சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

அபய சாதகன் பாபா ஆம்தே நினைவு நாள் – பிப்ரவரி 9

மதமாற்றத்தில் ஈடுபடாமல், விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்பவர்கள் பற்றி பொதுவாகவே நமது பத்திரிகைகள் மக்களுக்குச் சொல்லாது. ஆனாலும் அதனையும் மீறி வெளிச்சத்திற்கு வந்த சமூகசேவகர் பாபா ஆம்தே அவர்களின் நினைவு நாள் இன்று.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா பகுதியைச் சார்ந்த ப்ராஹ்மண சமூகத்தின் தேவதாஸ் ஆம்தே, ஆங்கில அரசின் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். பரம்பரை பணக்காரரான தேவதாஸ் ஆம்தேவிற்கு முதல் மகனாகப் பிறந்தவர் முரளிதர் தேவதாஸ் பாபா ஆம்தே. 1914ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் இவர். பொதுவாக சந்யாசிகள் அல்லது முதியவர்களை பாபா என்று அழைப்பது வட இந்தியர்களின் பழக்கம். ஆனால் சிறுவயதிலேயே தங்கள் மகனை பாபா என்று இவரின் பெற்றோர்கள் அழைக்கத் தொடங்கி அதுவே இவரின் பெயராக மாறிவிட்டது.

கிட்டத்தட்ட சித்தார்த்தன் புத்தனாக மாறிய கதைதான் பாபா ஆம்தேவின் கதையும். சிறுவயதிலேயே தனக்கான காரின் இருக்கையில் சிறுத்தையின் தோலால் தயாரான உறையை மாட்டிக்கொண்டு சொந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேட்டையாடுவதில் காலம் கழித்துக்கொண்டு இருந்த முரளிதர் நாட்டின் முக்கியமான சமூகசேவகராக மாறியது மிகப் பெரும் அதிசயம்தான். செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மக்களிடையே நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு அவரின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருந்தது.

காலனிய சக்தியான ஆங்கிலேய அரசிற்கு எதிராக விடுதலை போராட்டம் சூடு பிடித்திருந்த காலகட்டத்தில் முரளிதரும் அன்றைய வேறு பல இளைஞர்களைப் போல், ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க வன்முறை வழியை நம்பியவர்களுக்கு அவசியமான ஆயுதங்களை சேகரிப்பது முக்கியம் என நம்பினார். 1935ஆம் ஆண்டு பலூசிஸ்தான் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, முரளிதர் சீரமைப்பு பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு க்வேட்டா சென்றார்.

பெரும்பாலான அன்றய இளைஞர்கள்போல ஆம்தேவும் சட்டம் பயின்றார், வார்தா நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். நாட்டு விடுதலைக்காக போராடி அதனால் ஆங்கில அரசால் கைதுசெய்யப்பட்ட விடுதலை வீரர்களுக்காக வாதாடத் தொடங்கினார். படிப்படியாக காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்தே காந்தி நிறுவிய சேவாகிராமத்தில் தங்கி கை ராட்டை சுற்றியும், கதர் துணியை நெய்தும் முழுமையான காந்தியவாதியாக மாறினார்.

ஆம்தே வரோரா நகராட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் அறைகூவலை ஏற்று நாளொன்றுக்கு நாற்பது கழிப்பறைகளை அவர் சுத்தம் செய்யத் தொடங்கினார். எந்தத் தொழிலும் இழிவானதல்ல என்பதைக் காட்ட கழிப்பறை சுத்தம் செய்வதை காந்தி முன்னெடுத்தார். அதனை காந்தியின் சீடர்கள் பலர் பின்தொடர்ந்தனர்.

அப்படியொருநாள் தலைகூடையில் கழிவுகளை சுமந்துகொண்டு சென்ற மழைநாளில், நீர்தேங்கிய குட்டைக்கு அருகில் கோர முகத்துடன், விரல்களற்ற, புழுக்கள் மண்டி வலியில் துடித்த நிர்வாண மனிதர் ஒருவரைக் கண்டார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. முரளிதர் அப்போதுதான் தொழு நோயாளியை முதன்முதலாக கண்டிருந்தார். அந்தக் காட்சியும், தனக்கும் நோய் பரவிவிடும் எனும் அச்சமும் அவரைப் பீடித்ததால் வீட்டிற்கு ஓடி வந்தார். அவர் மீது படிந்த அழுக்குகளை சுத்தப்படுத்திகொள்ள குளித்தார்.

ஆனாலும் மனதளவில் அந்த காட்சியின் உக்கிரத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. “ஒருகால் தானோ, தன் மனைவி, பிள்ளைகளோ இந்நோயால் பீடிக்கப்பட்டால் எங்கு போவது?” எனும் கேள்வி அவருள் எழும்பியது. “எங்கு அச்சமிருக்கிறதோ அங்கு அன்பு இருக்க இயலாது, எங்கு அன்பு இல்லையோ அங்கு கடவுளும் இருக்க இயலாது. நான் இந்த அச்சத்தைப் போக்கியாக வேண்டும்” என்று தன்னையே தேற்றிக் கொண்டார். நோய்மையின் தனிமையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை எப்படி அப்படியே விட்டுவர தன்னால் முடிந்தது என எண்ணி வெட்கினார்.

மீண்டும் அங்கு சென்று அந்த மனிதருக்கு உணவளித்து, அவருக்கு சிறு மூங்கில் குடிலமைத்துக் கொடுத்து பராமரித்தார். அவர் பெயர் துளசிராம், துளசிராம் பாபா ஆம்தேவின் பராமரிப்பில்தான் மரித்தார். ஆம், முரளிதரின் வாழ்க்கையையே மாற்றி, பாபா ஆம்தேவின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்துவிட்டே மரித்தார்.

‘நான் எதற்குமே அஞ்சியதில்லை. ஆங்கிலேய இளைஞர்களை எதிர்த்து, இந்தியப் பெண்ணின் மானம் காக்க சண்டையிட்டிருக்கிறேன். காந்திஜி என்னை ‘அபய சாதகன்’, அதாவது ‘அச்சமற்று சத்தியத்தை தேடுபவன்’ என்றே அழைப்பார். வரோராவின் தோட்டிகள், ‘கழிவறை சுத்தம் செய்திட முடியுமா?” என எங்களிடம் சவால்விட்டபோது, அதை ஏற்றுச் செய்தேன். குண்டர்களையும் கொள்ளைக்கார ஆங்கிலேயர்களையும் எதிர்த்து சண்டையிட்ட நானேதான் பிணம் போல் வாழ்ந்த துளசிராமைக் கண்டு அஞ்சி நடுங்கினேன். விரல்கள் இல்லை, துணிமணிகள் இல்லை, உடலெங்கும் புழுக்கள்.’

பாபா அவருடைய அச்சத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள முடிவெடுத்தார். அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால் அப்படி எதிர்கொள்வதன் வழியாகவே அவற்றை வென்று கடந்து செல்ல இயலும் என்பதை புரிந்துகொண்டார்.

காந்தி தன்னுடைய ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழுநோய் பராமரிப்பையும் முன்னிலைப்படுத்தினார். வரோராவிற்கு அருகில் தத்தபுரத்தில் தொழுநோய் மருத்துவமனையும் வசிப்பிடமும் நிர்மாணிக்கப்பட்டது. அங்கு ஒரு சிறு குடிசை கட்டிக்கொண்டு அவர்களுடைய வாழ்வை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினார் முரளிதர். பின்னர் 1948ல் வரோராவில் சிறிய ஒரு தொழு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மையத்தை துவக்கினார். ஆனால் தொழுநோய் பற்றி பூரண அறிதல் அதை எதிர்கொள்ள அத்தியாவசியம் என உணர்ந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து கல்கத்தாவில் ட்ராபிக்கல் நோய் மையத்தில் சேர்ந்து தொழுநோய் தொடர்பான ஓராண்டு மருத்துவ பயிற்சி படிப்பில் சேர்ந்து கல்வி கற்றுத் தேர்ந்தார். வராரோவைச் சுற்றி ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவு பரப்பில் பதினோரு தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். நான்காயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1950 ஆம் ஆண்டு மகாரோக சேவா சமிதி என்றொரு அமைப்பை தொழுநோயாளிகளின் பராமரிப்பிற்காக ஏற்படுத்தினார். அவர்கள் குணமாகி, சமூகத்திற்கு பயனுள்ள, தற்சார்புடைய வாழ்வு வாழ அனைவரும் இணைந்து வசிப்பதற்குரிய இருப்பிடம் தேவை என உணர்ந்துகொண்டார். பொருளியல் தற்சார்பு வழியாகத்தான் ஒருவன் பூரணமாக நோயிலிருந்து விடுபட்டு மீண்டெழ முடியும் என்று அவர் கருதினார். “விரல்கள் இன்றிக்கூட மனிதன் வாழ்ந்துவிட முடியும், ஆனால் சுயமரியாதையின்றி வாழ முடியாது”.

1951ஆம் ஆண்டில் சந்திரபூர் வனப்பகுதியில் சிறிது நிலத்தை அரசாங்கம் அவருக்கு வழங்கியது. மனைவி மற்றும் இரு கைக்குழந்தைகளுடன். பையிலிருந்த பதினான்கு ரூபாயுடன் ஆறு தொழுநோயாளிகளை அழைத்துக் கொண்டு கொடிய வனப்பகுதி நிலத்தைத் திருத்தி குடியேறினார். மூங்கில் கழிகளைக் கொண்டு சிறு குடில்களமைத்துக் கொண்டார், கிணறு வெட்டினார், அங்கேயே வசிக்கத் துவங்கினார். அப்படித்தான் ‘ஆனந்தவனம்’ உருவானது. வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே ஆம்தேயின் கருத்தாக இருந்தது. தொழுநோயாளிகள் வாழ்வில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் துளிர்க்கச் செய்வதே தன் வாழ்நாள் பணியென உறுதிகொண்டிருந்தார் அவர்.

மிகச் சிறிய மருத்துவ மையமாகத் தொடங்கப்பட்டு இன்றொரு பிரம்மாண்டமான மருத்துவமனையாக வளர்ந்து உருமாறி இருக்கிறது ஆனந்தவன். நாளொன்றிற்கு ஐநூறு புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள், ஆயிரத்து ஐநூறு உள் நோயாளிகள் தங்குவதற்கான இட வசதிகள் உண்டு. தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உண்டு.

1967 ஆம் ஆண்டு ஆனந்தவனத்தில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோம்நாத்தில் மற்றுமொரு தொழுநோய் மையத்தை நிறுவ யத்தனித்தார் ஆம்தே. அங்கும் தொழுநோயாளிகளின் கூட்டு முயற்சியில் மருத்துவமனை உருவானது.

பாபா ஆம்தேவுடன் அவரது மனைவி, மகன்கள் மருமகள்கள் என்று மொத்த குடும்பமே தங்களை சேவைக்கு அர்பணித்துக்கொண்டு உள்ளனர். அவரது இரண்டு மகன்களும் இரு மருமகள்களும் மருத்துவம் படித்தவர்கள். இன்று அவரின் இரண்டு பேரன்களும் மருத்துவம் படித்துவிட்டு ஆனந்தவனத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

தன்னலம் கருதாது உழைத்தாலும், தகுதியானவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் வரத்தான் செய்யும். பாபா ஆம்தேவை நோக்கி பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், மாகஸே விருது, காந்தி அமைதிப் பரிசு ஆகியவை தேடி வந்தன.

அபய சாதகன் அதாவது பயமே இல்லாது சேவை புரிபவன் என்று காந்தியால் பாராட்டப்பட்ட பாபா ஆம்தே தனது தொண்ணூற்றி மூன்றாம் வயதில் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் காலமானார்.

நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உழைப்பதே இதுபோன்ற மகத்தான மனிதர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதின் பயனாக இருக்கும்.

(Visited 50 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close