந்த ஞானத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரப்ப உறுதி பூண்டனர். காளிபிரசாத் துறவறம் பூண்டார், அவருக்கு ஸ்வாமி அபேதானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. இரண்டல்ல ஒன்றேதான் உண்மை என்ற அத்வைத மரபை முன்னெடுத்தவருக்கு பேதம் என்பதே இல்லை என்ற பொருளில் பெயர் அமைந்தது சரிதானே. 

நாடெங்கும் கையில் ஒரு பைசாவும் இல்லாமல் அலைந்து திரியும் பரிவ்ராஜ சன்யாசிகளின் வரிசை என்பது பாரத நாடு போன்றே என்று தோன்றினை என்று கூறவும் இயலாத பழமை வாய்ந்த ஓன்று. ஸ்வாமி அபேதானந்தாவும் நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு மேலாக பாரதம் முழுவதும் சுற்றி வந்தார். இமயமலை சாரல்களிலும், கங்கோத்ரியிலும், யமுனோத்ரியிலும் அவர் தவம் செய்தார். புகழ்பெற்ற பேச்சாளராகவும், அற்புதமான எழுத்தாளராகவும், தலைசிறந்த அறிஞராகவும், அத்வைத வேதாந்தத்தில் கரைக்கண்ட ஞானியாகவும் ஸ்வாமிஜி விளங்கினார். 

1896ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து சென்ற அபேதானந்தர் அங்கே அத்வைத ஞானத்தைப் பரப்பினார். அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று நியூயார்க் நகரில் வேதாந்த நிலையத்தை நிறுவி அமெரிக்கா முழுவதும் பாரத ஞானமுறையை அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா மட்டுமல்லாது கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் வேதாந்தத்தை பரப்பினார். 

1922ஆம் ஆண்டு நாடு திரும்பிய ஸ்வாமிஜி திபெத் சென்று அங்கே புத்த தத்துவங்களையும் படித்தறிந்தார். 1923ஆம் ஆண்டு கொல்கத்தா நகரிலும் பின்னர் 1924ஆம் ஆண்டு டார்ஜிலிங் நகரிலும் ராமகிருஷ்ண வேதாந்த மடத்தை நிறுவினார். அதன் சார்பில் இன்றும் வெளியாகும் விஷ்வவாணி என்ற பத்திரிகையின் ஆசிரியராக 1938 வரை இருந்தார். 

ராமகிருஷ்ணரின் நற்செய்தி, ராமகிருஷ்ணரின் உபதேச மஞ்சரி, கல்வி பற்றிய சிந்தனைகள், இறப்பு என்னும் புதிர் – கடோபநிஷத், ஹிந்து தர்மத்தில் பெண்களின் பங்கு, கர்மா கோட்பாடு – செயல்பாட்டின் அறிவியலும், தத்துவமும் என்று பல்வேறு புத்தகங்களை ஸ்வாமிஜி எழுதியுள்ளார். 

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் ஸ்வாமிஜி மண்ணுலகை விட்டு மறைந்தார். 

எத்தனையோ மஹான்கள் இந்த நாட்டில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் குரு வணக்கம். 

(Visited 166 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close