தியாகி கர்தார் சிங் சரபா – மே 24
பாரத நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி தன் பத்தொன்பதாம் வயதிலேயே தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீரன் கர்தார் சிங் சரபாவின் பிறந்ததினம் இன்று.
பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருந்து சீக்கிய வீரர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம் என்பது வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஓன்று. கதர் கட்சி என்று உருவான புரட்சி இயக்கமும் அதில் இணைந்து தங்களை ஆகுதியாகிய வீரர்களும் இன்று மக்களிடம் மறைக்கப்பட்டது நமது துரதிஷ்டமே. அந்த வீரர்களில் முக்கியமானவர் கர்தார் சிங்.
1896ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் லூதியான மாவட்டத்தில் உள்ள சரபா என்ற கிராமத்தில் ஜாட் வகுப்பைச் சார்ந்த சீக்கியரான மங்கள்சிங் – சாஹிப் கௌர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் கர்தார் சிங். சிறு வயதிலேயே தந்தையை இழந்த கர்தார் சிங்கை அவரது தாத்தாதான் வளர்த்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை லூதியானாவிலும் பின்னர் ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரிலும் முடித்த கர்தார் சிங், பட்டப்படிப்பு படிக்க 1912ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். ஆங்கில அரசின் வரைமுறை அற்ற வரிவசூலால் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் அப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் குடியேறிக்கொண்டு இருந்தனர். தாய்நாட்டின் அவலநிலையைக் கண்டு கொதித்த தேசபக்தர்கள் அங்கங்கே கூடி இந்த தாழ்வுநிலையை மாற்றுவது பற்றியும், ஆங்கில அரசை தூக்கி எறிவது பற்றியும் சிந்தித்துக் கொண்டு இருந்தனர்.
தேசபக்தர்கள் இணைந்து கதர் கட்சி என்ற புரட்சி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். சோஹன்சிங், லாலா ஹர்தயாள் ஆகியோர் இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக இருந்தனர். இரும்பைக் காந்தம் ஈர்ப்பது போல, கர்தார் சிங்கை லாலா ஹர்தயாள் ஈர்த்தார். ஹிந்தி உருது பஞ்சாபி குஜராத்தி குர்முகி ஆகிய மொழிகளில் கதர் என்ற பெயரில் பத்திரிகையை சின்ஹட்ட புரட்சி இயக்கம் வெளியிட்டுக்கொண்டு இருந்தது. அந்தப் பத்திரிகையில் கட்டுரைகள் கவிதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி கர்தார் சிங் சுதந்திர வேட்கையைத் தூண்டிக்கொண்டு இருந்தார். வெளிநாடுகளில் வாழும் பாரதியர்களிடம் ஆங்கில அரசின் கொடுமையை கொண்டு செல்லும் பணியை கதர் பத்திரிகை செய்து கொண்டு இருந்தது.
1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் கதர் கட்சி முறைப்படி ஆங்கில ஆட்சி மீது போர் தொடுக்கிறோம் என்று அறிவித்தது. பாரத நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரர்களிடம் இந்த செய்தி பரப்பப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கர்தார் சிங் உள்பட பல்வேறு வீரர்கள் பாரத நாட்டுக்கு திரும்பினார். கல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த கர்தார் சிங் அங்கே ஜுகாந்தர் இயக்கத்தின் தலைவரான ஜதின் முகர்ஜியின் அறிமுகக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வாரணாசி சென்று ராஷ்பிஹாரிபோஸை சந்தித்தார். போராட்டத்தை முன்னெடுக்க அரசு கருவூலங்களையும், பணக்காரர்களையும் கொள்ளை அடிப்பது என்றும் பெராஸ்பூர் நகரில் ஊழல் ராணுவ பாசறையைக் கைப்பற்றி ஆயத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் புரட்சியாளர்களின் ஊடே நுழைந்த துரோகி ஒருவனால் இந்த செய்திகள் ஆங்கில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கை தொடங்கியது. பல்வேறு வீரர்கள் தப்பியோடினார். பலர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தப்பினார்கள். ஆனால் தனது தோழர்கள் சிறையில் வாடும்போது தலைமறைவாக இருக்க கர்தார் சிங் தயாராக இல்லை. எனவே அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானிலில் இருந்து பாரதம் திரும்பினார். மீண்டும் ராணுவ வீரர்களை புரட்சியில் ஈடுபடுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்த காலகட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
கதர் கட்சியைச் சார்ந்த 17 வீரர்களுக்கு மரண தண்டனையும், மேலும் பலருக்கு பல்வேறு தண்டனைகளும் அளிக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் தனது பத்தொன்பதாம் வயதில் தூக்குமேடையில் பாரத தேவியின் காலடியில் தனது உயிரை ஆகுதியாகினார் அந்த வீரர்.
இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பது கர்தார் சிங் போன்ற பல்வேறு தியாகிகளின் வீரத்தால், தியாகத்தால் நமக்கு அளிக்கப்பட்டது என்பதை நாம் என்றும் நினைவில் வைக்கவேண்டும்.