சிறப்புக் கட்டுரைகள்வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று – ஜனவரி 15
மாயாவதி பிரபுதாஸ் என்றும் பெஹன்ஜி என்றும் அறியப்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 1956 ஜனவரி 15ஆம் நாள் புது தில்லியில் உள்ள கௌதம புத்த நகரில் பிறந்தார். இவரது குடும்பம் ஜாதவ் (சமர்) வகுப்பைச் சேர்ந்தது. ஜாதவ், ஜதன், ஜதுவா என்ற பெயர்களிலும் இந்த வகுப்பினர் அறியப்படுவர். இவரது தந்தை பிரபுதாஸ் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அரசுப் பள்ளியில் கல்வி கற்பிக்கப்பட்டது. பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் காளிந்தி கல்லூரியில் சேர்ந்து 1975ல் பிஏ பட்டம் பெற்றார். பிறகு மீரட் பல்கலைக்கழகத்தின் விஎம்எல்ஜி கல்லூரியில் பிஎட் பட்டம் பெற்றார்.
தில்லி இந்தபுரி பகுதியில் ஒரு பள்ளியில் ஆசிரியை வேலை செய்தபடி ஐஏஎஸ் தேர்வுக்குத் தயார் செய்து வந்தார். அப்போது 1977ல் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்காகப் போரடிவந்த கான்ஷிராம் இவரது வீட்டுக்கு வந்திருந்தார். அவர் மாயாவதியிடம் “உன் திறமைக்கு ஒரு ஐஏஎஸ் அல்ல நூற்றுக்கணக்கான ஐஏஎஸ் அதிகாரிகள் உன் உத்தரவுக்கு காத்திருக்கும் அளவுக்கு உயரலாம்” என்றார். சிறிது காலம் ஆசிரியை வேலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தார். 1983ல் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞர் ஆனார்.
1984ல் பகுஜன் சமாஜ் கட்சியை கான்ஷிராம் தொடங்கிய போது மாயாவதியை தனக்கு அடுத்த கட்ட அணியில் ஒருவராக சேர்த்துக் கொண்டார். அப்போதில் இருந்து மாயாவதி அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்தார். உயர் சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியில் நலிந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாயாவதியின் அரசியல் வாழ்வு முன்னாள் பிரதமர் நரசிம்மராவால் ஜனநாயகத்தின் அதிசயம் என்று குறிப்பிடப்பட்டது. 1989ல் மாயாவதி பிஜ்னோர் தொகுதியில் இருந்து உத்திரப்பிரதேச சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் 1984ல் கைரனா, 1985ல் பிஜ்னோர், 1987ல் ஹரித்வார் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனால் இந்தத் தோல்விகளில் இருந்து தேர்தல் போட்டிகள் ஜாதிக்கட்டுப்பாடுகள், ஓட்டுப் பிரியும் விவரங்களைக் கற்றுக் கொண்டு 1989ல் வென்றார்.
1993ல் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி கண்டு தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. முலாயம் சிங் முதல்வர் ஆனார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் மாயாவதியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளில் 1995ல் ஆட்சி கவிழும் நிலை வந்தது. சமாஜ்வாதி, காங்கிரஸ் தொண்டர்கள் மாயாவதியை அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் புகுந்து தாக்கினர்.
பாரதீய ஜனதா தலைவர் பிரம் தத் த்விவேதி என்பவர் தன் சட்டையைக் கழற்றித் தந்து தன் கட்சித் தொண்டர்களின் பாதுகாப்புடன் மாயவதியை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். 1995ல் மாயாவதி பாஜக ஆதரவுடன் உபி முதல்வர் ஆனார். ஆனால் ஐந்தே மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன் பிறகு 1997ல் மீண்டும் முதல்வர் ஆனார். அப்போது தான் பிறந்த ஊரான கௌதம புத்த நகரின் பெயரில் உத்திரப் பிரதேசத்தில் ஒரு மாவட்டத்தை உருவாக்கினார். மேலும் கௌசாம்பி மாவட்டம், ஜோதிபாய் புலே மாவட்டம் என்று சில புதிய மாவட்டங்களை உருவாக்கினார். தன் பெயரை ஒட்டி மஹாமாயா நகர் மாவட்டம் என்று உருவாக்கியது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. பணிகளை சரியாகச் செய்யவில்லை என்று 127 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து இவர் உத்தரவிட்டார். ஏழு மாதங்களில் அரசியல் காரணங்களால் இவரது ஆட்சி கவிழ்ந்தது.
சில காலம் எதிர்க்கட்சியாகப் பணியாற்றி, மீண்டும் 2002ல் உபி முதல்வரானார். 16 மாதங்கள் நீடித்த ஆட்சியில் சத்திரபதி ஷாகுஜி மஹாராஜ் மருத்துவக்கல்லூரி ஒன்று தொடங்கினார். கௌதம புத்தர் பல்கலைக்கழகம் ஒன்று 500 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. மூன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், 12 மாவட்ட நிர்வாக அதிகாரிகள், நீதித்துறை நடுவர்கள், ஆறு காவல்துறை அதிகாரிகள், மேலும் 24 மாநில நிர்வாக அதிகாரிகள் ஆகியோரை பணிகளில் சுணக்கம் காட்டியதற்காக பணியிடை நீக்கம் செய்து அதிரடி காட்டினார். இவரது அதிரடிகள் பல திட்டங்களுக்கு நிதிஉதவி செய்த உலகவங்கியால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு கண்டிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு ஒரு பணியிடமாற்றம் என்பது நிர்வாகத் திறன் அல்ல, வெற்று அதிரடி என்று இவரது செயல்பாடு விமர்சிக்கப்பட்டது.
தாஜ்கஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தி சுற்றுலா வளர்ச்சிக்காக இவர் தொடங்கிய தாஜ் ஹெரிடேஜ் திட்டம் பல சிக்கல்களையும் நிதி நிர்வாகத்தில் பின்னடைவுகளையும், ஊழல் புகார்களையும் சந்தித்தது. மத்திய புலனாய்வுத்துறை இவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை செய்து இவர் மேலும் இன்னும் ஏழு பேர் மேலும் குற்றம் சுமத்தியது. மாயாவதி ராஜினாமா செய்தார்.
முலாயம் சிங் யாதவ் மீண்டும் முதல்வரானார். 2007ல் இவரது கட்சி புதுமையான கோஷத்துடன் களமிறங்கியது. இவரது கட்சிச் சின்னம் யானை. அதையே “ஆனையல்ல விநாயகர், இவர் பிரம்மா விஷ்ணு மகேசர்” என்று இந்துத்வ கோஷத்தை முன்வைத்து பல்வேறு சாதிக்காரர்களையும் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டு களம் கண்டார். அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.
உத்தரப் பிரதேசத்தை உத்தமப் பிரதேசம் ஆக்குவேன் என்று சூளுரைத்து ஆட்சியைத் தொடங்கினார். முந்தைய முலாயம் சிங் அரசு செய்த ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். 18000 காவலர்கள் பணிநியமனம் ரத்து செய்யப்பட்டது. 25 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இணையம் மூலம் காவலர் தேர்வு செய்து வெளிப்படையாக நியமிக்கும் முறையை செயல்படுத்தினார். தனியார் நிறுவனங்களில் பின் தங்கிய சாதியினருக்கு 30% இட ஒதுக்கீடு உண்டு என்று சட்டம் இயற்றினார். உச்சநீதிமன்றம் இதை ரத்து செய்தது.
பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்த போதும் அதில் தன் கட்சியை முன்னிறுத்தினார். உத்தரப் பிரதேசம் எங்கும் அரசுப் பூங்காக்களில் அரசுச் செலவில் பகுஜன் சமாஜ் கட்சிச் சின்னமான யானைக்குச் சிலைகள் வைக்கப்பட்டன. 2007ல் 26 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தினார். இவரது வருமானத்தின் பெரும்பகுதி அன்பளிப்பு என்றே கணக்குக் காட்டப்பட்டது. கட்சித் தொண்டர்கள் ரூபாய் நோட்டுகளால் மாலை செய்து மாயாவதிக்கு அணிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்காக வசூல் வேட்டைகள் நடத்தப்பட்டு பொதுமக்கள், வியாபாரிகளிடம் கட்சியின் பெயர் கெட்டுப் போனது.
ஊரக, கிராமப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சாதியினருக்கு குடும்பத்துக்கு 3 ஏக்கரா நிலம் வழங்குதல், முஸ்லிம் மாணவிகளுக்கு 10 லட்சம் இலவச சைக்கிள் என்று அள்ளிவிட்டு 2009 பாராளுமன்றத் தேர்தலில் 20 இடங்களில் கட்சி வெல்லக் காரணமாக இருந்தார். வெற்றிக்கு பாராட்டினாலும், இலவசங்கள் குறைகூறப்பட்டன.
ஆனால் 2011ல் நாட்டின் முதல் எஃப் 1 கார் பந்தய களம் இவரது ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2010ல் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலுடன் ஒப்பிட்டு இவரது நிர்வாகத்திறமைக்கு இதைச் சான்றாக பலரும் பாராட்டினர். யமுனா விரைவுச் சாலை இவரது ஆட்சிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. நொய்டா மெட்ரோ இவரது ஆட்சியில் கட்டப்பட்டது.
2011ல் உத்தரப் பிரதேச மாநிலத்தை நான்காகப் பிரிக்க இவரது மந்திரிசபை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசு பிரிக்க ஒப்புக்கொள்ளவில்லை. 2012 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. மாயாவதி ராஜினாமா செய்தார். உடனடியாக ராஜ்யசபைக்கு போட்டியிட்டு எம்பி ஆனார்.
இவர் பற்றி ஆங்கிலத்திலும் இந்தியிலும் புத்தகங்கள் எழுதப்பட்டன. இரும்புப் பெண் மாயாவதி என்று ஜமில் முகமது அக்தர் என்பவர் முதன் முதலில் புத்தகம் எழுதினார். பின்னர் மாயாவதி என் வாழ்வின் போராட்டப் பாதையும் வெகுஜன இயக்கமும் என்று இந்தியில் சுயசரிதை எழுதினார். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
2017 வரை எம்பியாக இருந்த மாயாவதி அந்த ஆண்டு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். உபியில் கட்சியை வளர்க்கப் பாடுபட்டார். தற்போது 2019 பாரளுமன்றத் தேர்தலில் தனது பரம எதிரியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்டு பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார்.
(Visited 52 times, 1 visits today)