வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். – ஜனவரி 12
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை குறள் 736
தன்னிலையில் கெடாமலும், ஒரு வேளை சூழ்நிலையால் கெட நேர்ந்தாலும் தனது வளம் குன்றாது இருத்தலும் , மீண்டும் தனது வளத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வலிமை உடையதுதான் நாடு என்று சொல்லப்பட வேண்டும் என்பது திருவள்ளுவர் காட்டும் நாட்டின் இலக்கியம். அப்படி பாரத நாட்டின் வளம் என்பது அதன் ஆன்ம பலத்தில்தான் உள்ளது.
பாரதத்தின் ஆன்ம பலம் குன்றிப் போய் விடுமோ என்று அஞ்சும் காலத்தில், தகுதியான ஆசிரியர்கள் தோன்றி நாட்டின் ஆன்ம பலத்தை தூண்டி மக்களை வழிகாட்டிச் செல்வது என்பது பாரதத்தின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுதான். அப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆசிரியர்தான் ஸ்வாமி விவேகானந்தர்.
பாரத நாட்டின் ஆன்ம பலம் என்பது அதன் ஆன்மீகத்தில் உள்ளது. ஆன்மீகத்தின் கருத்து என்பது உபநிடதங்களில் உள்ள நான்கு மஹாவாக்யங்களில் தெளிவாகிறது. ப்ரக்யானம் ப்ரம்ஹ, அயம் ஆத்மா ப்ரம்ஹ, தத் த்வ மஸி, அஹம் ப்ரம்ஹாஸ்மி என்பனவையே அந்த நான்கு மஹாவாக்யங்கள். அறிவே ப்ரம்ஹம், நானே ப்ரம்ஹம், நீயே அதுவாக ( ப்ரம்ஹமாக ) உள்ளாய், என்பதுதான் அந்த தத்துவம். எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுதான் என் உள்ளிலும் உள்ளது, நானும் ப்ரஹ்மமும் வேறில்லை, இந்த அறிவே ப்ரஹ்மம் எனவே உலக மக்கள் அனைவரும் ஒன்றே, என்னுள் இருக்கும் அதே ப்ரம்ஹம்தான் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் உள்ளது என்பதுதான் பாரத நாடு காட்டும் பாதை.
ஆனாலும் காலவோட்டத்தில் மக்கள் இதனை மறந்து விடுகிறார்கள். அப்போது நாடு அதன் இயல்பான தன்மையை விட்டு விலகி இருளடைந்த காலத்தில் சென்று விடுகிறது. அந்த இருளை விரட்ட தகுதியான குருமார்கள் தோன்றி நாட்டை நல்வழியில் செலுத்துகின்றனர்.வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நாட்டை அடிமையாக்கினார். மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அந்நியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போரை நடத்தினர். ஆனாலும் நவீன ஆயுதங்களை கொண்ட அன்னியர்களை பாரத மக்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் ஸ்வாமி அவதரித்தார். இவரின் குருநாதர் இவருக்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே பிறந்து இவருக்காக காத்துகொண்டு இருந்தார்.
வங்காளத்தில் பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற ஞான சூரியன், உண்மையை அறிந்துகொள்ள வேண்டி பல்வேறு அறிஞர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஐயங்களின் தீர்வு படிப்பறிவே இல்லாத ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தது. “உன்னை நான் பார்ப்பது போல, காளியைப் பார்க்கிறேன்” என்று கூறி நரேந்திரனை அதிரவைத்தார் ராமகிருஷ்ணர். இது அல்லது அது என்ற இரட்டைப்படை சிந்தனையில் வளர்ந்த நரேந்திரனுக்கு உண்மைக்கு ஒரே வழி மட்டுமே இல்லை, எந்த வழியில் சென்றாலும் உண்மையை அறியலாம் என்பதை ராமகிருஷ்ணர் காட்டினார். உருவ வழிபாடோ அல்லது அருவ வழிபாடோ, பக்தி யோகமோ, கர்ம யோகமோ அல்லது ஞான யோகமோ எல்லாமே ஒரே இடத்தைச் சென்று சேர உதவும் பல்வேறு பாதைகள் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டார். ஆங்கிலப் படிப்பு படித்திருந்த நரேந்திரன், பெருமளவில் எதையும் படிக்காத, ஆனால் படிப்பதனால் மட்டுமே புலனாகாத உண்மையை அறிந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணரிடம் சரணடைந்தார். இல்லறத்தில் துறவறம் என்று வாழ்ந்த ராமகிருஷ்ணரின் பாதையில் செல்ல முடிவெடுத்த நரேந்திரர் துறவு பூண்டார். ஸ்வாமி விவேகானந்தர் என்ற யோகபட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
அனைத்தையும் துறந்து பாரத நாட்டை சுற்றிவரும் பரிவ்ராஜக சன்யாசிகளின் வரிசையில் ஒரு புதிய வரவாக ஸ்வாமிஜி நாடு முழுவதும் சுற்றிவந்தார். பாரத மக்களின் வறுமையும், அறியாமையும் அவரின் இதயத்தை தாக்கியது. அந்த நேரத்தில், மூடநம்பிக்கைகளின் பிடிகளிலும், பரவலான எழ்மை நிலைகளிலும் பாரத தேச மக்கள் கடின வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வும், அடிமைத்தனமும் பாரத மக்களின் ரத்த்த்தோடு கலந்தவைகளாகவே தோற்றமளித்தன. மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் அனேகர் வெளி நாட்டுச் சரக்கு எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதித்தார்கள். நாட்டுப் பற்று கொண்ட தலைவர்களைக் காணமுடியவில்லை.
எல்லாம் விதிப்படி நடக்கும் என்று கூறிச் செல்லும் திண்னை வேதாந்தி அல்ல ஸ்வாமிஜி. ஊழையும் உட்பக்கம் காணலாம் என்ற செயல்வீரர் அவர். பாரத தரிசனம் ஸ்வாமிக்கு அவரின் வாழ்வின் குறிக்கோளை உணரவைத்தது. சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார்.
அமெரிக்காவில் நடைபெற இருந்த சர்வ சமய மகாநாட்டில் கலந்துகொள்ள அன்றய ராமநாதபுரம் அரசர் சேதுபதி ஸ்வாமியை கேட்டுக் கொண்டார். ஸ்வாமிஜி அமெரிக்காவிற்கு பயணப்பட்டார். சிகாகோ நகரில் ” எனது அமெரிக்க சகோதர சகோதரிகளே” என்று தொடங்கிய அவரது பேச்சு உலக அரங்கில் பாரதத்தின் இடம் எது என்பதை ஐயம்திரிபுர நிலை நாட்டியது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிகெட்ட நாடல்ல பாரதம், அது உலகின் ஆன்மீக குரு என்பதை ஸ்வாமியின் அமெரிக்கப் பயணம் உறுதி செய்தது.
பாரதத்தின் ஆன்மீக ஞானத்தை உலகமெலாம் எடுத்துச் செல்லவும், பாரத நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கவும் என்று ராமகிருஷ்ணா மிஷன் என்ற நிறுவனத்தையும் ஸ்வாமி உருவாக்கினார். நாடெங்கிலும் பல்வேறு நலப்பணிகளை ராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் இன்று நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாரத மக்களின் உந்து சக்தியாக விளங்கியவர் ஸ்வாமிஜிதான். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஹெட்கேவார், மஹரிஷி அரவிந்தர், ஸ்வாமி ராமதீர்த்தர், ஸ்வாமி சின்மயானந்தா, சி வி ராமன், ஜாம்ஷெட்ஜி டாடா, நானாஜி தேஷ்முக் என்று பலரின் வாழ்வில் அவர்கள் வாழ்வின் குறிக்கோளை சுட்டிக் காட்டியவராகவும், அவர்களின் இலட்சியத்தை அடைய ஓயாது செயல்பட அவர்களைத் தூண்டியவராகவும் ஸ்வாமி விவேகானந்தர் விளங்குகிறார்.
எழுமின் விழுமின், எடுத்த செயல் நிறைவேறும் வரை துஞ்சாமல் உழைமின் என்ற உபநிடத வாக்கியத்தின் இலக்கணமாக வாழ்ந்து இன்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கும் ஸ்வாமி விவேகானந்தரின் பாத கமலங்களை வணங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு நமது வாழ்வை அர்பணிப்போம் என்று உறுதி கூறுவோம்.