இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடு

இந்தியாவிற்கு 2வது முழு ஊரடங்கு நீட்டிப்பு அவசியமானதா? பகுதி ஊரடங்கு மட்டும் போதுமென்பது சரியானதா ?

முதலில் 21 நாட்கள் ஊரடங்கை மற்றவர்கள் போலவே வரவேற்கிறேன். இப்போது ஊரடங்கு முற்றிலும் விலக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லப் போவதில்லை.
ஆனால் இதை partial Lock down ஆக்குவதற்கான ஏற்பாடுகளுடன் தான் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்பது எனது பார்வை. ஆகையால் இதை நான்கு  விஷயங்களாக பிரித்துச் சொல்கிறேன். 
1. ஊரடங்கு எதற்கு தேவை?
2. ஊரடங்கு எதற்கு தேவையில்லை?
3. அரசின் செயல்பாட்டில் உள்ள குறைகள் அல்லது மறைக்கும் தன்மைகள்?
4. பொருளாதார சிக்கல்களும் அன்றாடங்காய்ச்சிகளின் நிலையும் ?
  1. ஊரடங்கு எதற்கு தேவை? 

1. ஏப்ரல் 30 வரை ரயில்களையும் விமானங்களையும் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

2. பள்ளிகள் கல்லூரிகளைத் திறக்க வேண்டியதில்லை.

3. ஊரடங்கு உத்தவரவு விஷயத்தில் மாநிலங்களைப் பொறுத்தவரை மாநில அரசுகளே முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகள் எந்தப் பகுதிக்கு ஊரடங்கு தேவை, எங்கு தேவையில்லை என்பதை நோயின் பரவலாக்கத்தைப் பொறுத்து ஊரடங்கை விலக்கலாம்.4. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட வேண்டும். 

5. பொது மக்கள் ஒன்றாகக் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள் சர்ச்சுகள், அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள், திருமண மண்டப நிகழ்ச்சிகள், சினிமா கூடங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் மால்கள்  ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும்.
6. பொதுப் போக்குவரத்தை மாநில அரசு ஏப்ரல் 30 வரை  இயக்கக் கூடாது. அதற்கான தடை அப்படியே இருக்க வேண்டும்.
7. IT, Design related Jobs, Project management related Jobs, Accounting போன்ற அலுவலகத்தில் மட்டுமே இயக்கப்படும் வேலைகளுக்கு மட்டும் நிறுவனங்களே Work from home கொடுக்க வைக்கலாம். அதை அரசில் எந்தப் பிரிவின் கீழ் கம்பெனி பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதன் கீழ் பிரிக்க இயலும். அவர்களுக்குத் தடை விதிக்கலாம். இது சவுதியில் தற்போது நடைமுறையில் உள்ளது.
இதுபோக சில விடுபட்டிருக்கலாம். அது யோசனையில் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
  2. ஊரடங்கு எதற்கு தேவையில்லை? 
1. அனைத்து முழு நேரத் தொழிற்சாலைகளையும், தனியார் நிறுவனங்களையும்  இயக்க அனுமதிக்க வேண்டும்.  அதில் குறிப்பாக சேவைத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் இயக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனங்களே தனியார் வாகனங்கள் அமர்த்தி பணியாளர்களை வேலை வாங்கச் செய்யலாம். ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், உதாரணமாக தற்போது பைக்கில் இருவர் சென்றால் பைக்கை காவல்துறை முடக்குகிறது. மேலும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதைப் போல ஆட்டோ என்றால் ஒருவர், வேன் என்றால் ஐந்து பேர் (பத்து பேர் இருக்கலாம் என்றால் அதில் பாதி) இப்படியாக அனுமதிக்கலாம். இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் அந்த நிறுவனத்திற்கும் , வாகன ஓட்டிக்கும் அபராதம் விதிக்கலாம்.

2. விவசாயம் முழு அளவில் நடக்க அனுமதிக்க வேண்டும்.
3. அனைத்து கடைகளையும், காய்கறி சந்தைகளையும்  24*7 நடத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட பணி நேரம் எனும் போது தான் அதிக அளவில் கூட்டம் கூடும் . இதையே 24*7 என்று கொண்டு வந்தால் கூட்டம் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க இயலும். இதனால் சிலருக்கு தங்கள் வேலைக்குச் செல்ல முடியாதவர்கள், இது போன்ற பணிகளில் பகுதி நேர தொழிலாளியாக தற்போதைக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
4.சேவைத் துறைகள் சார்ந்த பணிகள், சைட் ரிலேட்டட் பணிகள் நடக்கும் இடங்களில் முறையாக ஸ்க்ரீனிங்  செய்ய வைத்து நடத்த அனுமதிக்கலாம்.
5. மாநில அரசு எந்தப் பகுதிகளில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளார்களோ அங்கு மட்டும் தடை விதிக்கலாம். குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம். அல்லது தடை இருக்கலாம். கிராமங்கள், பாதிக்கப்படாத ஊர்களுக்குத் தடையை விலக்க வேண்டும். மேலும் பெரு நகரங்களின் எல்லைகளில் முழு பாதுகாப்பு வளையம் போடப் பட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களை விட்டு  மக்கள் எங்கும் வெளியே செல்லாதவாறு கொண்டு வர வேண்டும். ஆனால் அதிலும் கூட காவல்துறை அனுமதியோடு Emergency  நிலையில்  உள்ளவர்கள் மட்டும் பயணப்பட அனுமதிக்கலாம். சவுதியில் தற்போது இது அமலில் உள்ளது.
(இதிலும் எனக்குத் தோன்றியதை மட்டும் எழுதி உள்ளேன். வேறு யோசனைகளை வந்தால் சொல்கிறேன். அல்லது விவாதத்தின் போது யோசனைகள் வரலாம்.)

3. அரசின் செயல்பாட்டில் உள்ள குறைகள் அல்லது மறைக்கும் தன்மைகள்?
முதலில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து 21 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியதை வரவேற்கிறேன். அதற்கு தங்களால் ஆன சீரிய முயற்சிகளை அனைத்து மாநில அரசுகளும் எடுத்தன என்பதையும் பாராட்டுகிறேன். ஆகையால் சொல்லப்போகும் குறைகள் அனைத்தும் நாம் ஏன் இன்னும் 15 நாட்கள் இரண்டாவது முழு ஊரடங்கிற்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்கிற அடிப்படைக்கான காரணங்களை வைத்தே இதைச் சொல்கிறேன். ஆகையால் யாரும் வெறுமனே அரசைக் குறைத்துக் கூறுகிறான் என்று எண்ண வேண்டாம். 
1. மற்ற மாநில அரசுகளை அந்தளவுக்குக் கவனிக்காததால் , மற்ற மாநிலங்களைப் பற்றி என்னால் கருத்துச் சொல்ல முடியாது. ஆகையால் தமிழகத்தை மட்டும் அடிப்படையாக வைத்தும் பொதுவாக இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் வைத்து குறைபாடுகளை முன் வைக்கிறேன்.
2. மாநில அரசு இதுவரையிலும் சமூக பரவலே இல்லையென்று வாதிடுகிறது. அடுத்து பயணம் செய்தவர்களையும், அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி விட்டோம் என்றும் சொல்கிறது. அரசின் அறிக்கையிலிருந்து, அரசு சொல்ல வருவதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சமூக பரவல் இல்லை. அதற்கு இந்த ஊரடங்கு உதவி உள்ளது. இல்லையெனில் பல மடங்கு பெருகி இருக்கும் என்ற அரசின் வாதத்தில் நியாயம் உள்ளது. அரசின் செயல்பாட்டினால் சந்தேகத்திற்குரிய அனைவரையும் 28 நாட்கள் Incubation செய்யும் போது சமூக பரவலுக்கு சாத்தியமில்லை என்றாகிறது. அப்படி இருக்க அரசிற்கு ஏன் இன்னும் 14 நாட்கள் முழு ஊரடங்கு தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.
3. இந்தியாவில் இன்னமும் அதிக பேருக்கு டெஸ்ட் செய்யப்படவில்லை. அதனால் தான் அரசால் சமூக பரவலைத் தடுத்துவிட்டோம் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஏனெனில் அரசிடம் அந்த அளவிற்கு விரைவாக டெஸ்ட் செய்து கண்டுபிடித்துச் சொல்லும் கருவிகள் இல்லை. அதற்கு இந்தியா தயார் நிலையில் இல்லை. இரண்டாவதாக அரசு தேவையில்லாமல் அனைவர்க்கும் செய்தால் , தேவைப்படும் போது டெஸ்ட் கிட் இல்லைஎன்றால் என்ன செய்வது என அஞ்சி உள்ளது. அதிக அளவில் டெஸ்ட் செய்து முறையாக நோயாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்த வில்லை. தற்போது வரையிலும் அப்படியான முன்னெடுப்புகளைக் செய்யாததால் தான், அரசுக்கு இன்னும் 14 நாட்கள் முழு ஊரடங்கு தேவை என்று கருதுகிறது. இதை அரசின் குறைபாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. மேலும் அவர்களை சுயமாக Home Quarantine செய்யுங்கள் என்று கண்காணித்தது. ஆனால் அவர்கள் இதை முறையாக பின்பற்றி இருப்பார்களா என்ற சந்தேகத்தில்  தான் அரசிற்கு இத்தனை பயம்  உள்ளது. 
4. தமிழக அரசு முதல் நாள் மட்டுமே டெல்லி தப்லிகி ஜமாஅத்மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் மூலமாகவே தமிழகத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை ஊர் பெயர்களைச் சொல்லி (உ.ம்: மேலப்பாளையம் ) , அது போன்ற இடங்களில் 144 போட்டுள்ளோம். அங்குள்ளவர்கள் வெளியே செல்ல முடியாது என்று வெளிப்படையாகத் தெரிவித்தது. அதன் பிறகு Single source என்று சொன்னதோடு ஓட்டுக்காக பயந்து வெளிப்படைத்தன்மையை பேணவில்லை. மாநில அரசு வெளிப்படையாக கிராமங்கள் தொட்டு, நகரங்கள் வரை எந்தெந்த பகுதிகள் டெல்லி சென்றவர்களால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என்றும் , மற்றும் மற்ற நாடுகளில் இருந்து  பயணம் செய்தவர்கள் மூலமாகவும் அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் மூலமும் பரவியது என்ற இடங்களை(ஊர்களை) மக்களுக்கு நேரடியாக ஊடகத்தின் வாயிலாகத் தெரியப்படுத்தவில்லை. அந்தப் பகுதிகளை ஊர் வாரியாக, ஏரியா வாரியாக தெரு வாரியாக சொல்லி இருந்தால் அப்பகுதி மக்கள் மிக ஜாக்கிரதையாக செயல்பட உதவி இருக்கும். ஆனால் தமிழக அரசு இவற்றை அறிவிப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கார்னர் செய்கிறோம் என்று ஊடகங்கள் கட்டமைக்கின்றன என்பதற்கு அஞ்சி எதையும் வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து விட்டது. இதனால் தான் பொது மக்களுக்கே ஒரு பயம் உள்ளது. நம்மில் எத்தனை பேருக்கு பரவி இருக்குமோ என்று அச்சம் கொள்ள வைத்துள்ளது. 
5. மாநில அரசுகள் வாக்கு வங்கியை மனதில் வைத்தும் இதில் செயல்படலாம். அரசின் மீதான அதிருப்தியை குறைக்க இலவசமும், அரசின் கடுமையான உழைப்பையும் முன்வைத்து நற்பெயர் எடுக்க ஊரடங்கு உதவலாம் என நம்பியதால் கூட அனைத்து மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்து இருக்கலாம். இதில் ஒரு அரசியலும் உள்ளது. மத்திய அரசு போதுமான நிதியை போதுமான நேரத்தில் தந்து உதவவில்லை என்றும் எதிர்க்கட்சி மாநிலங்கள் , தங்களது அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்த இரண்டாவது முழு ஊரடங்கு உதவலாம்.
6. இந்தியா அதிக அளவில் டெஸ்ட் செய்தால் மட்டுமே ஊரடங்கின் மூலம் நோயாளிகள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் அதன் மூலம் சமூக பரவலாக்கத்தைத் தடுக்கவும் முடியும் . ஆனால் அப்படி 21 நாட்கள் முழு ஊரடங்கில் நடக்கவில்லை என்பதே மிகப்பெரிய குற்றச்சாட்டு. முழு ஊரடங்கு தேவை என்பவர்கள் இந்த மாத இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை குறையாமலும் Curve Flatten ஆகவில்லை என்றால், மே 1 க்குப் பிறகும் முழு ஊரடங்கு வேண்டுமென்று இதே தொனியில் பேசுவோம் என்று சொல்ல முடியுமா? ஊரடங்கில் பகுதியை விலக்கலாம் என்ற என் போன்றவர்களின் யோசனையை கண்டிக்கிறார்கள். ஆனால், எப்போது முழு ஊரடங்கு விலக்கப் பட வேண்டும் என்று சொல்ல முடியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அடுத்த 15 நாட்கள் முழு ஊரடங்கு போட்டால் கூட இந்தியாவில் தற்போதைய நோயின் பரவலாக்கம் குறைந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. 
  4. பொருளாதார சிக்கல்களும் அன்றாடங்காய்ச்சிகளின் நிலையும் ? 
1. இரண்டாவது முழு ஊரடங்கை நீட்டிப்பதை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் ஒரே விஷயம் உயிர்தான் முக்கியம் என்பதே !!! ஆனால் அவர்களுக்கு அரசின் பொருளாதார நிதியும், ரேஷன் பொருட்கள் மட்டுமே ஏழைகளுக்குப் போதுமானது என்று உறுதியாக சொல்ல முடியுமா என்றால் பதில் சொல்ல மாட்டார்கள். உயிர் என்று பேசும் போது அதற்கு ஒரு மதிப்பு இயல்பில் கூடி விடுகிறது. ஆனால் ஏழைகளின் நிலை எப்படி இருக்கும் என்பதையோ, வேலை வாய்ப்பின்மையையோ  பார்க்க மறந்து விடுகிறார்கள். அவர்கள் பகுதி ஊரடங்கு போதும் என்று சொல்பவர்கள் எலைட் வகுப்பினர் இப்படித்தான் பொருளாதாரத்தை மட்டுமே பார்ப்பார்கள், அவர்களுக்கும் நோயில் உயிர் இழப்பவர்கள் முக்கியமல்ல என்று  சொல்கிறார்கள். அதையே தான் பகுதி நேர ஊரடங்கை ஆதரிப்பவர்களும் சொல்கிறோம். எலைட் வகுப்பினர் ஏழைகளின் தேவையை கணக்கில் கொள்ளவில்லை. அவர்களுக்கு யார் பண உதவி கடனாகக் கொடுப்பார்கள் , அவர்களின் வாழ்வாதாரத்தை யார் உறுதி செய்துள்ளார்கள் என்று கேட்டால் வலிக்கிறது. அரசின் நிதி உதவி போதாது என்று அனைவரும் ஒத்துக் கொள்வார்களாம், ஆனால் முழு ஊரடங்கும் இருக்க வேண்டும் என்றும் வாதாடுவார்களாம். 

2. இரண்டாவது முழுஊரடங்கை நீடித்தால் பெரும்பாலான  தனியார் நிறுவனங்கள் கார்ப்பரேட் முதல் சிறு நிறுவனங்கள் வரை  ஏப்ரல் மாதத்தில் முழு சம்பளத்தைக் கொடுக்க மாட்டார்கள். பாதி சம்பளமாகக் குறையலாம். உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இங்குள்ள மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரசுகள் வெளிப்படையாகவே நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இப்படி சொல்லியுள்ளது. நம்புபவர்கள் நம்புங்கள். அவதூறு என எண்ணுபவர்கள் தாராளமாக விபரங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டினரை வேலைக்குத் தேவையில்லை என்றால் பணி நீக்கம் செய்து கொள்ளுங்கள் என்றும், உங்களால் கொடுக்க முடிந்த சம்பளத்தைத் தொழிலாளிகளுடன் பேசிப் புரிந்துணர்வின் அடிப்படையில் குறைத்துக் கொடுக்கலாம் என்றும், கம்பெனியின் முடிவை ஏற்காதவர்கள் தங்கள் நாடுகளுக்கே சென்று விடலாம் என்றும், வேறு வேலை கிடைத்தால் மாறிக் கொள்ளலாம் என்றும் சொல்லி விட்டது. சவுதிகளுக்கு மட்டும் அரசு உதவி செய்யும் என்று சொல்லிவிட்டது. தனியார் நிறுவனங்கள் மார்ச் மாதம் முழு சம்பளம் கொடுத்திருக்கும். ஏப்ரலில் எந்த வணிகமும் நடக்காத போது முழு நேர சேவைக்கம்பெனிகள், உற்பத்தி நிறுவனங்கள்  சம்பளம் எப்படி கொடுக்கும் என்பது முதலாளிகளைப் பொருத்து உள்ளது. 
3. ஆட்டோக்கள், தனியார் டாக்ஸிகள் ஓட்டிகளின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கும். அடுத்து கட்டடத் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை இருக்கக்கூடும். இந்தியா 65% சேவைத் துறையைச் சார்ந்து இயங்குகிறது என சொல்வது உணமையானால், அதில் 35% Field work செய்பவர்களாகத் தான் இருக்கும். அவர்களின் வாழ்வாதாரம் இன்று மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. மே 1 அன்றே முழு விலக்கை அரசால் எடுக்க இயலாது என்பதே இரண்டாவது முழு ஊரடங்கு நீட்டிப்பு சொல்ல வரும் செய்தி. மே 1 குப் பிறகும் பகுதி நேர ஊரடங்கு அமலில் வர வாய்ப்புள்ளது. ஆகையால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைகிறதோ இல்லையோ, அன்றாடங்காய்ச்சிகளின் நிலையும், வேலை வாய்ப்பின்மையும் பெருகும். எதிர்காலத்தில் சம்பளக்குறைப்பு கூட நடக்க வாய்ப்பு உள்ளது.  புதிய projects எடுப்பதில் கடும் போட்டிகள் உருவாகும், அது தொழிலாளிகளின் சம்பளத்தில் கைவைக்கும் செயலாகவே இருக்கும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களை விலக்கிவிட்டு புதியவர்களைப் பணிஇடங்களில் அமர்த்தி ப்ராஜெக்ட் செய்யலாம் என்ற முடிவுக்கே நிறுவனங்கள் வரும்.
4. பல நிறுவனங்கள் Forced vacation கொடுத்து சம்பளப்பிடிப்பை அறிவித்து விட்டன.
5. தற்போது இந்தியாவில் முழு ஊரடங்கு இருப்பதால் செலவீனங்களுக்கான பொருளாதாரம் உள்ளது. அதுவே முன்பை விடக் குறைந்திருக்கும். இப்போது நீடித்தால் வரவும் இருக்காது, செலவு மட்டுமே செய்ய வேண்டும் என்று வரும்போது, இன்னமும் பொருளாதார சிக்கல்களை இந்தியா எதிர்கொள்ளும்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் பகுதி நேர ஊரடங்கை முன்வைக்கிறோமே ஒழிய , மக்கள் உயிர் போனால் போகிறது என்ற அக்கறை இல்லாமல் அல்ல! ஒரு விஷயத்தைமீண்டும்  மனதில் கொள்ளுங்கள். யாரும் ஊரடங்கை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக எப்படி செய்தால் , கொரோனாவை சமப்படுத்தி எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் முன்வைக்கிறோம். ஆகையால் உயிர்களுக்கு எதிரானவர்கள் மாற்று சிந்தனையை முன்வைப்பவர்கள் என்ற கருத்துருவாக்கம் செய்வதை முதலில் விடுங்கள். அதைப் போலவே மாற்றுத் தரப்பினரும் ஏழைகள் உயிர் இழப்பார்கள் என்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்.

(Visited 268 times, 1 visits today)
Tags

One Comment

  1. ஏற்கெனவே யோசித்து மண்டை காய்ந்து போகும் விஷயம். ்்்்்்்்்கொரோனாவை விட பயமுறுத்தும் விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close