காந்தியின் ஐந்தாவது மகன் – ஜம்னாலால் பஜாஜ் நவம்பர் 4
தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 212.
அறத்தின் வழிநின்று ஒருவன் ஈட்டிய பொருள் எல்லாம் தகுதியானவர்களுக்கு, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும். சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பிரதமர் மோதி சுட்டிக் காட்டிய குறள் இது. இதன்படி வாழ்ந்த பெருமகனார் தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள்.
கனிராம் பிரடிபாய் தம்பதியரின் மூன்றாவது மகனாக ராஜஸ்தான் மாநிலத்தில் காசி கா பாஸ் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஜம்னாலால். இயல்பாகவே தொழில்முனைவோர்களான மார்வாடி வகுப்பைச் சேர்ந்தவர் இவர். வசதியான குடும்பத்தைச் சாராத ஜம்னாலாலை பஷிராஜ் – சாதிபாய் தம்பதியினர் தங்கள் வாரிசாக தத்து எடுத்துக் கொண்டனர். ராஜஸ்தானைச் சார்ந்த இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தாவில் வசித்து வந்தனர்.
சேத் பஷிராஜ் மேற்பார்வையில் ஜம்னாலால் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சரியான நேரத்தில் சரியான விலையில் பொருள்களை வாங்கவும், அதனை லாபத்தில் விற்கவும், அதற்கான கணக்குகளை பராமரிக்கவும் திறமைசாலியாக விளங்கினார். ஜம்னாலால் தொடங்கிய தொழில்கள்தான் இன்று பஜாஜ் குழுமமாக பரந்து விரிந்து நிற்கிறது.
பொதுவாகவே வியாபாரிகளும் தொழிலதிபர்களும் கூடியவரை அரசைப் பகைத்துக் கொள்ளாமலே இருப்பார்கள். ஜம்னாலாலும் அப்படிதான் இருந்தார். முதல் உலகப் போரில் அவர் ஆங்கில அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை அங்கீகாரம் செய்யும் விதமாக அரசு அவரை கவுரவ நீதிபதியாக நியமித்தது. ஜம்னாலாலுக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தையும் அளித்தது.
திலகர், கோகுலே இவர்களின் சகாப்தம் முடிந்து காந்தியின் காலம் தொடங்கிய நேரம் அது. ஜம்னாலால் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அஹிம்சை, தாழ்த்தப்பட்ட சகோதர்களின் நல்வாழ்வு, எளிய வாழ்க்கை என்ற கொள்கைகளை அந்த தொழிலதிபர் பேசவில்லை, செயல்படுத்தத் தொடங்கினார். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தன் குடும்பத்தினரோடு வாழ ஆரம்பித்தார்.
காந்தியின் நெருக்கம் ஜம்னாலாலை ஆங்கில அரசு அளித்த ராவ் பகதூர் பட்டத்தையும் கௌரவ நீதிபதி பதவியையும் துறக்கத் தூண்டியது. அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், கொடி சத்தியாகிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஜம்னாலால் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
காந்தி சேவா சங்கத்தின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பல்லாண்டு பொறுப்பு வகித்தார்.
தேசத்தின் புனர்நிர்மாணப் பணி என்பது ஹரிஜன சகோதர்களை விட்டு விட்டு நடக்க முடியாது என்பதை உளப்பூர்வமாக நம்பிய ஜம்னாலால் தங்கள் குடும்ப கோவிலை ஹரிஜன மக்களின் தரிசனத்திற்காக திறந்து விட்டார். பல்வேறு கோவில்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரின் தொடர்ந்த முயற்சியால் திறக்கப்பட்டது. பல்வேறு குளங்களிலும், கிணறுகளிலும் ஹரிஜன சகோதர்கள் பயன்பாட்டுக்கு இருந்த தடை நீங்கியது.
தென்னக மக்களும் ஹிந்தி மொழியைப் படிக்க வேண்டும் என்பதற்காக தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக் சபா என்ற அமைப்பை ஜம்னாலால் நிறுவினார். கதர் துணி உற்பத்தி, கைத்தொழில் வழியாக கிராம முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஜம்னாலால் தொடர்ந்து இயங்கி வந்தார்.
தொழிலில் தனது பங்கு முழுவதையும் ஆதாரமாகக் கொண்டு ஜம்னாலால் பஜாஜ் தொண்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை வழக்கறிஞர் என்ற முறையில் காந்திதான் எழுதினார் என்றால் காந்திக்கு ஜம்னாலால் மீதான அன்பும் மரியாதையும் புலனாகிறதுதானே.
தனது நான்கு குழந்தைகளோடு ஜம்னாலால் பஜாஜை காந்தி தனது ஐந்தாவது மகனாகவே நடத்திவந்தார். “நான் தர்மகர்த்தா முறையில் பாரத தொழிலதிபர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதும் போதெல்லாம் என் கண்ணில் நிழலாடுவது இந்த தொழில்துறை இளவரசர்தான்” என்று ஜம்னாலாலைப் புகழ்ந்து அவரின் இறப்பிற்குப் பின்னர் காந்தி எழுதி உள்ளார்.
தனது ஐம்பத்தி ஏழாவது வயதில் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் ஜம்னாலால் பஜாஜ் காலமானார்.
ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய நிறுவனங்கள் இன்று பல்வேறு தொழில்களில் காலூன்றி பஜாஜ் குழுமமாக உருவாகி உள்ளது.