சினிமா
Trending

The Wedding Guest – NRCன் அவசியத்தை உணர்த்தும் திரைப்படம்

ஜெய் தீபேஷ் என்று இரு நபர்கள். இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். இதில் தீபேஷ் பெரும் பணக்காரன். ஜெய் பணம் அதிகமில்லாத வர்க்கம். ஜெய் ஒரு நாள் கிளம்பி பாகிஸ்தான் போகிறான். பெயர் மாற்றி பாஸ்போர்ட் மாற்றி பக்காத் திருடன் போல. லாகூர் போய் இறங்கி ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகிறான். அர்வான் என்ற பெயரில் ஆவணங்கள் கொடுக்கிறான். ஊரைச் சுற்றிக் கொண்டு டர்ரா ஆடம் கேல் என்ற ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் ஊருக்குப் போய் 4-5 நாட்களுக்கு உடைகள் வைக்க பெட்டி, டக்ட் டேப், துப்பாக்கி எல்லாம் வாங்கிக் கொள்கிறான். அங்கிருந்து ஃபய்சலாபாத் போய் வேறு வண்டி மாற்றிக் கொள்கிறான். அங்கே வண்டிக்கு ஆவணத்தை மாலிக் என்ற பெயரில் தருகிறான். 

அங்கிருந்து யங்கணபாத் என்ற ஊருக்குப் போய் இறங்கி பெரிய வீட்டுக் கல்யாணத்தில் கலந்து கொள்ள லண்டனில் இருந்து வந்துள்ளேன் என்கிறான். கல்யாணப் பெண் சமீராவின் அண்ணனின் நண்பன் என்று சொல்கிறான். வரவேற்று தங்க வைக்கிறார்கள். ஊரை நன்றாக சுற்றிப் பார்க்கிறான். மறுநாள் கல்யாணப் பெண்ணும் குடும்பமும் வருகிறார்கள். அன்றிரவு வீட்டுக்குள் போய் கல்யாணப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போகிறான். வீட்டுக் காவலாளி தடுக்கிறார். சுட்டுக் கொன்றுவிட்டு பெண்ணோடு தப்புகிறான். 

ஃபய்சலாபாத் வந்து முந்தைய வண்டிக்கு மாற்றி பாதி தூரம் போனதும் அவளிடம் “உனக்கு வீட்டில் செய்து வைக்கும் திருமணத்தில் இஷ்டமா? அல்லது தீபேஷுடன் போகிறாயா?” என்று கேட்கிறான். அவளுக்கு அப்போதுதான் புரிகிறது தன காதலன் அனுப்பிய ஆள் இவன் என்று. திபேஷுடன் போகிறேன் என்கிறாள். லாகூர் விமான நிலையத்தில் காரை விட்டுவிட்டு இந்திய எல்லைக்கு வருகிறார்கள்.

புதிய (போலி) பாஸ்போர்ட்டில் இருவரும் எல்லை கடக்கிறார்கள். அமிர்தசரஸ் பொற்கோவில் பார்க்க என்று அங்கே வந்து தீபேஷ் வர காத்திருக்கிறார்கள். அவன் வரவில்லை.  போன் செய்தால் எடுப்பதும் இல்லை. 2000 ரூபாய்க்கு 5 போன்கள் வாங்கி நம்பர் மாற்றி மாற்றி அழைத்துப் பேசுகிறான் ஜெய். ஒரு அழைப்பை எடுத்த தீபேஷ் மறுநாள் தில்லி வருகிறேன், சிந்திப்போம் என்கிறான். தில்லி போகிறார்கள். அங்கே ஒரு டீக்கடைக்கு  திபேஷ் வருகிறான். ஜெய்யும் தீபேஷும் பேசுகிறார்கள். பேசிய பணம் 10000 பவுண்டுகள் தருகிறான் தீபேஷ்.  5000 அப் பிராண்ட் தவிர.

சமீராவை சந்திக்க இடம் சொல்கிறேன் என்கிறான் ஜெய். தீபேஷ் மறுக்கிறான். நீ ஒரு ஆளைக் கொன்றுவிட்டாய், போலீஸ் தேடுகிறது. விரைவில் அவளைப் பிடித்துவிடுவார்கள். நான் மாட்டிக்கொள்வேன் என்கிறான். சமீராவை பாகிஸ்தானில் கொண்டு போய் எங்காவது விட்டுவிடு, 20000 பவுண்டுகள் தருகிறேன் என்கிறான். 
சமீரா தீபேஷை பார்க்காமல் முடிவெடுக்க மாட்டேன் என்கிறாள். இருவரும் ஜெய்ப்பூர் போகிறார்கள். தீபேஷை அங்கே வரச் சொல்கிறார்கள். ஜெய்ப்பூரில் ஜெய்க்கு 10000 பவுண்டுகள் கொடுத்து எப்படியாவது அவளை பாகிஸ்தான் கொண்டு போய்விட்டுவிடு என்கிறான் தீபேஷ்.

PC: peepinmoon.com

அங்கே சமீராவுக்கு வேறொரு இந்திய ஐடி கார்டும் பாஸ்போர்ட்டும் வாங்கிக் கொள்கிறார்கள். போலிகள் தயாரிக்கும் நிதின் என்பவன் எந்த நாட்டுக்கும் போக விசாவும் தயாரித்துத் தருகிறான். பெரும் பணக்காரர்கள் சுற்றுலா வந்தால் தங்கும் ஓட்டல் ஒன்று கேட்கிறான் ஜெய். நிதின் சொல்லும் அந்த ஓட்டலில் சந்திக்க ஏற்பாடாகிறது. போகும் வழியில் ஜெய் மீதிப்பணத்தை பெற்றுக் கொள்கிறான். 
சமீராவுக்கும் தீபேஷுக்கும் சண்டை ஆரம்பிக்கிறது.

அவன் சமீராவை அடிக்கப் போக ஜெய் அவனை காரை விட்டு வெளியே அழைத்து பேசுகிறான். ஒரு கட்டத்தில் தீபேஷ் ஜெய்யை அடிக்க சிறு பாறாங்கல் ஒன்றை எடுக்கிறான். ஜெய் அதை பிடுங்கி தீபேஷை அடித்துக் கொன்றுவிடுகிறான். அவன் உடலை அங்கே யாருமற்ற பாலைவனத்தில் எரித்துவிட்டு ஜெய்யும் சமீராவும் பேருந்தில் லக்னோ போய் அங்கிருந்து கோவா போகிறார்கள்.

சமீரா ஜெய்யிடம் இருந்து எடுத்த வைரக் கற்களை விற்க முயலும் போது அதன் விலை 80 லட்சம், வாங்க ஆள் வரும் போது சொல்கிறேன் என்கிறார் அந்த நகை வியாபாரி. லண்டனில் விற்றுக் கொள்கிறோம் என்று கிளம்புகிறார்கள். கோவா போய் அங்கே கணவன் மனைவி என்று சொல்லி வீடு எடுத்துத் தங்குகிறார்கள்.

ஒரு வாரம் இருவரும் கணவன் மனைவியாக அங்கே வாழ்கிறார்கள். பிறகு ஜெய் தூங்கும் போது அவனுடைய பணத்தில் 5000 பவுண்டுகள் எடுத்துக் கொண்டு சமீரா கிளம்பிவிடுகிறாள். ஜெய் வீடு, கடற்கரை என்று தேடி சலித்துப் போனில் அழைக்கிறான். இந்தியாவில் அவ்வளவு தீவிரமாகத் தேடமாட்டார்கள். எங்காவது வேலை செய்து பிழைத்துக் கொள்வேன் என்கிறாள் சமீரா. அவள் பேருந்தில் போக, ஜெய் கண்ணீருடன் வீட்டில் இருக்க படம் முடிகிறது.



குறைந்த ஆட்களை வைத்துக் கொண்டு கதையை தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் விண்டர்பாட்டம். 

முதல் அரை மணி நேரம் கொஞ்சம் போரடித்தாலும் சமீரா கடத்தப்பட்ட பிறகு சற்றே சூடு பிடிக்கிறது. படத்தில் ஓட்டைகள் ஆங்காங்கே உள்ளன. லண்டனில் பெரிய வியாபாரம் செய்யும், உள்ளூரில் செல்வாக்கு மிக்க வசதிக்கார குடும்பத்துப் பெண்ணை ஒருவன் கடத்தி இந்தியா கொண்டு வரும் வரை பாக் போலீஸ் வேடிக்கை பார்த்தது என்பது நம்பமுடியாத நிகழ்வு. 

இந்தியாவில் நுழையும் எல்லைப்புற அலுவலகத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக் கொண்டு பாஸ்போர்ட் எண்ணும் பெயரும் எழுதிக் கொள்கிறார்கள், வேறேதும் சரிபார்க்கும் முறைகள் இல்லை என்பது நரசிம்மராவ் காலத்து இந்தியா. ராவ் காலத்திலேயே கம்பியூட்டர் வைத்து என்ட்ரி போட்டு விவரம் சரிபார்க்கும் வழக்கம் வந்துவிட்டது.

பாகிஸ்தானில் துப்பாக்கி வாங்க உள்ள இடங்களை அப்பட்டமாகக் காட்டியுள்ளனர். ரக ரகமாக துப்பாக்கிகளை பலசரக்கு கடை போல காட்சிக்கு வைத்து விற்கிறார்கள். டர்ரா ஆடம் கேல் என்ற வரப்பட்டிக்காட்டு ஊரில் அத்தனை ஆயுதங்கள் கிடைக்கிறது. விற்பவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். லண்டன் துரை என்று ஜெய் எது கேட்டாலும் செய்கிறார்கள்.

அர்வான், மாலிக், அக்ரம், பைசல் என்று பல பெயர்களில் பாஸ்போர்டுகளுடன் ஒருவன் எப்படி லண்டனில் இருந்து வந்தான்? லக்கேஜ் ஸ்கெனிங்கில் காட்டிக் கொடுக்காதா? இந்தியாவில் இறந்து போன ஒரு பெண்ணின் பெயரில் போலி ஐடியும் போலி பாஸ்போர்டும் சமீராவுக்கு எடுக்கிறார்கள். ஏஜென்ட் சொல்கிறான் இது போலீஸ் செக்கிங், ஹோட்டல் என்று சமாளிக்க உதவும். எல்லை தாண்ட இரவில் கொஞ்சம் காசு கொடுத்து போகவேண்டும்.

ராஜஸ்தானில் ஒரு கொலை செய்து உடலை பாலைவனத்தில் எரித்துவிட்டு பென்ஸ் காரில் தப்பி வருகிறார்கள். பெட்ரோல், மம்பட்டி, ஆளுயர பிளாஸ்டிக் பை என்று ஜெய் வாங்கும் போது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஏனோ!

கோவாவில் சமீரா சொல்கிறாள் நான் பார்மசி படித்துள்ளேன். வேலைக்குப் பிரச்சனை இல்லை. லண்டனின் பல்கையில் கொடுத்த சான்றிதழை வைத்து இந்தியாவில் வேலை, அனால் இந்திய பாஸ்போர்ட், பெயர் வேறு. எப்படி வேலை கிடைக்கும்? தனியார் என்றால் கிடைக்குமோ?

படத்துக்கு Transparency International அமைப்பிடம் சான்று பெற்றார்களா தெரியவில்லை. சமீராவாக வரும் ராதிகா ஆப்டே ட்ரான்ஸ்பரண்ட் ஆக உடை அணிந்து படமெங்கும் வருபவர் கடைசிக்கு கொஞ்சம் முந்தைய காட்சியில் திறந்துவிட்டு மூட மறந்த புத்தகமாகவே கிடக்கிறார். 

இந்த ஆதார் இணைப்பு, NRC இவை எவ்வளவு முக்கியம் என்பது இதில் வெளிப்படுகிறது. இது போல எத்தனை பாகிஸ்தானிகள் வெளியே சொல்ல முடியாத பின்புலத்துடன் உள்ளே இருக்கிறார்களோ? அவர்களைத் தெரிந்து கொண்டு மிரட்டி என்னென்ன வேலைகள் யாரார் செய்கிறார்களோ? இதெல்லாம் பார்க்க கவலை தருகிறது. இதை இன்றைய அயல்நாட்டு ஆட்கள் தனியார் இடங்களில் இருந்து கொத்துக் கொத்தாக வெளிவரும் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

நம் நாட்டு ஜனத்தொகை 130 கோடி தானா என்பது கேள்விக்குறி என்கிறது படமும். இதற்கு அவார்ட் என்று ஏதும் வரவில்லை. ராட்டன் டொமேடோ 5.6/10 கொடுத்துள்ளனர். அவ்வளவே. குடும்பம் இல்லாது பார்க்கவேண்டிய படம். குடும்பத்துடன் பார்த்தால் கிளைமேக்சில் குடுமிப்பிடி தான்.

(Visited 74 times, 1 visits today)
Tags

One Comment

  1. சுவாரஸ்யமான கதைதான். ராதிகா ஆப்தே வெளிப்படையான நடிப்புக்கு பெயர் போனவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close