ஆன்மிகம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

அன்னை சாரதா தேவி – அவதார தினம் டிசம்பர் 22.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்கைத்துணையாகவும், முதல் சீடராகவும் ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவியருக்கும் மற்றும் பல பக்தர்களுக்கும் அன்னையாகவும் போற்றி வணங்கப்படும் அன்னை சாரதா தேவியரின் அவதாரதினம் இன்று. 

இன்றய மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெயராம்பட்டி என்ற சிறு கிராமத்தில் ராமசந்திர முகோபாத்யாய – ஷ்யாம சுந்தரி தேவி தம்பதியரின் முதல் மகவாக 1853ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் அவதரித்தவர் சாரதா தேவி. அவரின் இயற்பெயர் சாரதாமணி என்பதாகும். கங்கை பாயும் செழிப்பான பூமியை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து மக்களை வறுமையின் பிடியில் வாட வைத்திருந்த காலம் அது. வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றில்தான் அன்னையும் பிறந்தார். அவர் பள்ளி சென்று படிக்கவில்லை. ஆனால் எல்லா ஹிந்து குடும்பங்களையும் போல இதிகாசங்களையும் வாழ்வியல் பாடங்களும் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. சிலை வடிவில் ஆண்டவனை அமைத்து, பூஜை செய்வது அவரின் முக்கியமான வேலையாக இருந்தது. 

அன்னையின் வாழ்வு கொல்கத்தா நகரில் இருந்த கதாகதரோடு இணைக்கப்பட்டு இருந்தது. தக்ஷிணேஸ்வர் கோவிலில் ஆன்ம சாதனையில் மூழ்கி இருந்தார் கதாகதர், அவரின் அருமை தெரியாத அவரின் குடும்பத்தினர் திருமணம் ஆகிவிட்டால் ஆவர் நம்மைப்போல உலகவாழ்வில் உழலும் மனிதராக மாறி விடுவார் என்று எண்ணி அதற்கான வேலையில் ஈடுபடத் தொடங்கினர். கதாகாதர் சாரதாமணிதான் தனக்கு சரியான துணை என்று கூற, அந்தத் திருமணம் நடைபெற்றது. கதாகாதர்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அறியப்பட்ட ஜீவன் முக்தர். விவேகானந்தர் என்ற ஞானச்சுடரை இந்த உலகுக்கு கொடுத்த குருநாதர். திருமணம் நடைபெறும் போது சாரதாமணியின் வயது ஆறுதான். ராமகிருஷ்ணரின் வயது இருபத்தி மூன்று. அந்தக் கால வழக்கப்படி திருமணம் ஆன பிறகும் தனது தந்தையின் வீட்டிலே இருந்த அன்னை, தனது பதினெட்டாம் வயதில் தன் கணவரோடு இணைந்து கொண்டார். ராமகிருஷ்ணர் சாதாரண மனிதர் இல்லை என்பதை புரிந்து கொண்டு அவரின் முதல் சீடராக, தொண்டராக அவர் தன் வாழ்க்கையை நடத்தினார். 

இனிப்பை நோக்கி எறும்பு வருவது போல, ராமகிருஷ்ணரை நோக்கி பல்வேறு சீடர்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். தினம்தோறும் தனது தியானத்தையும், பூஜைகளையும் முடித்து ராமகிருஷ்ணருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவு தயாரித்து உபசரிப்பது அன்னையின் பணியாக ஆனது. இல்வாழ்வில் ஈடுபடாது இருந்த அன்னைக்கு ஆயிரமாயிரம் மகன்கள் கிடைத்தார்கள். பராசக்தியின் வடிவமாகவே அன்னையைக் கண்ட ராமகிருஷ்ணர் அன்னையையே பீடத்தில் அமர்த்தி மாதா திரிபுரசுந்தரியாக வரித்து பூஜை செய்வதும் உண்டு. ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் விதவைக்கோலம் பூணத் தொடங்கிய அன்னையின் முன் ராமகிருஷ்ணர் தோன்றி ” நான் எங்கே சென்று விட்டேன், இங்கேதானே ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு சென்றுளேன்” என்று கூறி அதனை தடுத்து விட்டார். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அப்போதுதான் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் ஆணிவேராக அன்னை செயல்பட்டார். 

தனது பெண் சீடர்கள் தொடர அன்னை காசி, மதுரா மற்றும் அயோத்தி ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். பின்னர் ராமகிருஷ்ணர் பிறந்த கமர்புக்கூர் கிராமத்தில் ஓராண்டு தங்கி இருந்தார். அங்கே இருந்தவர்களுக்கு அன்னையின் அருமை தெரியவில்லை. அவரையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அன்னையின் நிலையைத் தெரிந்து கொண்ட ராமகிருஷ்ணரின் சீடர்கள் அன்னையை மீண்டும் கொல்கத்தாவிற்கே அழைத்து வந்தனர். அங்கே பல்வேறு மனிதர்கள் அன்னையின் சீடர்களாக ஆனார்கள். ராமகிருஷ்ண மடத்து துறவிகளை சமுதாய சேவைக்கு தூண்டியது அன்னையின் பெரும் கருணையேயாகும். அமெரிக்கா நாட்டுக்கு அனைத்து சமய மாநாட்டுக்கு செல்லலாமா என்ற கேள்விக்கு விடையளித்து விவேகானந்தரை அங்கே அனுப்பி வைத்ததும் அன்னையே. 

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரத ஞானத்தை விவேகானந்தர் பரப்பினார். அங்கே அவருக்கு பல்வேறு அயல்நாட்டினர் சீடர்களாக மாறி பாரதம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் தனது குழந்தைகளாக ஏற்று தனது கருணையெனும் அமுதமழையில் அன்னை ஆசீர்வதித்தார். மிக எளிய சொற்களைக் கொண்டு ஆழ்ந்த கருத்துக்களை தெரிவிக்கும் திறன் அவருக்கு இயல்பாகவே இருந்தது. கனவிலே அன்னை தனக்கு மந்திர உபதேசம் செய்தார் என்று பலர் கூறுவதும் உண்டு. 

“உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் பிறரின் குறைகளை பார்ப்பதை நிறுத்துங்கள், அதற்குப் பதில் உங்கள் குறைகளை கண்டறியுங்கள். உலகம் முழுவதையும் உங்கள் உறவு என்று நினைக்கப் பழகுங்கள். உலகில் யாரும் உங்களுக்கு அந்நியர் அல்ல, அனைவரும் உறவினர்கள்தான்” இது அன்னை அளித்த உபதேசம். பெண் கல்வியின் முக்கியத்தை அறிந்த அன்னை, தனது சீடர்களை பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்க வைத்தார். 

ஜீவன் முக்தரின் வாழ்க்கைத்துணையாக, தன்னலத்தை ஒழித்த துறவியர் வரிசையின் ஆணிவேராக, உலக மக்களின் தாயாக விளங்கிய அன்னை சாரதாதேவி 1920ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் தனது உடல்கூட்டை உதறி பரம்பொருளோடு கலந்தார். 

அன்னையின் நினைவு நம்மை எல்லாப் பொழுதும் நல்வழியில் செலுத்தட்டும். எத்தனையோ ஞானிகள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். 

(Visited 108 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close