பாஜக 2021 தேர்தலில் என்ன செய்ய வேண்டும்?
அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுகவே முன்வந்து அறிவித்துள்ளது. பாஜகவும் கூட்டணி உள்ளது என்ற கருத்தைச் சொல்லி வருகிறது. பாஜக கட்சிக்காரர்கள் பாஜக தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறதோ அதை நடைமுறைப் படுத்த முயன்ற அளவுக்கு முயல்வார்கள். இந்தக் கட்டுரை 2021 சட்டசபைத் தேர்தலில் பாஜக என்ன மாதிரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதில் பாஜக ஆதரவாளர்களுக்கு பல கருத்துகள் உள்ளன. அதன் ஒவ்வொரு அம்சத்தையும் முதலில் எடுத்து வைக்கிறேன். பின்னர் அதில் எனது கருத்து என்ன என்பதையும் சொல்கிறேன்.
- அதிமுக –பாஜக கூட்டணி, 2019தேர்தலில் இருந்த கட்சிகளைக் கொண்ட கூட்டணியுடன் தேர்தலைச் சந்திப்பது.
- திமுகவை எக்காரணம் கொண்டு ஆட்சியில் அமராமல் பார்க்கும் வேலையை பாஜக செய்ய வேண்டும்.
- ரஜினியின் வருகையைப் பொறுத்து
- பாஜக தனித்து நின்று கட்சியை வளர்க்க வேண்டும்.
- அதிமுக-பாஜக கூட்டணி :
பாஜக அதிமுகவுடன் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்வதால் பாஜகவிற்கு பெரிதாக பலன் இல்லை என்பது எனது கருத்து. இரண்டாவதாக பல பிரச்சினைகளில் இரு கட்சிகளுமே தங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் அன்றாட அரசியலில் சண்டை போட்டுக் கொண்டே கூட்டணி வைப்பதால் இரு கட்சிகளுக்கும் பலன் கிடைக்காது என்பது எனது ஆழமான எண்ணம். பாஜக உண்மையில் செய்ய வேண்டியது அதிமுகவை எந்தக் கட்சியும் மதிக்காமல் கூட்டணி வைக்க விடாமல் செய்யும் அரசியலைச் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிமுகவை வளர விடாமல் தடுக்க அதிமுகவை பலவீனமான கட்சியாக ஆக்க வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே கூடாது. அதிமுக எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் வகையிலான அரசியல் கணக்குகளை பாஜக முன்னெடுக்க வேண்டும். அது முடியாது என்பவர்களுக்கு என்னுடைய ஒரே பதில், 2014 லோக்சபா தேர்தலில் திமுகவை முட்டை இடங்களுக்குத் தள்ள வைக்கும் அரசியலையும் கூட்டணியையும் அமைக்கச் செய்து பாஜக ஏற்கனவே சாதித்துக் காட்டியுள்ளது என்பது மட்டுமே. அதிமுக தினகரனை அரசியல் அரங்கில் பெரிய ஆளுமை கிடையாது என்பதை 2019 தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து செய்தும் காட்டிவிட்டது. அதையே அதிமுகவுக்கு பாஜக செய்து காட்ட வேண்டும்.
- திமுக எக்காரணம் கொண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது :
திமுக மட்டும் ஆட்சிக் கட்டிலுக்கு வந்துவிடக் கூடாது என்ற பாஜக ஆதரவாளர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடுள்ளது. ஆனால் அதை மீறி அரசியல் ரீதியாகவும் இதை நாம் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டுமானால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து எத்தனை வலுவான கூட்டணியை அமைத்தாலும் அது எடுபடப்போவதில்லை. ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று பலர் சொல்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அப்படியான வெற்றியை இந்த இரட்டைத் தலைமையால் வெல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க ஆட்சிக்கு எதிரான மனநிலை சாமானியர்கள் மத்தியில் இயல்பாக வரும். திமுக ஆட்சிக்கு வந்தால் கூட எந்த விஷயத்திலும் மத்திய அரசை எதிர்த்தெல்லாம் ஜெயலலிதா போல பத்தில் ஒரு பங்கு அரசியலைக் கூட திமுக பண்ணியதில்லை என்பதே வரலாறு. எதிர்க் கட்சியாக இருக்கும் போது பிரிவினையையும் ஆளும் கட்சியாக இருக்கும் போது தேசிய அரசியலுடன் இணைந்து செல்லும் அரசியலைத் தான் 96 -2013 வரை (except 1998-99 ) தவிர அனைத்துக் காலக் கட்டத்திலும் மத்திய அரசுடன் அங்கம் வகித்து மத்திய அரசின் அத்தனை செயல்திட்டத்தையும் செயல்படுத்தவும் கையெழுத்திடவும் செய்தது திமுக என்பதே வரலாறு. மேலும் திமுகவை அழிப்பது என்பது பாஜகவால் இப்போதைக்கு செய்ய இயலாது. அதிமுகவை கரையச் செய்து திமுக Vs பாஜக என களத்தை அமைக்கும் முயற்சிக்கான அரசியலில் பாஜக ஈடுபட வேண்டும். திமுகவிற்கும் பாஜகவைப் போலவே சித்தாந்த ரீதியாக ஆதரவு கொடுக்கும் ஆட்கள் அனைத்துத் துறையிலும் உள்ளனர் என்பதும், ஸ்டாலின் தலைமையில் கட்சி உடையாது என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள். திமுக வரக்கூடாது என அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அதிமுக Vs திமுக என்ற அரசியல் நடப்பதற்கு பாஜகவே வழிவகை செய்ததாகவே அமையும். நான்காண்டுகள் ஆட்சியை நிம்மதியாக செய்ய விட்ட போதே எடப்பாடி பாஜகவிற்கு தண்ணீர் காட்டுகிறார். மீண்டும் ஒருமுறை தனக்கான வாக்குகள் விழுந்து முதல்வர் என்றானால் மோடியல்ல… எவரையும் மதிக்க மாட்டார்.பலவீனமான இந்த காலக்கட்டத்திலேயே மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்க்கும் விஷயங்களை எடப்பாடி செய்கிறார் என்பதை பாஜகவினர் கவனிக்க வேண்டும். ஆகையால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுகவை ஆட்சியில் அமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டால் சுத்தமாக பாஜக வளராது என்பது எனது கருத்து. திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் கூட சித்தாந்த அரசியலை முன்வைத்து பாஜக வளரும் வாய்ப்புகள் ஏற்படும் என்பதே எனது எண்ணம்.
- ரஜினியின் அரசியல் வருகையைப் பொறுத்து :
ரஜினி அரசியலுக்கு வரும் பட்சத்தில் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறும். தேர்தல் நிச்சயமாக ரஜினியை மையமாகக் கொண்டு மாறிவிடும். இன்று ஸ்டாலினின் தலைமையை ஏற்கும் கட்சிகள் பேர வலிமையை ரஜினியைக் காட்டி செய்யும். தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி எப்படியெல்லாம் மாறும் என்று எவராலும் சொல்ல முடியாத அளவுக்கு பல காட்சிகள் நடக்கும் என்று அனுமானிக்கிறேன். ரஜினி வரும் பட்சத்தில் அமையும் கூட்டணிக்குப் பிறகு ரஜினியா ஸ்டாலினா என்பதாகவே அரசியல் களம் இருக்கும். இதில் பாஜகவை கூட்டணியில் ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற இடத்தில் ரஜினியே இருப்பார். ரஜினி விஷயத்தில் பாஜக செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் தடுக்க வேண்டுமென்றால் ரஜினி என்ற ஒற்றை ஆயுதத்தால் மட்டுமே முடியும் என்பதை பாஜக உணர்ந்து கொண்டு அதற்கேற்ப அரசியல் களத்தை அமைக்க முன்வர வேண்டும்.
- பாஜக தனித்து நிற்பது :
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால், ரஜினியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வலுவான அணியை அமைத்து ரஜினியை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டு வரும் வேலையைச் செய்வது. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் , பாஜக எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்காமல் இருக்க வேண்டும். அதிமுக திமுகவிற்கு எதிராக தனித்து நின்று 2021 தேர்தலில் வாக்கு சதவீதத்தை குறைந்த பட்சம் 8% க்கும் மேலாக கொண்டு வரப் பாடுபடவேண்டும். பாஜக எப்படியும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வரப் போவதில்லை. திமுக வந்துவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவை ஆதரிப்பது என்பது தமிழகத்தில் பாஜக தனக்குத் தானே குழி தோண்டும் விஷயம். திமுகவே ஆட்சிக்கு வந்தால் கூட பாஜக தனித்து நின்று 8% க்கும் அதிகமான வாக்குகளை எடுத்தால் மாநில கட்சிகளே 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போட்டி போடும். அப்போது மாநில கட்சிகளுடன் சேர்ந்து அதிக இடங்களைப் பெறுவதே இலக்காக இருக்க வேண்டும். அதுவே பாஜக தமிழகத்தில் காலூன்றவும் திராவிட அரசியலை முன்னெடுக்கும் ஒரு கட்சியையாவாவது மைனர் பார்ட்னராக்க உதவும். எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் கூட்டணியல்லாத, அரசியலை 2021 தேர்தலுக்குச் செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.