நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் கணேஷ் மாவலங்கர் – நவம்பர் 27

தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், கல்வியாளர், பாராளுமன்றவாதி என்ற பல்முக ஆளுமையாகத் திகழ்ந்த கணேஷ் வாசுதேவ மாவலங்கரின் பிறந்தநாள் இன்று. 

மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தைச் சார்ந்த மாவலங்கர் 1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் பரோடா நகரில் நாள் பிறந்தவர். தனது ஆரம்ப கல்வியை அன்றய பம்பாய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முடித்த மாவலங்கர் மேற்படிப்புக்காக இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நகருக்கு குடிபெயர்ந்தார். 1908ஆம் ஆண்டு குஜராத் கல்லூரியில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்று அதனைத் தொடர்ந்து 1912ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அதனைத் தொடர்ந்து அஹமதாபாத் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 

அந்த காலகட்டத்தில் நாட்டில் சூறாவளியாக வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை மாவலங்கரையும் பற்றிக் கொண்டது.  குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்ததால், காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது. அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக 1919ஆம் ஆண்டு தேர்வானார். 1919 – 1922, 1925 – 1928, 1930 – 1933, 1934 – 1937  ஆகிய காலகட்டத்திலும் அவர் அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக பணியாற்றினார். 

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் மாவலங்கர் நியமிக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டதால் குஜராத் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாவலங்கர் அறியப்படலானார். பல்வேறு  போராட்டங்களில் கலந்து கொண்டு ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தார். 

1934ஆம் ஆண்டு பம்பாய் மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்வான மாவலங்கர் 1937 ஆம் ஆண்டு பம்பாய் சட்டசபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் சாசன சபையின் சபாநாயகராகவும் அவர் பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுதேர்தலில் அஹமதாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மாவலங்கர் முதல் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வெற்றிகரமான வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தகுதியான பாராளுமன்றவாதியாகவும் இருந்த மாவலங்கர், குஜராத் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றினார். அஹமதாபாத் கல்விச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர், அதன் தலைவராகவும் இருந்தார். குஜராத் வித்யாபீடத்தின் சட்டதுறை பேராசிரியராக பணியாற்றனார். குஜராத் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக இருந்தார். காந்தியோடு தனது அனுபவங்கள், சிறையில் தான் சந்தித்த பல்வேறு கைதிகள் பற்றி, தனது வழக்கறிஞர் வாழ்க்கையைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களையும் மாவலங்கர் எழுதி உள்ளார். 

1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் அவதிப்பட்ட மாவலங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1946ஆம் ஆண்டில் இருந்து தற்காலிக நாடாளுமன்றம், அரசியலமைப்பு சபை, சுதந்திர பாரதத்தின் முதல் நாடாளுமன்றம் ஆகியவற்றை பத்தாண்டுகள் வழிநடத்திய கணேஷ் வாசுதேவ மாவலங்கர் 1956ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் காலமானார். எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் ஜனநாயக வழியில் பாரதம் நடைபோடுகிறது என்றால் அது மாவலங்கர் போன்ற அறிஞர்கள் அமைத்துக் கொடுத்த அடிப்படைகளே காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். 

(Visited 27 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *