நீங்கள் மறந்துவிட்ட ஒரு கார்கில் ஹீரோ: என் அப்பா – தீக்ஷா
இதை எழுதவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. என் நோட்டிஸ் போர்டில் நான் ஒட்டி வைத்திருக்கும் அவரது பெயர் பொறித்த உலோக பிளேட்டை வெறித்துப் பார்க்கிறேன். எத்தனை எளிதாக நீங்கள் அவரை மறந்துவிட்டீர்கள் என்ற கோபம் எனக்குள் அதிகமாகிக்கொண்டே போகிறது. கருப்புநிற பிளேட்டில் வெண்ணிற எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்: C B DWIVEDI. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்!
ஒவ்வொரு வருடமும் ‘கார்கில் ஹீரோக்கள்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகளைப் பார்க்கிறேன். ஒன்றில்கூட இந்தப் பெயரை நான் பார்த்ததே இல்லை. நானும் பொறுமையாக 16 வருடங்கள் காத்திருந்தேன். ஜர்னலிசம் படிக்க நான் முடிவெடுத்ததற்கு என் அப்பாவே காரணம். இந்த உலகத்திலிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் எதையேனும் வித்தியாசமாக செய்து சாதிக்க நான் நினைப்பதற்கும் இவரே காரணம். எனவே இவரது கதையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.
அவர் வாழ்க்கை வீணாகிப் போன ஒன்றல்ல. உண்மையில் இன்று நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு நீங்கள் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.
ராணுவம் என்பதும் ஒரு வேலைதான். ஆனால், வேலையைக் காட்டிலும் அதில் நிறைய அதிகம் உள்ளது. அது ஒரு வாழ்க்கை முறை. ஒருத்தனுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலையைக் கொடுத்து அவனிடம் ‘நாளைக்கே நீ சாக நேர்ந்தாலும் நேரலாம்’ என்று சொல்வதைப் போன்றது அது. அப்படிச் சொன்னால், பத்து லட்ச ரூபாயாக இருந்தாலும் ஒருத்தரும் வேலைக்கு வரமாட்டார்கள். நீங்கள் துப்பாக்கி ஏந்தும் பிரிவுக்குப் போகிறீர்களா அல்லது வேறு பிரிவுக்கா என்பதைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு ராணுவத்திலும் தரப்படும். அப்போது போர்முனையில் முன் வரிசையில் நின்று, எதிரிகளின் குண்டுகளை நம் நாட்டு மக்களுக்காக நெஞ்சில் ஏந்திக்கொள்ளும் ஒன்றைத் தேர்வு செய்ய நிறைய நெஞ்சுரம் வேண்டும். என் அப்பா அதைத்தான் செய்தார். அவர் பீரங்கிப் படையில் சேர்ந்தார்.
இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகள் சேவை செய்தார். இன்று இத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் கர்னல் ஆகிவிடமுடியும். அவர் இன்று உயிருடன் இருந்தால் தற்போது எந்தப் பதவியில் இருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். தூங்கக்கூட நேரம் இல்லாத போர் முனையில் இருந்தாலும் கூட, தன் குடும்பத்துக்குக் கடிதம் எழுத மறக்காதவர் மேஜர் சி.பி. த்விவேதி. போர் முனையிலும் தான் மிக நல்ல நிலையில் இருப்பதான பாவனையுடன் எழுதுவார். அவர் என் அம்மாவுக்கு எழுதிய கடைசி கடிதம் இப்படிச் சொல்கிறது:
அன்புள்ள பாவ்னா,
அன்பு முத்தங்கள்.
…டிவியில் காண்பிக்கப்படும் பல செய்திகள் உண்மைதான். ஆனால் பல செய்திகள் பொய்யானவையும்கூட. எனவே அதை எல்லாவற்றையும் அப்படியே நம்பவேண்டாம். கடவுளை மட்டும் நம்பு…
அப்பா தன் உயிரை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்வதற்கு இரண்டு நாள்கள் முன்பு எழுதிய கடிதம் இது. அப்பா முழுக்க முழுக்க குடும்பத்தில் அதிகப் பிரியம் கொண்ட ஒருவர். என் அம்மாதான் வீட்டின் தலைவர். ஆனால் அவளை இப்படி ஆக்கியதும் என் அப்பாதான். ஸ்ரீ நகரில் இருந்து அழைக்கும்போது கூட, ‘என் செல்லக் குட்டி எங்கே’ என்றுதான் கேட்பார். உடனே நாங்கள் அம்மாவை அழைப்போம். இதன் அர்த்தம், அவர் அன்பற்ற அப்பா என்பதல்ல. அவர் தனது விடுமுறையை எங்கள் தேர்வுகளை ஒட்டியே திட்டமிடுவார். நாங்கள் அனைவரும் அவரை நம்பியே இருந்தோம். அவர் இல்லாவிட்டால், என் சகோதரிக்கு தேர்வுகளுக்கு தயார் செய்யவே தெரியாது.
கார்கில் போர் முனையில் இருந்தாலும் அப்பா எப்படி அவரது கடிதங்களில் இத்தனை இலகுவாக இருந்தார் என்பதை என்னால் இன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எங்களை சேட்டிலைட் போனில் அழைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அவரை சுற்றி நிலவும் மிக மோசமான வானிலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஒரு தன்னலமற்ற மனிதரை நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும். அப்படி ஒரு மனிதரைப் பார்த்தால், அன்றே நான் அவரைத் திருமணம் செய்துகொள்வேன்.
எல்லாப் பிரிவுகளும் ஒவ்வொரு போரின் போதும் போர் முனைக்குச் செல்லமாட்டார்கள். கார்கில் போரின் போது பீரங்கிப் படையும் காலாட்படையும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி சுடும் வீரர்கள் பீரங்கிப் படையைச் சேர்ந்தவர்களே. மேஜர் சி.பி. த்விவேதி பெருமை மிக்க ஒரு துப்பாக்கி சுடும் வீரர். பீரங்கியைப் போன்ற பெரிய அளவிலான துப்பாக்கி ஒன்றின் முனையில் தைரியத்துடன் அமர்ந்து, பயமே இன்றி எதிரிகளை எதிர்கொண்டு, இரவில் இருந்து விடியும் வரை அவர்கள் மீது குண்டுகளைப் பொழிபவர் அவர். ஆம், இப்படித்தான் கார்கில் போர் நடந்தது. இரவுகளில் உலகமே நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தபோது, இந்திய ராணுவம் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது.
மே 1999 14ம் தேதி அதிகாலை. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. கார்கிலின் 325வது ரெஜிமெண்ட் ட்ராஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது. கார்கில் பிரச்சினை எங்கள் எல்லாருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்திய வரலாற்றில் அது யாரும் எதிர்பார்க்காத ஒரு போர். அப்போதுதான் கோடை விடுமுறையின்போது நானும் என் அம்மாவும் என் அக்காவும் அப்பாவைப் போய் பார்த்துவிட்டு வந்தோம். நாங்கள் அவருடன் 12 மணி நேரம் மட்டுமே இருக்க முடிந்தது. அப்பா அம்மாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘மிகக் குறைந்த நேரமே பார்க்க முடிந்தது என்றாலும் 12 மணி நேரம்தான் பார்க்க முடிந்தது என்றாலும், உன்னைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் உங்களை சந்திக்கிறேன்.’
கொடூரமான நிஜம் என்னவென்றால், அதற்குப் பிறகு நாங்கள் அவரைப் பார்க்கவே இல்லை. அதுதான் நாங்கள் கடைசியாகப் பார்க்கப்போவது என்று தெரிந்திருந்தால், அந்த பன்னிரண்டு மணி நேரத்தை அரக்கபரக்க உணவு உண்பதில் செலவழித்திருக்காமல், வேறு வகைகளில் உருப்படியாகச் செலவழித்திருப்போம். என் அப்பா உண்மையில் ஒரு ரொமேண்டிக்கான மனிதர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். சில சமயம் சமைப்பார். நன்றாகச் சமைப்பார். உண்மையான அப்பா. அதெல்லாவற்றையும்விட உண்மையான வீரர். அவருடன் இருந்த ஜவான்கள் அவரை மிகவும் விரும்பியதற்குக் காரணம், போர்க்காலத்தின் போது அவரே மிகவும் உந்துசக்தியாக இருந்தார் என்பதற்காகவும்தான். அவர் 315வது ரெஜிமெண்ட்டில் இருந்தவரை, இந்தப் பிரிவு இரண்டே இரண்டு பேரை மட்டுமே கார்கில் போரில் இழந்தது.
போர் முகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் பீரங்கிப் படைப் பிரிவு 315வது ரெஜிமெண்ட்தான். அந்த நேரத்தில் அப்பா அந்தப் பிரிவின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆபரேஷன் விஜய் (கார்கில் போர்) உண்மையில் மிகவும் கடுமையான ஒரு போர். போதுமான தகவல்களே கிடைக்காதது, போருக்குத் தயாராகாத ராணுவம் மற்றும் பொதுமக்கள் என்ற போர்வையில் நம் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட கோழைகளின் திட்டமிட்ட நகர்வு – இவையெல்லாம்தான் காரணம்.
முதல்நாள் ரெஜிமெண்ட் ட்ராஸ் என்னும் இடத்தின் கீழ்மட்ட முகாமுக்கு வந்து சேர்ந்தது. அப்போது அவர்கள் மீது குண்டுமழை பொழிந்தது. என் மாமா கர்னல் உபாத்யாய் என் அப்பாவின் கடைசிக் காலங்களில் ஒவ்வொரு நொடியும் அவருடன் இருந்தவர். அவர் சொல்கிறார், எங்கே எதிரிகள் அமர்ந்திருந்தார்கள் என்றே தெரியவில்லை என்று. அன்றிரவு என் அப்பாவிடம் அவர் இப்படிச் சொன்னாராம்: ‘நாம் நிச்சயம் பெரிய அபாயத்தில் இருக்கிறோம்.’
எதிரிகள் எப்படிப் பரவி எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த யோசனையும் இன்றி ராணுவம் போர் முனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு பக்கம் டோலோலிங், மறு பக்கம் டைகர் ஹில்லும் 4875வது முனையும் இருக்க, ராணுவத்தினர் தீவிரமாகத் திட்டமிட்டார்கள்.
அப்பாவின் பிரிவான 315வது ரெஜிமெண்ட்க்கு, 1 நாகா, 8 சீக், 17 ஜாட் மற்றும் 16 க்ரீனடயர்ஸ்களின் நடவடிக்கைகளுக்கு உதவவேண்டிய பொறுப்பு இருந்தது. இவர்கள்தான் டோலோலிங், 5140வது முனை, ப்ளாக் டூத், டைகர் ஹில், 4875வது முனை (கன் ஹில்), மஹர் ரிஜ்ட் மற்றும் முஷ்கோ பள்ளத்தாக்கில் உள்ள ட்ராஸ்-இல் இருக்கும் சண்டோ டாப் ஆகிய இடங்களை மீட்கப் போனவர்கள். இரண்டாவது கமாண்டோ பொறுப்பில் இருந்த என் அப்பாதான், இந்த பீரங்கிப் படைப் பிரிவுகள் வருவதற்கான எல்லா விவரங்களையும் சேகரிக்கவேண்டும். எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து, நெடுஞ்சாலையைச் சுற்றி இருக்கும் காலி இடங்களை நோட்டமிடுவார்.
அப்போதுதான், வந்துகொண்டிருக்கும் பீரங்கிப் படைகளின் வண்டிகளை அங்கே நிறுத்தமுடியும். தேவையான வெடிகுண்டுகளைக் கொண்டு வருவது, சுடுவதற்கான ஒருங்கிணைப்பு, போரைப் பற்றிய சர்வே போன்ற எல்லா திட்டமிடல்களுக்கும் என் அப்பாதான் பொறுப்பு. மே 14 முதல் 31 வரையிலான காலகட்டம், இந்தப் பிரிவுக்கு மிகவும் மோசமான காலகட்டம். ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, உடனே அடுத்த இடத்துக்கு போக வேண்டி இருந்தது. அந்தச் சமயத்தில் இப்படி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.
மேப் முன்பு அமர்ந்துகொண்டு மறுநாள் என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடும் நேரம் மட்டுமே என் அப்பாவுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம்! அப்படி இருந்தும் அப்பா தொடரந்து கடிதம் எழுதினார். அதை மட்டும் அவர் மறக்கவே இல்லை.
காலாட்படைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தோளில் சுமந்துகொண்டிருந்த 315வது ரெஜிமெண்ட்டுக்கு இரவு வேளைகளில் இரண்டு தேர்வுகளே இருந்தன. ஒன்று, சுடுவதை நிறுத்திவிட்டு, மறுநாள் காலை வரை தங்கள் கூடாரங்களில் அல்லது பதுங்கு குழிகளில் காத்திருப்பது. அல்லது தொடந்து சுட்டுக்கொண்டே இருந்து காலாட்படைகளைப் பாதுகாப்பது. என் அப்பா பெரும்பாலும் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். பீரங்கிப் படைகளுக்குப் பதுங்கு குழிகள் கூட அங்கே இல்லை. அவர்கள் கூடாரங்களில்தான் தங்கி இருந்தார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சுடும்போது மறைந்துகொள்ள முடியாது. ஏனென்றால் சுட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கியின் முனையில் உட்கார்ந்துகொண்டுதான் அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டார்கள். எதிரிகளை நேருக்கு நேர் பார்த்துச் சுடுவார்கள். அங்கேதான் என் அப்பா இருந்தார். துப்பாக்கி முனையின் உச்சியில். எந்த பயமும் இல்லாதவராக!
இந்திய விமானங்கள் கூட இந்த சமயத்தில் நிறுத்தப்பட்டன. இந்த சமயத்தில்தான் ஸ்க்வாட்ரன் தலைவர் அஜய் அஹுஜா மே 27, 1999 அன்று கொல்லப்பட்டார். இது இந்தியப் படைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதற்காக செய்தாகவேண்டியதை செய்யாமல் இருக்க முடியாது.
இன்னும் நினைவிருக்கிறது, நானும் என் அக்காவும் ஊடி-யில் ஒரு ஆப்பரேஷனை என் அப்பா கமாண்ட் செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த வருடம் என நினைவில்லை. எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவர் எங்கோ தூரத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு மலையின் உச்சியில் எங்களை உட்காரச் சொல்லி இருந்தார். அங்கிருந்து அவர் வேலை செய்வதை நாங்கள் பார்க்கவேண்டும். அப்பா தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, ஒரு உண்மையான வீரரைப் போலத் தன் சக வீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தார். நாங்கள் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஆணை பிறப்பித்துக்கொண்டே அப்பா சும்மா நடந்துகொண்டிருக்கிறார்” என்று பேசிக்கொண்டோம்.
அவர் எப்பேற்பட்ட தலைவர் என்பதைப் புரிந்துகொள்ளும் வயது அன்று எங்களுக்கு இல்லை. அன்று அவர் உயிருடன் திரும்பி வந்ததற்குக் காரணம், எதிரிகள் அன்று அமைதியை வலியுறுத்தும் விதமாக வெள்ளைக் கொடியைக் காட்டியதால்தான். அப்பா என்றுமே வெற்றியாளராகவே இருந்தார்.
ஜூலை 2, 1999 மாலை. 315வது ரெஜிமெண்ட்டுக்கு இன்னொரு குழப்பம் வந்தது. சுடுவதைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா? ஆனால் சுடுவதை நிறுத்தினாலோ காலாட்படைகள் (18வது க்ரீனடயர் மற்றும் 9 சிக் பிரிவுகள்) மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அப்பா மீண்டும் சுடுவதைத் தொடரும் முடிவையே தேர்ந்தெடுத்தார். தன் கூடாரத்திலிருந்து வெளியே ஓடிய அப்பா, தன் சக வீரர்களை ஊக்குவித்தபடி, சுடுவதைத் தொடரச் சொன்னார். இதை வெற்றிகரமாக முடித்து மீள்வது என்பது எத்தனை கடினமானது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர் அந்தக் கடினமான முடிவை எடுக்கவேண்டி இருந்தது. ஒன்று தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அல்லது ஒட்டுமொத்த பிரிவையும் பாதுகாப்பது – இந்த இரண்டில் அவர் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வீரனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் வெறி இது. நமக்கு இது புரியாது. அவர் வெறியுடனேதான் இருந்தார்.
அப்பா துப்பாக்கிச் சுடுபவரின் இடத்தில் அமர்ந்து, எதிரிகளை நோக்கிச் சுட்டார். அப்போது அவருக்கு வலப்பக்கம் ஒரு குண்டு வந்து விழுந்து வெடித்தது. அவரது முழங்கைகளில் காயம் ஏற்பட்டது. அதை அவர் உணர்ந்தார்தான். ஆனால், அவற்றில் சில, கைகளைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள்ளேயும் போய்விட்டது என்பதை அவர் உணரவில்லை. போரின் வேகத்தில் ஒரு வீரன் தன் வலியை உணர்வதில்லை என்பதுகூட ஒருவேளை காரணமாக இருந்திருக்கக்கூடும். அதனால் அவர் உடலுக்குள் பெரிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆனால் தனது கைகளில்தான் காயம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தார்.
அந்த குண்டு காரணமாக, அப்பாவும் நான்கு மற்ற துப்பாக்கி சுடும் வீரர்களும் மரணம் அடைந்தார்கள். கன் பொசிஷன் ஆஃபிஸரும் துருப்பின் தலைவரும் காயத்தோடு தப்பித்தார்கள்.
அப்பா அப்போது 2 ஐசி-யாகவே இருந்தார். பயங்கரமான போர் முகத்தில் தனியாளாகப் பல ஆப்பரேஷன்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதிகாலை 2.30க்கு ரெஜிமெண்ட் 315ன் வேலை நேரம் தொடங்கும். தங்கள் வண்டிகளில், ஹெட்லைட்டை அணைத்துவிட்டு மலைகளை அவர்கள் சுற்றி வருவார்கள். அப்படிப்பட்ட அபாயத்தில்தான் அவர்கள் இருந்தார்கள். 315ன் ஹீரோக்கள் இந்தியாவுக்கு வெற்றியைக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு கௌரவப் பட்டங்களும் தரப்பட்டன. ஆனால் இந்திய மக்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தரவில்லை. அந்த சமயத்தில் இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்திருப்பார்கள். கார்கிலில் ராணுவ வீரர்களே அந்த நேரத்தில் தங்கள் வாழ்க்கையை பணையமாக வைத்துப் போரிட்டார்கள். அவர்கள் போரின் முதுகெலும்பாக விளங்கினார்கள். ஆனால் அவர்கள் மக்களால் மீண்டும் நினைக்கப்படவே இல்லை.
டைகர் ஹில்தான் இந்தியப் படைக்கான இறுதிப் புள்ளி. அங்கே இந்திய மூவர்ணக் கொடி உயரப் பறந்ததை என் அப்பா பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அவர் எங்கே இருந்திருந்தாலும், அந்த வெற்றியை உணர்ந்திருப்பார் என்பது மட்டும் உறுதி. இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது. எந்த ஊடகமும் அதை என் அப்பாவிடமிருந்து பறித்துவிடமுடியாது.
ஜூலை 2, 1999. அந்தச் செய்தி வந்தபோது எங்கள் உலகம் தகர்ந்து போனது. என் அப்பாவுக்கு நாங்கள் குழந்தைகள் மட்டுமே. அம்மாவும் கூட அப்படித்தான். அப்போது அம்மாவுக்கு 34 வயதுதான். ஒவ்வொரு முறை நாங்கள் கீழே விழும்போதும் எதோ ஒரு வழியில் என் அப்பாவின் ஆன்மா எங்களைத் தூக்கிவிட்டது. இன்றோடு 20 வருடம் ஆகிறது.
இந்த கார்கில் தின வெற்றியின்போது, இழந்து போன இந்த மக்களின் உணர்வை தூண்ட நானும் என் அக்காவும் தொடர்ந்து போராடுகிறோம். இன்று இந்தியா உயிர்ப்புடன் இருக்க காரணமான அந்த ஒவ்வொருவருக்கும் என் வீர வணக்கங்கள்.
என் அப்பா, என் ஹீரோ. அவருக்கு ஒரு சல்யூட்.