தமிழகக் கட்சிகளின் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை – பகுதி 1 -நாஞ்சில் அரவிந்தன்
நமது ஒரே இந்தியா தளத்திற்காக நாஞ்சில் அரவிந்தன் எழுதிய சிறப்பு கட்டுரை
தமிழகக் கட்சிகளின் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை – பகுதி 1
சம்பவங்கள் யாவும் இந்த நிமிடம் வரை கற்பனையே. இவை வருங்காலத்தில் உண்மையாக நடந்தேறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை
2019. பிப்ரவரி அல்லது மார்ச் மாதம்… ஏதோ ஒரு அபமுகூர்த்த பெரியார் தினம்.
இடம் : அண்ணா அறிவாலயம்.
பொருள் : பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை
பங்கேற்போர் : திமுக தலைவர்கள் திருவாளர்கள் முக ஸ்டாலின், துரைமுருகன், ஆர்எஸ் பாரதி மற்றும் சிலர், திருவாளர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் சிலர்.
கருப்புத் துண்டை இழுத்து விட்டபடி வைகோ, வேகமாக அறைக் கதவைத் திறந்து உள் நுழைய, பின்னால் பயபவ்யத்துடன் வருகிறார்கள் திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர்….
துரைமுருகன், தன்னுடைய ட்ரேட்மார்க் ரியாக்ஷனோடு அவர்களைப் பார்க்க, ஆட்டோமேடிக் அறைக் கதவு மீண்டும் திறக்கிறது….
யாருய்யா இது என்றபடி, அறையிலிருந்தவர்கள் வாசலைப் பார்க்க, முப்பெருந் தேவர்கள் போல் உள்நுழைகிறார்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர்….
எப்பா தம்பிங்களா… நீங்க போய்ட்டு 2021 மார்ச் மாசம் கூப்பிடுவோம்… அப்போ வாங்க… இது பார்லிமென்ட் எலக்ஷன்… அதனால, நீங்க வெளில இருந்தே ஆதரவு குடுத்தா போதும் என்றபடி,
தம்பி… இவங்களுக்கு காஃபி குடுத்து அனுப்புப்பா என்று வாசல் நோக்கி குரல் கொடுக்கிறார் துரைமுருகன்….
நம்மள அவமானப்படுத்திட்டாங்க… வாங்க, நாம டிடிவி அண்ணனைப் பார்க்கப் போகலாம் என்று கருணாஸ் சொல்ல, குழப்பத்தோடே அந்த அறையை விட்டு வெளியில் செல்கிறார்கள் தனி மூவர்….
அப்புறம் வைகோ… கட்சி எல்லாம் எப்டி போகுது என்று திரும்பிய துரைமுருகன் அதிர்ச்சியடைந்தார்….
அவருக்கு முன்னால், திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் மட்டும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, வைகோவின் இருக்கை காலியாக இருந்தது….
குழப்பத்துடன் திரும்பி ஸ்டாலினைப் பார்க்க, ஸ்டாலின், அங்கே பாருங்கண்ணே என் பாவனையில் தலையை அசைக்க, அங்கே, அறையில் இருக்கும் தலைவர் கலைஞரின் ஆளுயர புகைப்படம் முன்பு, வைகோ நெடுஞ்சாண்கிடையாக படுத்திருந்தார்.
ங்ஙே என்ற பார்வையில், துரைமுருகன் மறுபடியும் ஸ்டாலின் பக்கம் திரும்ப, இதுக்குதான்ணே உங்களையே கூட்டணி பத்தி பேசச் சொன்னேன் என்று மெதுவாக அவர் காதில் கிசுகிசுத்தார் ஸ்டாலின்.
யோவ் வைகோ…. போதும் வாய்யா இந்தப் பக்கம் என்று துரைமுருகன் உரக்கக் குரல் கொடுக்க,
அப்பாடா… நல்லவேளை பார்த்தாங்க என்றபடி, கீழே கிடந்த கருப்புத் துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார் வைகோ.
தலைவர்கிட்ட, தம்பி தளபதியை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்று சபதம் எடுத்தேன் என்றபடி, இருக்கையில் வைகோ அமர, அது போன வருசம்… தம்பியை துணைப் பிரதமர் ஆக்குறதுதான் இந்த வருசம் என்று கடுகடுத்தார் துரைமுருகன்.
வைகோ அதிர்ச்சியாகி, இந்தப் பக்கம் திரும்ப, முத்தரசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம், வெறும் பிஸ்கட் மட்டும் வெச்சிருக்கீங்க… ஸ்வீட் எதுவும் இல்லையா? என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.
– தொடரும்