சிறப்புக் கட்டுரைகள்சினிமாசெய்திகள்

“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும்

இந்திய வெறுப்பும், ஹிந்து வெறுப்பும் எப்படி தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கிறது என்பதை நாம் தற்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களிலும் பார்க்கலாம். இப்போது வெளியாகியிருக்கிறது இன்னுமொரு உதாரணம். ஆனந்தவிகடனின் நிலைய வித்வானும் ஆஸ்தான எழுத்தாளருமான ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஜிப்ஸி திரைப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது.

“வெரி வெரி ” என்று சரியாகவே அந்தப் பாடலை எழுதி இருக்கிறார் யுக பாரதி. பாடல் என்ற பெயரில் வாயில் வந்ததையெல்லாம் வசனமாக்கும் பாட்டும் வெரி வெரி பேட் என்பதாகவே இருக்கிறது. தோழர் சந்தோஷ் நாராயணனாக இசையமைப்பாளர் பதவி உயர்வு பெற்று ஜோதியில் கலந்திருக்கிறார். நல்லகண்ணு வருகிறார். ப்யூஷ் மனுஷ், திருமுருகன் காந்தி எனப் பல தோழர்கள் கருப்புச் சட்டையில் பாடலில் உலா வருகிறார்கள். அம்பேத்கர், ஈவெரா, பிராபகரன், சே குவெரா, மார்க்ஸ் எனப் பலரின் படங்கள்.

 

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தால் கைது, சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்த்தால் கைது என்பதுடன் மெல்ல தீண்டாமையை எதிர்த்தால் கைது என்று சேர்க்கிறார்கள். எப்படி இவர்கள் நஞ்சைப் பரப்புவார்கள் என்பதற்கு இது லட்சத்தி ஓராவது எடுத்துக்காட்டு. இப்பாடலை எல்லா ஆண்ட்டி இந்தியர்களுக்கும் டெடிகேட் செய்திருக்கிறார்கள்.

தனது படங்களில் எல்லாம் ஹிந்துச் சின்னங்களைக் காட்டிக்கொண்டிருந்த ரஜினியையே இவர்கள் ஏப்பம் விட்டுவிட்டார்கள். இவர்களது எப்போதைக்கும் எப்போதுமான இலக்கு ஹிந்து மதத்தையும் இந்தியாவையும் சின்னாபின்னம் ஆக்குவதே. அதற்கு சினிமா என்னும் ஊடகம் மிகவும் தேவை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். சினிமாவால்தான் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் பிடித்தது. அதே சினிமாவால் இவர்கள் பிடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இது அத்தனை எளிதாக நடக்காது என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம் இவர்களால் சில கருத்துகளை மிகத் தீவிரமாக, வெற்றிகரமாகப் பரப்பமுடியும்.

தமிழ்நாட்டில் இதை எதிர்கொள்ளவேண்டிய தரப்போ இருக்கும் இடம் தெரியாமல், மிக பலகீனப்பட்டு கிடக்கிறது. பெரிய சவால் நம்முன்னே நிற்கிறது. சமீபத்தில் புதிய அலை இயக்குநர்களாக அறியப்படுபவர்கள் அத்தனை பேரும், இந்த தீவிர ஹிந்து எதிர்ப்பு அலையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். தலித்திய ஆதரவு, கம்யூனிஸ ஆதரவு, திராவிட ஆதரவு என்று விதம்விதமாக வந்தாலும் இவர்களது அத்தனை பேரின் ஒரே நோக்கமும் ஹிந்து எதிர்ப்பாகவே உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது தீவிரம் பெற்றுள்ளது – கலை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும். இதை எதிர்கொள்வது அத்தனை எளிதானல்ல. சினிமா என்றாலே இடது கையால் ஒதுக்கும் எண்ணத்தை ஹிந்து ஆதரவாளர்களும் அறிவு ஜீவிகளும் கைவிடாதவரை நாம் இழக்கப்போவது அதிகம்தான்.

தோழர் தோழர் என்பவர்கள் உலக அளவில் கம்யூனிஸம் செய்திருக்கும் படுகொலைகளைப் பற்றியோ, மாவோயிஸ்ட்டுகள் இந்தியாவில் நிகழ்த்திய நிகழ்த்திக்கொண்டிருக்கும் மனிதக் கொலைகள் பற்றியோ பேசமாட்டார்கள். இவர்களது உண்மையான நோக்கம் இந்திய எதிர்ப்பு மட்டுமே. இவர்கள் நடுநிலை என்ற பட்டமும் பெற்றுக்கொண்டு அதையும் வைத்துக்கொண்டு முடிந்த அளவுக்கு இந்திய வெறுப்பைப் பரப்புவார்கள்.

பாடலின் இறுதியில் ‘இப்பாடலை எல்லா ஆண்ட்டி இந்தியர்களுக்கு டெடிகேட் செய்திருக்கிறார்கள்’ என்பது அரசியல் எதிர்நிலை அல்ல. உண்மையாகவே அது இந்திய வெறுப்பின் அடையாளம்தான்.

 

(Visited 1,819 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close