இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

தொலைவில் ஓர் அபயக் குரல் – 1

அகதிகள் என்போர் பொதுவாய் தம் தாய்நாட்டில் நடைபெற்ற அல்லது நடைபெறும் இன ஒழிப்பு / மத ரீதியான அழிப்பு நடவடிக்கைகள் / போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு தமது அண்டைநாடுகளிலோ இல்லை அவர்களை ஆதரிக்கும் நாடுகளிலோ தஞ்சம் புகுவார்கள். அவர்கள் அங்கேயே தங்கள் வாழ்நாளைக் கழிக்கலாம் இல்லையேல் தாய்நாட்டில் நிலைமை சரியாகும் பொழுது திரும்பிச் செல்லலாம். இத்தகைய அகதிகள் பலரை நம் நாடு பார்த்துள்ளது. கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) இருந்து லட்சக்கணக்கில் நமது நாட்டிற்கு அகதிகள் வந்துள்ளனர். இலங்கையிலிருந்தும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாய் முகாமில் தங்கியுள்ளனர். உலகளவில் சிரியா அகதிகள் , ரோகின்யா அகதிகள் போன்றோரையும் நாம் பார்த்துள்ளோம் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களையும் நமது மீடியாக்கள் காட்டியுள்ளன.

ஆனால் சொந்த நாட்டிலேயே தங்களது வீடுகள், வியாபாரங்களை விட்டுவிட்டு அகதிகளாய் வேறு மாநிலங்களுக்குச் சென்றவர்களைப் பற்றி நமது மீடியாக்கள் பேசி உள்ளனரா ? தங்களது இனத்தை அழிக்க முயன்றவர்களிடம் இருந்து தப்பி அண்டை மாநிலத்திற்குச் சென்று அங்கே அகதிகள் முகாமில் வாழும் பழங்குடியினரைப் பற்றி எந்தச் செய்தித்தாளாவது சிறப்புக் கட்டுரை வெளியிட்டார்களா ? முதலாவது காஷ்மீர் பண்டிட் . 90ல் இதே போன்ற ஜனவரி மாதத்து இரவில் துவங்கிய ரத்தக் களரியில் (இன ஒழிப்பில் ) தாம் பிழைத்தால் போதும் என தங்கள் மனைவி, குழந்தைகளுடன் தப்பித்துச் சென்றனர். அப்பொழுது பெண்களுக்கு மட்டும் விலக்கு அளித்தனர் அங்கிருந்த இஸ்லாம் தீவிரவாதிகள். எதற்கு என்று நாம் சொல்ல வேண்டுமா ??

Shelters Where BRU refugees are housed in Tripura Now. PC: Indian Express

இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டது மிசோராமில் இருந்த ப்ரூ பழங்குடியினர். இவர்களை அழிக்க முனைந்தது கிறித்துவ இயக்கமான YMA ( Young Mizo Association). காரணம் ப்ரூ பழங்குடியினர் இந்துக்கள். ஹிந்து கடவுள்களை வழிபடுபவர்கள். எங்கேயெல்லாம் ஹிந்துக்கள் மைனாரிட்டி ஆகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் தாக்கப்படுவார்கள் தங்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் உறைய வைக்கும் மற்றொரு ஒற்றுமை. மாநில அரசும், அங்கிருந்த காவல்துறையினரும் இதைத் தடுக்கவில்லை. கலவரம் முடிந்தபின் கலவரக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தப்பிச் சென்று திரிபுராவில் தஞ்சம் புகுந்தவர்கள் பட்ட கஷ்டம் இதற்கும் மேல். எந்தவித வசதிகளும் இல்லாத முகாமில் நோயுடன் போராடினர் ப்ரூ அகதிகள். பிரச்சனை அதிகமானவுடனேதான் நடவடிக்கை எடுத்தார் அன்றைய திரிபுரா முதல்வரான திரு. மாணிக் சர்க்கார்.

ப்ரூ அகதிகளைப் பற்றிப் படிக்க இணையத்தில் தேடிய பொழுது சமீபத்திய ஒப்பந்தம் பற்றிய செய்திகள் கூடத் தமிழில் காணக் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் கூட ஆங்காங்கே தனித்தனியா செய்திகள் இருக்கிறதே தவிர ஒரு தொகுப்பாய் எங்கும் இல்லை. எனவேதான் இதைக் குறித்து தமிழில் எழுதலாம் என்று இந்தக் கட்டுரைத் தொடரைத் துவங்கியுள்ளேன்.

அடுத்த பகுதியில் ப்ரூ பழங்குடியினரைப் பற்றியும், கலவரத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் பார்ப்போம்.

தொடர்வோம்..

(Visited 139 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close