சினிமாசெய்திகள்

தர்பார் – என்கவுன்ட்டர் அரசியல்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி ஒரு வருடம் கழிந்த நிலையில், அவர் மீதிருந்த தீவிரமான ஆதரவும் வெறுப்பும் கடந்த ஒரு வருட கால இடைவெளியில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுவிட்ட நிலையில் வந்திருக்கிறது தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் பொதுவாக நல்ல கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பெயர்பெற்றவர். இன்றைய நிலையில் வெளிப்படையாக ரசிக்கத்தக்க, எவ்வித அரசியலும் அற்ற கமர்ஷியல் படங்கள் வருவது அரிதாகிவிட்ட சூழலில், ரஜினியும் ஏ.ஆர். முருகதாஸும் இணைவது கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான் செய்திருந்தது. திரைப்படத்தை தங்கள் அரசியல் கருத்துகளுக்குப் பயன்படுத்தும் வெளிப்படையான இயக்குநர்களின் படத்தில் ரஜினி நடிக்கும்போது வெளிப்படும் அரசியல் கருத்துகளை ரஜினியின் அரசியல் கருத்துகாகக் கொள்ளக்கூடாது என்பது ஒருவித சமாளிப்பு மட்டுமே. உண்மையில் இது கொஞ்சம் விவரமான சமாளிப்பு என்றே சொல்லவேண்டும். ரஜினி வெறும் நடிகராக மட்டுமே இருந்து, இயக்குநர்களும் வெறும் இயக்குநர்களாக மட்டுமே இருந்தால் இக்கருத்தை ஒட்டுமொத்தமாகவே ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் அப்படி இல்லாத ஒரு நிலையில் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினியின் காலா வருவதற்கு முன்பு ரஜினி தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாகப் பேசிய பேச்சு கொடுத்த எதிர்வினை, அனைத்து ‘முற்போக்காளர்களையும்’ ரஜினிக்கு எதிராகப் பேச வைத்தது. ஆனால் படமோ அப்பட்டமான ஹிந்துத்துவ எதிர்ப்புத் திரைப்படம். உடனே தங்கள் நிலைப்பாட்டை ரஞ்சித்தை முன்வைத்து காலா திரைப்படத்துக்காக மட்டும் மாற்றிக்கொண்டார்கள் ‘முற்போக்காளர்கள்.’ அதாவது தங்கள் வசதிப்படி இருந்தார்கள்.

இன்று ஒட்டுமொத்த திரைப்பட உலகமும் ஹிந்து மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இரண்டு திரைப்படங்களை அப்பாவிப் பூனைகளாக எடுக்கும் இயக்குநர்கள் திடீரென்று ஒரு அரசியல் கருத்தோடு ஒரு படத்தை எடுக்கிறார்கள். அல்லது அரசியல் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் இப்படிச் செய்யக்கூடாது என்பதல்ல. ஆனால் இவர்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஹிந்து மதத்துக்கு எதிரான அரசியல் என்பதாக மட்டுமே இருக்கிறது. மறந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ மதமாற்ற விஷயங்கள் குறித்தோ ஒரு மாற்றுக் கருத்தைக் கூட வைத்துவிடமாட்டார்கள். இந்தச் சூழலுக்கு ரஜினியும் பலியானார். காலாவைத் தொடர்ந்து வெளிவந்த பேட்ட படத்திலும் இந்த ஹிந்துத்துவ எதிர்ப்பு வெளிப்படையாகவே முன் வைக்கப்பட்டது. அதன் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் முதலிரண்டு படங்களை நல்ல இயக்குநராகத் தந்தவர், பேட்ட படத்தை ரஜினியின் ரசிகராகத் தந்தவர், இன்று சி ஏ ஏ (தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம்) தொடர்பாக திடீரென்று ஒரு கருத்தை முன்வைக்கிறார். இப்போது அவரது படங்களை நாம் வெறும் திரைப்படங்களாக அணுக முடியாது. அணுகக் கூடாது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இதை ஏன் தர்பார் திரைப்படத்தின் போது பேசவேண்டும்? ஏனென்றால் ஒரு திரைப்படத்தை வைத்து அந்தத் திரைப்படத்தை மட்டுமே அணுகமுடியும் என்று சொல்வதற்கும், இனி வரும் திரைப்படங்களில் இந்தத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் யார் வசம் சிக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது என்று சொல்வதற்கும்தான். அப்படி இருக்கிறது நிலைமை.

தர்பார் திரைப்படம் வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை. ஆனால் நுணுக்கமாக ஒரு விஷயத்தை மெல்லத் தாண்டிப் போகிறது. தாண்டி போவதன் நோக்கம், பயம் மட்டுமே. வேறு எந்த வகையிலும் ஹிந்து மத அரசியலைப் பழிக்கவேண்டும் என்பதற்காகவோ, பிற அரசியல் இயக்குநர்கள் செய்வது போல ஹிந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்ல. வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை என்பது தரும் நிம்மதியுடன், நுணுக்கமாக அது தாண்டிப் போகும் விஷயத்தையும் நாம் பேசத்தான் வேண்டும். அதே சமயம் தர்பார் திரைப்படம் மிக தைரியமாக வெளிப்படையாக காவல்துறையை அங்குலம் அங்குலமாக ஆதரிக்கிறது. இன்றைய நிலையில் ஹைதராபாத் என்கவுண்டரைப் பொருத்து மக்களின் மனநிலையில் என்கவுண்ட்டர்களுக்கு ஆதரவான மனநிலை இருப்பதால் தப்பித்தது. இல்லையென்றால் இப்படம் வேறு மாதிரியான எதிர்வினைகளைப் பெற்றிருக்கக்கூடும். எவ்வித விசாரணையும் இல்லாத என்கவுண்ட்டர்களை, ஹைதராபாத் என்கவுண்ட்டர்கள் உட்பட, நான் ஆதரிக்கவில்லை. சட்டரீதியாகத் தரப்படும் தண்டனையே சரியானது அது மரண தண்டனையாக இருந்தாலும் சரிதான். ஆனால் ஹைதரபாத் என்கவுண்ட்டரின்போது இருந்த பொதுமக்களின் கொதிநிலையின் முன்பு இக்கருத்துச் சொல்லப்பட்டபோது மிகத் துச்சமாகவே அது எதிர்கொள்ளப்பட்டது. ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் என்பது நிச்சயம் கேட்ட நொடியில் ஒரு மகிழ்ச்சியைத் தரவே செய்கிறது. குரூர மகிழ்ச்சி. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அறிவு சொல்கிறது. பொதுமக்களோ சட்டென கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே தங்கிக்கொள்கிறார்கள். இப்படமும் என்கவுன்ட்டரின் இன்னொரு‌ பக்கத்தைத் தொட்டுப் பார்க்கக்கூட முனையவில்லை. நல்ல கிறுக்குத்தமான போலீசின் என்கவுன்ட்டர் என்பதே போதும் என்று நினைத்துவிட்டார்கள்.

இப்படம் வன்புணர்வுக்குத் தரப்பட்டும் என்கவுண்ட்டரை மட்டும் சொல்லும் படமல்ல. மாறாக எந்த ஒரு கொடூர குற்றத்துக்கும் என்கவுண்ட்டர் செய்யும் ஒரு போலிஸை ஹீரோவாகக் காண்பிக்கிறது. தொடர் என்கவுண்ட்டர்கள். கொல்லப்படுபவர்கள் அனைவருமே கெட்டவர்கள். எனவே மக்கள் இந்த என்கவுண்ட்டருக்கு மிக நெருக்கமாகிப் போகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது வெடித்த ரஜினியின் உண்மைக்குரலும் இப்படத்தின் கருத்தும் அப்படியே ஒன்றிப் போகிறது. இதை ஒட்டித்தான் இனி ரஜினிக்கும் இப்படத்துக்கும் முருகதாசுக்கும் வேப்பிலை அடிப்பார்கள். அடிக்கட்டும், நல்லதுதான். அதுமட்டுமல்ல, மிக வெளிப்படையாகவே மனித உரிமைக் கழகத்தின் போலித் தனத்தை விமர்சிக்கிறார்கள். ரஜினியின் வசனம் ஒன்று ஒரு மனித உரிமைக் கழக அலுவலரைப் பார்த்து இப்படி வருகிறது, ‘எவனாவது செத்தா மனித உரிமைக் கழம் வரும், நீங்களே செத்தா எந்த கழகம் வரும்?’ என்று. அதேபோல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களைக் காட்டி, பணம் கொடுத்தா யாருக்கு வேணா பேசுவாங்க என்று வசனம் வருகிறது. சசிகலாவைக் குறிப்பிடும் ஒரு வசனமும் போகிற போக்கில் வருகிறது.

ரஜினி இதுபோல தன் கருத்துக்கு ஒத்துவரும் படங்களை எடுத்துக்கொண்டு நடிப்பது அவருக்கு நல்லது. ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் நடித்துவிட்டு, அது வெறும் படம் என்று சொல்லும் சமாளிப்பையெல்லாம் நிறுத்திக்கொள்வது அவரது அரசியலுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஏனென்றால் நமக்குப் பழக்கப்பட்ட ரஜினி இப்படிப்பட்டவர் அல்ல! ஆன்மிக வாதி! அதை திடீரென்று மாற்றும் தேவையற்ற விஷச் சுழலில் ரஜினி சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. இல்லையென்றால் அரசியலில் கமலுக்கும் ரஜினிக்கும் வித்தியாசம் நூலிழை அளவு மட்டுமே இருக்கும்.

இப்படம் வெளிப்படையாக ஹிந்துக்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை. ஆனால் மும்பையில் போதை மாஃபியா, ரவுடியிஸம் என எல்லாவற்றையும் செய்து குவித்தது தாவூத் இப்ராஹிம். அதைச் சொல்லக்கூட தைரியம் இன்றி, இயக்குநர் அதை ஹரி சோப்ரா என்று வைத்துக்கொண்டு விட்டார். இன்னுமா அச்சம்? இது வன்முறை தொடர்பான அச்சமல்ல. தனக்கும் இத்திரைப்படத்துக்கும் முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று எழும் அச்சம். அதனால் ஏற்படும் பொருளாதார ரீதியான பின்னடைவு ஏற்படுத்தும் பயம். இதையே ஹிந்துக்களும் திருப்பிச் செய்யாதவரை இந்தத் தமிழ்த் திரையுலகம் ஹிந்துக்களை துரத்துவதை நிறுத்தப்போவதில்லை.

ஒரு படமாகப் பார்த்தால் – முதல் பகுதி போவதே தெரியவில்லை. மிரட்டல். கார்த்தி சுப்புராஜ் தம்பட்டம் அடித்துக்கொண்டு காண்பித்த பழைய ரஜினியை ஏ.ஆர். முருகதாஸ் அலட்டலே இல்லாமல் சாதித்துக்காட்டிவிட்டார். கடந்த நான்கு படங்களில் ரஜினிக்கு இல்லாத சுறுசுறுப்பும் வேகமும் இப்படத்தில் வந்திருக்கிறது. ஆச்சரியம். காலா, கபாலி படங்களில் ரஜினி ஓடும் காட்சியெல்லாம் கிடையாது. இப்படத்தில் பல காட்சிகள் ரஜினி படு எனர்ஜட்டிக்காக இருக்கிறார். முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மெல்ல இழுக்கும் படம், மும்பையின் விபசார விடுதிகளின் ரெய்டுகளின் போது வேகம் பிடிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், எவ்வித திருப்பமும் இன்றிப் படம் செல்வதுதான். ரஜினியின் மகள் கதாபாத்திரத்தின் முடிவு மிக உருக்கமானது, முக்கியமானது என்றாலும், அது தரும் சிறிய அலுப்பு படத்துக்கு பெரிய தடையைக் கொண்டு வருகிறது. அதிலிருந்து படம் மீளவே இல்லை. ரஜினி தனியாளாகப் போராடுகிறார். இன்னமும் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தனியாளாகத்தான் வில்லனிடம் மோதவேண்டும் என்ற நிலை வரும்போது, ரஜினியின் தனியாள் போராட்டமும் வீணாகப் போகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு படமாக நிச்சயம் படம் நன்றாகவே உள்ளது. காலா, கபாலி, பேட்ட திரைப்படங்களில் இல்லாத நகைச்சுவையான கலகலப்பான காட்சிகள் நன்றாக வந்துள்ளன. இது பெரிய ப்ளஸ். ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா அட்டகாசமாக நடிக்கிறார். எந்த ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக நடிக்கும் நடிகைக்கு தமிழ்த் திரையுலகில் கதாநாயகி என்று பெயர். இப்படத்தில் நயந்தாரா. இசையும் ஒளிப்பதிவும் கச்சிதம். இடைவேளைக்குப்‌ பின்னர் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் எங்கேயோ‌ போயிருக்கும்.

ரஜினிக்கு 70 வயது. இந்த மாதிரி கமர்ஷியல் படத்தில் இந்த அளவுக்கு உழைப்பதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. என் அப்பாவின் 70வது வயதில் அவர் கையைப் பிடித்து பாத்ரூமுக்குக் கூட்டிச் செல்வேன்!

இனி ‘முற்போக்காளர்களிடம்” ரஜினியை விட்டுவிட்டு நாம் ஸ்வீட் சாப்பிடலாம்!

(Visited 1,459 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close