மெட்ரோ ரயில் நாயகன் ஸ்ரீதரன் – ஜூலை 12.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது தரமான போக்குவரத்து வசதிதான். பாரதநாட்டின் ரயில்வே துறையில் பல சாதனைகளைப் புரிந்த ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள கருகாபுத்தூர் என்ற கிராமத்தில் நீலகண்டன் – அமலு அம்மா தம்பதியரின் மகனாக 1932ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் நாள் பிறந்தவர் ஸ்ரீதரன். தனது ஆரம்பக் கல்வியை பாலக்காடு பகுதியில் படித்த ஸ்ரீதரன் ஆந்திரப்பிரதேசம் காக்கிநாடாவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்தார். பாரத நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த டி என் சேஷன் இவரோடு பள்ளியில் சேர்ந்து படித்தவர்.
பொறியியல் படிப்பை முடித்த பிறகு ஸ்ரீதரன் சிறிது காலம் ஆசிரியராகவும் பின்னர் மும்பை துறைமுக பொறுப்புக் கழகத்திலும் பணியாற்றினார். பின்னர் 1953ஆம் ஆண்டு இந்திய அரசுப் பணித் தேர்வில் வெற்றி பெற்று பொறியாளர் பணியில் சேர்ந்தார். இந்திய ரயில்வே துறையில் இவரை பணியாற்றுமாறு அரசு ஆணை பிறப்பித்தது. 1964ஆம் ஆண்டு ஸ்ரீதரன் தென்னக ரயில்வேயின் துணை பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயலால் ராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளோடு இணைத்த பாம்பன் பாலம் முற்றிலும் சேதமானது. மூன்று மாதங்களில் அந்தப் பாலத்தை மீளுருவாக்கம் செய்யுமாறு ஸ்ரீதரன் பணிக்கப்பட்டனர். நாற்பத்தி ஆறே நாட்களில் ஸ்ரீதரன் அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தார். இந்த சாதனையைப் பாராட்டி ரயில்வே துறையின் அமைச்சர் அளிக்கும் சிறப்பு அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.
1970ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பொறுப்பாளராக அரசு ஸ்ரீதரனை நியமித்தது. குறிப்பிட்ட கால அளவில், அளிக்கப்பட்ட பணத்திற்கு உள்ளாகவே ஸ்ரீதரன் அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தார். 1979ஆம் ஆண்டு கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்ரீதரன், 1981ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் முதல் கப்பலான ராணி பத்மினி என்ற கப்பலை வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டார்.
1990 ஜூன் மாதம் அரசுப் பணியிலிருந்து ஸ்ரீதரன் ஓய்வு பெற்றார். ஆனால் அவரது சேவை நாட்டுக்குத் தேவை என்று அரசு முடிவு செய்தது. அன்றய ரயில்வேதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ் ஸ்ரீதரனை கொங்கன் ரயில்வேயின் நிர்வாக இயக்குனராக நியமித்தார். பாரத நாட்டின் மேற்குக் கடற்கரையோரமாக கர்நாடகாவில் இருந்து மஹாராஷ்டிரா வரை செல்லும் சவாலான அந்தப் பொறுப்பை ஸ்ரீதரன் திறம்பட நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து டெல்லி, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர், விஜயவாடா, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ சேவைகளில் நேரடியாகவோ அல்லது ஆலோசகராகவோ ஸ்ரீதரன் பணிபுரிந்தார்.
ஸ்ரீதரனின் சேவைகளைப் பாராட்டி பாரத அரசு அவருக்கு 2001ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், பின்னர் 2008ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதையும் அளித்து சிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் ஸ்ரீதரனுக்கு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கி உள்ளன.
ஊழலின் கரை படியாத ஸ்ரீதரனின் வாழ்க்கை பாரத நாட்டு இளைஞர்களுக்கு ஒரு பாடமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.